Skip to main content

THE AFGHAN by Frederick Forsyth - எனது பார்வை

அன்புடையீர்,

இந்த நாவலப் படிக்ற பலர் பலவிதமா அணுகப்போறாங்க. சிலரு இதுல வர்ர சில விவரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருக்குங்க. கதைதானேன்னு வுட்டுட்டும் போகலாம். ஆங்கிலத்துல இணையத்துல கொஞ்சம் தேடிப்பாத்தேன், நாலு வரி பாராட்டி எழுதியிருக்காங்க, ஒருத்தரு மட்டும் பூகோள ரீதியா, கடல் மார்க்கம் - பாதுகாப்பு ரீதியா கொஞ்சம் அங்க இங்க தப்பு பண்ணியிருக்காருன்னு சொல்லியிருக்காரு

அதெல்லாம் சரின்னு படிச்சுவச்சுக்கிட்டேன். சென்னைல நாவலப் படிச்சு முடிச்சதும் நமக்கு மனசுல ஓடுன எண்ணமே வேறங்க, அத நான் கடைசில சொல்றனே. சென்னைலயே இத்த எழுதிட்டேன். இப்ப கொஞ்சம் அங்க இங்க தட்டுனேன். அது கெடக்கட்டும், இப்பத்திக்கு நாவலப்பத்திப் பாக்கலாமா?

நாவல் நடக்ற கதைக்களன் நாம பாத்த எடமா இருக்கும்போது அதுல ஈர்ப்பு கொஞ்சம் அதிகமா இருக்குங்க. நா.பா.வுது நிசப்த சங்கீதம் படிக்கும்போது திர்லக்கண்ணி கண்ணு முன்னால வந்துது. நாம நடந்த கடற்கரைச் சாலை, விவேகானந்தர் இல்லம் இதச்சுத்தி கதை நகர்ந்தப்ப அதிகமாவே லயிக்க முடிஞ்சுது. இதே மாதிரி ஆங்கிலத்துல படிச்சதுலன்னா...ஸ்ஃபிங்ஸ்ஸுங்க. கெய்ரோவுல தஹ்ரீர், அருங்காட்சியகம், கான் அல் கலீலின்னு கதை நகர்ந்தப்ப 'அட நம்ம பாத்த எடம்பா'ன்னு நெனச்சுக்கிட்டேன். இதோ போன மாசம் ப்ரெட்டிக் ஃபோர்சித்துது த ஆஃப்கன் படிக்கும்போது துபாய் ஆப்ரா (படகுத்துறை) வர்ணிப்பு வந்ததுமே நானு 'ஆப்ரா கரையில் ஓடங்கள்'னு எழுதுன அறுசீர் சிந்து நெனவுக்கு வந்துச்சு.

சுயபுராணம் போதுமுன்னு நெனைக்கிறேன்.

கதைய நிச்சயமா சொல்லத்தான் போறேன். உங்களுக்கு ஃப்ரெட்ரிக் சாஹேபைப் புடிக்குமா, நானு என்னதான் முன்கூட்டியே எழுதுனாலும் நீங்க நாவலப் படிப்பீங்க. சும்மா கதையோட ