தாலிபான் பின்னணியானது கதைக்களனின் ஒருபகுதியாக இருக்கும் நாவல்களில் நான் படித்த இரண்டாவது நாவல்.
முதலாவது ஃப்ரெட்டிக் ஃபோர்சித்தின் த ஆஃப்கன், இரண்டாவது இது, காலித் ஹொஸைனியின் த கைட் ரன்னர். த கைட் ரன்னரை வாங்கி வரும்போதே இதுவும் காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ், ரூட்ஸ், ப்ரெத்ரன் போல பாதி படிக்கப்பட்டு மீதி முடிக்கப்படாமல் அலமாரியில் தூசிக்கு நடுவில் உறங்கப் போகிறதோ என்றே நினைத்தேன். நல்லவேளையாக அப்படி ஏதும் நிகழவில்லை, படித்து முடித்தாயிற்று.
ரஷிய ராணுவ ஆக்கிரமிப்பு (அல்லது வரத்து), புரட்சி, தாலிபான் இவற்றுக்கு முந்தைய காபூலில் கதை துவங்குகிறது. முந்தைய காபூலில் துவங்கி, ரஷிய ராணுவம், தாலிபான் வழியாக கதை நகர்ந்து தாலிபானின் ஆக்கிரமிப்பில் ஆஃப்கான் இருக்கும் காலகட்டத்தில் கதை முடிகின்றது. இந்நாவலில் சொல்லப்படும் தாலிபானின் உதயம், வளர்ச்சி குறித்த விவரணங்கள், பின்னணி இவற்றை ஃப்ரெட்ரிக்கின் ஆஃப்கானை அளவுகோலாகக் கொண்டு அணுகக்கூடாதென்ற முன் முடிவுடன் வாசித்த்ததால், ஒப்பீட்டுச் சிந்தனையில் ஆழாமல் கதையை ரசிக்க முடிந்தது.
பணக்கார பஷ்த்தூனிய முதலாளியின் மகனுக்கும் அவர்களுடைய வேலைக்காரரின் மகனுக்கும் இடையேயான நட்பும் எஜமான விசுவாசமும் கலந்த உறவை மையமாகக் கொண்ட கதை.
அமீர் - கதையின் நாயகன்
ஹஸன் - அமீரின் நண்பன், வேலைக்காரன்
பாபா - அமீரின் அப்பா
ஆசிஃப் - வில்லன்
சுரையா - அமீரின் மனைவி
சொஹ்ரப் - ஹஸனின் மகன்
ரஹீம் கான் - பாபாவின் நண்பர்
இவர்களுக்கிடையே ஊடாடும் அம்மா, அப்பா, மனைவி, வந்துபோகும் நண்பர்கள் இப்படியாகப் பலருண்டு. என்னுடைய ரசிப்புத் தன்மையின்படி இந்தப் பாத்திரங்கள் கதையின் தவிர்க்க இயலாத பாத்திரங்கள்.
2001, டிசம்பர் மாத்தில் ரஹீம்கான் அமீரை தொலைபேசியில் அழைக்கிறார். கிட்டத்தட்ட மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் வயோதிகரின் அழைப்பு.
அழைப்பைக் கேட்டதும் அமீரின் நினைவலைகள் அவனை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. ரஷியாவும், தாலிபானும் நுழைந்திராத காபூல். பணமும், புகழும், சமூக அந்தஸ்துமாக வாழும் பாபா. அவரது முரட்டுத்தனமான செல்லத்தில் வளர்கின்ற, அதே சமயத்தில் பஷ்தூனிய சிறுவனிடம் எதிர்பார்க்கப்படும் வீரக்குணம் இல்லாததால் பாபாவிற்கு ஏமாற்றத்தை அளிக்கின்ற மகன், அமீர். தனது அந்தஸ்த்திற்கு ஏற்ப பணக்காரச் சிறுவர்களோடு நட்பை அமைத்துக்கொள்ளாமல், தங்கள் வீட்டு வேலைக்காரரின் மகனான ஹஸனுடன் அமீருக்கு இறுக்கமான நட்பு உண்டாகின்றது.
தோட்டத்திற்குச் சென்று ஷாநாமாவையும் சிறுசிறு கதைகளையும் ஹஸனுக்கு படித்துக்காட்டுவதில் அமீருக்கு மிகவும் விருப்பம். ஹஸனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும், கவனக் கூர்மையும் ரசிப்புத் தன்மையும் அவனிடம் இயல்பாகவே அமைந்திருந்தது. ஹஸனுடைய எழுதப் படிக்கத் தெரியாத இயலாமையால் சில நேரங்களில், அமீர், புத்தகத்தில் இருக்கும் கதையை மாற்றிச் சொல்வதுண்டு. ஒரு நாள், கதை படிப்பதான பாவனையில் அமீர் தனது மனதில் தோன்றிய கதையை ஹஸனுக்குச் சொல்ல, கதை முடிந்ததும் ஹஸன், 'இதுவரையில் நீ படித்த கதைகளிலேயே மிகவும் அற்புதமானது இதுதான்' என்கிறான். தனக்குள் ஒரு எழுத்தாளன் இருப்பதை அமீர் உணர்கின்றான். பாபாவின் நண்பர் ரஹீம்கான் அமீருக்கு அழகான நோட்டுப்புத்தகம் வாங்கித்தந்து அவனது எழுத்தாற்றலை ஊக்குவிக்கிறார்.
தெருவில் நடக்கும் சிறுவர்கள் சண்டையில் ஆசிஃப் அமீரைத் தாக்க முற்படுகின்றான். அப்பொழுது, ஹஸனின் கவட்டை வில் இழுக்கப்பட்டு ஆசிஃபை நோக்கி குறிபார்க்கபடுகின்றது. ஆசிஃபின் குத்து அமீரின் மேல் விழுமானால் ஆசிஃபின் கண்ணின் மேல் கல் வீசப்படும் என தீர்மானமாக ஹஸன் உறுமுகின்றான். ஹஸனின் கவட்டை வில் வீச்சுத் திறனை அறிந்த ஆசிஃப் இது சரியான சமயமல்ல என விட்டுச் செல்கிறான். இதற்கு என்றேனும் ஹஸன் பதில் சொல்லியாகவேண்டும் என வஞ்சம் கொள்கிறான்.
தொடரும்...
Comments
இந்த லிஸ்டில் ரூட்ஸ்?! ஆச்சரியமா இருக்கே. நல்ல (உண்மைக்) கதையாச்சே!
பாதி படிச்ச ரூட்ஸ் அப்படியே நிக்கிது. இப்ப தொடவும் சோம்பலா இருக்கும்.
உங்க பின்னூட்டிற்கு நன்றிகள்.
அன்புடன்
ஆசாத்
கைட் ரன்னரை இந்த மாத இறுதி விடுமுறையில் துவங்க உள்ளேன். அதை சீக்கிரமே துவங்கத்தூண்டிய உங்களுக்கு நன்றி.