Skip to main content

பேநசீர் - கோவையற்ற எண்ணங்கள் நான்கு

1/4
எங்கோ, என்றோ கேள்விப்பட்டு நினைவில் தங்கிவிட்ட அந்நிகழ்வினை இப்போது இணையத்தில் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. குமுதத்தின் மனம் திறந்த கடிதத்தில் படித்ததா? ஆறரை ஆண்டுக்காலமாக துபாயில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பா.ம.க. (பாகிஸ்தான் மக்கள் கட்சி - PPP) அனுதாபி சொன்னதா? நட்பாக இருந்த கராச்சிவாலா? ஜித்தாவில் அறிமுகமான மொஹாஜிர்? எப்படி இந்தச் செய்தி நினைவில் ஊறியதென நினைவில்லை. பாகிஸ்தான் குறித்த சில செய்திகள் மறந்து போவதில்லை. என்றோ இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் படித்த 'Jinnah has sold Indian Muslim's right for a bowl of soup' எம்.ஜே.அக்பரின் வாசகத்தை நினைவில் இருத்தி அதனை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்காட்டி மொக்கை போடும் வழக்கம் இன்னும் இருக்கிறது. ஆனால், இந்நிகழ்வில், செய்தி மட்டும் நினைவில் இருக்கிறது, செய்தியின் நதிமூலம் கிடைக்கவில்லை.

1979ம் வருடத்தில் சுல்ஃபிகர் அலி பூட்டோ அவர்கள் தூக்கிலிடப்பட்டார். அது தொடர்பான அச்சுறுத்தும் சூழலில் பேநசீரின் தாயும், பேநசீரும் கராச்சியில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் சில பொழுதுகளைக் கழித்திருக்கிறார்கள். அடைக்கலம் தேடி வந்த பேநசீரையும் அவரது தாயையும் அந்தச் சூழலிலும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்று, தூதரகத்தில் தங்க அனுமதித்து பாதுகாப்பு அளித்து இந்திய இறையாண்மைக்கு புகழையும், பாகிஸ்தான் இறையாண்மைக்கு சகிப்புத் தன்மையையும் உண்டாக்கிய அந்நிகழ்வின் அச்சாணியாக இருந்தவர் மணிசங்கர் அய்யர். மணிசங்கர் அவர்கள் தனது இந்திய பன்னாட்டுப் பணிக்காலத்தில் (I.F.S.)1978 முதல் 1982 வரையில் கராச்சியில் தூதரக முதன்மை அதிகாரியாகப் (Consulate General) பணியாற்றியிருக்கிறார். அந்தப் பொறுப்பில் இருக்கும்போது அடைக்கலம் தேடி வந்த பேநசீரையும் அவரது தாயையும் பாதுகாக்கும் பொறுப்பையும் மணிசங்கர் அவர்களே முன்னின்று செய்ததாக தகவல் (தவறிருப்பின் அறிந்தோர்கள் திருத்தவேண்டுகிறேன்).

2/4
பாகிஸ்தானின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த தலைவர்கள் அயூப்கான் (போரும், போர் நிறுத்தமும்!?), சுல்ஃபிகர் அலி பூட்டோ, பேநசீர் பூட்டோ, பர்வீஸ் முஷர்ரஃப் இவர்களது பதவிக்காலத்தில் பெரிய அளவில் இந்திய-பாகிஸ்தான் நல்லுறவிற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவற்றுள் 1988 நிகழ்ந்த தெற்காசிய நல்லுறவுக் குழும மாநாட்டில் (SAARC summit) ராஜீவ் + பேநசீர் இருவரின் அணுகுமுறையும் இந்திய-பாகிஸ்தான் உறவில் சில புதிய பக்கங்களை எழுதும் என எதிர்பார்க்கபட்டது.

அடுத்தடுத்த வருடங்களில் இரண்டு தலைவர்களும் பதவியில் இல்லாமற்போக, தெற்காசியாவின் அதிமுக்கியமான பிரச்சனையான இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனையைத் தவிர மற்ற நல்லுறவுகள் குழுமத்தால் அதிகமாக கவனிக்கப்பட்டன. தெற்காசிய நல்லுறவுக் குழுமம் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனையைத் தீர்க்காது என்பது தெளிவானது.

பேநசீரின் தலைமைப் பொறுப்பிற்கு முன்னர் ஜியா-உல்-ஹக்குடன் ராஜீவ் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளும், இருவரும் இணைந்து கிரிக்கெட் பார்ப்பதுமாக இரண்டு நாடுகளும் 'டிப்ளமாடிக்காக' எங்களுக்குள் பிரச்சனை இல்லை என்பதாகக் காட்டிக்கொண்டனவே தவிர தீர்வை நோக்கி நகரவில்லை.

பாரதிய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் வாஜ்பாய் அவர்களின் பதவிக் காலத்தில் எல்லைப் பிரச்சனைக்கான தீர்வு முடியும் நிலைக்கு எட்டியதான உணர்வு. முஷர்ரஃபின் இந்திய வருகை, வாஜ்பாய் - முஷர்ரஃப் தனிமையில் பேச்சு வார்த்தைகள், வெளியே காத்திருக்கும் நிருபர்களுமாக திக்திக்கென இதயத்தைத் துடிக்கவைத்து, பிறகு உப்புச் சப்பில்லாத பழைய பல்லவியாக உரிமைக் கோட்டிலிருந்து (லைன் ஆஃப் கண்ட்ரோல்) பின்வாங்க அவர்கள் மறுப்பதும், ஆக்கிரமிப்பை விட்டாலே பேச்சுவார்த்தை என நாம் சொல்வதுமாக, எல்லைப் பிரச்சனை மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்தது.

3/4
ஏற்கெனவே இருக்கின்ற மாநிலவாரியான, மொழிவாரியான பிரச்சனைகள் பேநசீரின் படுகொலை தொடர்பான எதிர்வினைகளுடன் சேர்ந்து தலையைத் தூக்கியிருக்கின்றன. சமூகவிரோதிகளின் தாக்குதல்கள் சிந்திகள் அல்லாதோரைக் குறிவைத்தும் நிகழ்ந்திருக்கின்றன. முதன்மை எதிரியாக இந்தியாவைச் சித்தரித்து சிந்து - பஞ்சாப் - பலோச் - என்.டபுள்யு.எஃப். இவற்றிடையே ஒருமைப்பாட்டை உருவாக்கும் சித்து வேலைகளை இந்தக் காயம் ஆறும் வரையில் பாகிஸ்தான் தலைமையால் செய்ய முடியாது. அதற்குள் இவை எல்லை மீற வாய்ப்புகள் அதிகம்.

பா.ம.க.விற்கு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தலையாயப் பிரச்சனை இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் பா.ம.க.வின் கோட்டையான சிந்து மாநிலத்தில் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதன் அடிப்படையிலேயே மக்களாட்சியை நோக்கி பாகிஸ்தான் நகர்வற்கான அடுத்த அடி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் நவாஸ் ஷெரீஃபிற்கான ஆதரவு இருந்தபோதும், பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனைகள், வெளிநாட்டுப் பிரச்சனைகள் இவை இரண்டிலும் நவாஸ் ஷெரீஃபால் எந்த முத்திரையையும் பதிக்க இயலாமற்போனதை பாகிஸ்தானியரும் மறக்கவில்லை; அவருக்கான தொழில்களில் முன்னேற்றமடைந்தார் என்பதைத் தவிர.

ஆக, பேநசீரின் மறைவால் இன்னும் ஓரிரு வருடங்களுக்கு இந்தியா-பாகிஸ்தான் நட்புறவு எந்தத் திசையில் செல்லும் என்பதைக் கணிக்க இயலாத சூழல் நிலவுகிறது.

4/4
இப்பொழுது பாகிஸ்தானில் நடந்திருக்கும் படுகொலை ஒரு அதிமுக்கியமான கேள்வியை எழுப்புகின்றது.

இந்தியப் பாராளுமன்றத்தைத் தகர்க்க முற்பட்ட தீவிரவாதிகள் தொடர்பாக இருநாடுகளுக்குமான அறிக்கைப் பரிமாற்றங்களில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாதிகளை நசுக்கிவிட்டதாகவும், அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கும் எதிராக இரும்புக்கர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் முஷர்ரஃப் தெரிவித்திருந்தார். அன்று அப்படி எடுக்கபட்ட நடவடிக்கைகளால் இன்றைக்கு பேநசீரைக் காப்பாற்ற இயலவில்லை. அனுமானங்களின் அடிப்படையில் இதன் பின்னணியை அணுகி அவரவர் பார்வையில் ஏதாவது கருத்தை முன்வைக்கலாம். எந்த அணுகுமுறையாக இருப்பினும் தொக்கி நிற்கும் கேள்வி ஒன்றுதான்.

அதிபர் முஷர்ரஃப், தீவிரவாதிகளை ஒழிப்பதில் / ஒடுக்குவதில் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார்?

அன்புடன்
ஆசாத்

Comments

ஆசாத்,

முஷரஃப் தீவிரவாதிகளை ஒடுக்கி விட்டாரா என்ற கேள்விக்கு, உதடு பிதுக்கி இல்லையென்று தான் சொல்ல வேண்டும். இன்னமும் தீவிரவாதிகள் பற்றிய புரிதலே இல்லையோ என நினைக்கும் படியாகத் தான் செயல்பாடுகள் இருக்கின்றன.

அமெரிக்காவின் வற்புறுத்தலுக்காகவே, தீவிரவாத எதிர்ப்பைக் கடைபிடிக்கிறார் போலும் தோன்றுகிறது. பே நசீர் புட்டோவின் மரணத்துக்குக் கூட ஒருவிதத்தில் அவர் காரணமாகி விட்டார் என்றே கூற வேண்டும்.

அமெரிக்காவின் தொடர்பில் இருக்கும் எவரையும் மலைக்குகைகளில் ஒளிந்து வாழும் தீவிரவாதிகள் மன்னிக்கத் தயாரக இல்லை. பேநசீர் பாக்கிஸ்தான் திரும்பும் முன், முஷ்ரஃப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் - அதிகார பகிர்வு ஒப்பந்தம் மிகத் தவறானது. இந்த ஒப்பந்தத்தை முன்னின்று நிகழ்த்தியது அமெரிக்கா என்பது வெளிப்படையாகத் தெரியும் அனைவருக்கும். அப்படி இருக்கையில், வெகு அலட்சியமாக அவரது பாதுகாப்பைக் கையாண்டது மிகத் தவறானது.

இம்ரான் கான் பேட்டியை NDTVயில் காண நேர்ந்தது. அப்பொழுது அவர் சொன்ன சிலவை சிந்திக்க உகந்தது. எல்லாவற்றிற்கும் அல்கொய்தா பெயரையே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதற்கான நீதிவிசாரணை நடத்தப்பட்டு, அவர்களது குற்றங்கள் நிரூபிக்கப்படவேண்டும் என்றார். முடக்கிப்போடப்பட்ட நீதிமன்றங்கள் தரும் தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

பேநசீரின் மரணத்திற்கு மெஹ்சூத் என்ற தாலிபான் தலைவர் தான் காரணம் என்று ஒரு டேப்பை வெளியிட்டிருக்கிறார்கள். உடனே அல்கொய்தா அதை மறுத்திருக்கிறது. தன்னுடைய செயல்களுக்கு எப்போதுமே உரிமை கொண்டாடும் ஒரு இயக்கம் வெளிப்படையாக மறுத்தது - புட்டோவின் கொலையில் புதிய சந்தேகங்களை உருவாக்குகிறது. குண்டு பாய்ந்து இறக்கவில்லை. வண்டியின் மேற்கூரையில் தலை மோதிய அதிர்ச்சியில் இறந்துவிட்டார் என்ற தகவலை இப்பொழுது கூறுகிறார்கள். பேநசீரின் உதவியாளர் அதை மறுத்திருக்கிறார். பிரேதப் பரிசோதனை நடக்கவில்லை. குடும்பத்தினரின் வேண்டுகோள் ஏற்று செய்யவில்லை என்கிறார்கள். ஆக, தீவிரவாத சதி என்பது பெரும் குழப்பத்திற்குத் தான் இட்டுச் செல்கிறது. அரச சதியாகக் கூட இருக்கலாம் என்ற ஊகமும் பலரால் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படும் ஒருவரின் வாகனம் அருகே அத்தனை அநாயசமாக ஒருவரால் நெருங்க முடிகிறது என்பதே எத்தனை தீவிரமாக தீவிரவாதம் எதிர்க்கப்படுகிறது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும். பின் எங்கிருந்து தீவிரவாதம் ஒழிக்கப்படுகிறது என்ற கோஷத்தை நம்புவது?

தீவிரவாதம் என்பது ஒரு ideology. அதை ஒழிக்க வழமையான ஆய்தங்கள் ஏந்திய ராணுவத்தால் முடியாது. இது உலகெங்கிலும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போர் புரிந்த அரசுகளின் அனுபவமாக இருக்கிறது. ஒரு சித்தாந்தத்தை மற்றொரு சித்தாந்தத்தின் மூலமாகத் தான் எதிர்க்க முடியுமே தவிர, ஆய்தப் பலப்பிரயோகம் அடக்கி விடாது. ஆகையால் ஆய்த வலிமை கொண்டு, தீவிரவாதத்தை எதிர் நோக்குவதை விட, தீவிரவாதிகளின் இயங்குதளமாக அமையும் மக்கள் வாழுமிடங்களை அணுகி, அவர்களை வென்றெடுப்பதின் மூலமே தீவிரவாதத்திற்கெதிரான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

ராணுவ ஆக்கிரமிப்பால், எல்லா இடங்களையும் நிரப்பிவிட்டால், தீவிரவாதிகள் இருக்க இடமில்லாமல் ஓடி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புத் தான் அரசு எந்திரங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறது. எந்திரத் தனமாக செயல்படும் அரசுகள் இருக்கும் வரை, மக்கள் தீவிரவாதிகளின் பிடியில் தான் சிக்கிக் கிடக்க நேரிடும். தங்களுடைய தேவைகளை மக்களின் அதிருப்தியில் எளிதாக ஊடுருவச் செய்து, தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள தீவிரவாதிகளால் எளிதாக முடிகிறது.

முதலில் தீவிரவாதிகளைத் தீவிரவாதிகளாகத் தான் அடையாளம் காணவேண்டுமே தவிர, அவர்களை மக்களின் மதத்தோடு இணைத்துப் பேசி, மக்களை அன்னியப்படுத்தி, தீவிரவாதிகளை நோக்கி நெட்டித் தள்ள முயற்சிப்பதை நிறுத்த வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் வேண்டுமானால், அத்தகைய செயல்களைச் செய்யலாம். ஆனால், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளால் அதை அவ்வாறு செய்ய முடியாது. அது தேவையற்ற மூர்க்கத் தனத்தில் தான் கொண்டு போய்விடும். மக்களின் எந்த ஒரு கலாச்சார கூறுகளோடும் தீவிரவாதிகளை இணைத்துப் பேசுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

பின் இயங்கக் கூடிய ஒரு நிர்வாகத்தை மக்களுக்கு அரசு தரவேண்டும். வடமகாணங்களில், இன்றளவும் அரசு என்று ஒன்றில்லாமல், பழங்குடி இனத்தலைவர்கள் தயவில் தான் அரசு இயங்குகிறது. இந்தத் தலைவர்களை, மதத்தின் பெயரால், தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வது தீவிரவாதிகளுக்கொன்றும் பெரிய சித்து வேலை கிடையாது.

அரசு நிர்வாகம் நடக்க வேண்டுமென்றால், அங்கு முதலில் மக்கள் பங்குபெறக் கூடிய ஆட்சி தேவை. முறையான தேர்தல்கள் மூலம் மக்களை பங்கு பெற வைக்க முடியும்.

இதெல்லாம் இல்லாமல், முஷ்ரஃப் தன் ராணுவத்தின் பலத்தையும், அமெரிக்காவின் ஆய்த சப்ளையையும் மனதில் கொண்டு, தீவிரவாதிகளுடன் போர் தொடுத்தால், நாட்டை அழிவுப் பாதையில் தான் நடத்திச் செல்ல முடியுமே தவிர, நேர்வழியில் அல்ல.

பாக்கிஸ்தானில், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட வேண்டுமென்றால், பாக்கிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைக்கப்பட்டு, அவர்கள் முழுமனதுடன் தீவிரவாதத்தை மக்கள் ஆதரவுடன் எதிர்த்துப் போரிட வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வெட்டி சித்தாந்தத்தைக் கைவிட்டு விட்டு மனப்பூர்வமாக போரிட முன்வர வேண்டும்.

பாக்கிஸ்தான், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு முன் எப்போதும் இல்லாத ஒரு சீரிய சூழ்நிலையில் இருக்கிறது. பயன்படுத்திக் கொள்ள, முஷ்ரஃப் உதவ வேண்டும். தன் பதவியைத் துறந்து விட்டு, மக்கள் அரசு அமைய உதவ வேண்டும்.

ராணுவத்தை தன் உயிருக்கும் மேலாக நேசிப்பவர் முஷ்ரஃப். மக்கள் பேராதரவுடன் ஏற்படுத்தப் போகும் அரசு, தீவிரவாத எதிர்ப்பு யுத்தத்திற்கு தலைமை தாங்கச் சொல்லலாம் முஷ்ரஃபை. அதே சமயம் வேறொரு தளத்தில் மக்களை அரவணைக்கும் வேலையில் - மக்களை ஒன்றிணைக்கும் வேலையில் அரசு ஈடுபட வேண்டும்.

இல்லையென்றால், பாக்கிஸ்தான் தோற்கும். சிதறிப்போகும்.

(உங்கள் தளத்தில் இவ்வளவு பெரிய இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டதற்கு மன்னிக்கவும். சிற்சில மாற்றங்களுடன் என் தளத்திலும் வரும். )

அன்புடன்

நண்பன்
அன்பின் ஆசாத்,
சிந்திக்க வைத்த ஒரு பதிவுக்கு நன்றி.

நண்பன் கூறுவது போல, தீவிரவாதத்தை ஒடுக்குவதில், முஷரஃப் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

பெனாசீர் மறைவு மிகவும் சோகமானது.

எ.அ.பாலா
ஆக்ஸ்போர்டில் பேனசிர் மாணவர் சங்க தலைவராக பணியாற்றுகையில், மணிசங்கரும் ஏதோ பதவியில் இருந்ததாக படித்த ஞாபகம்....சரியா?

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...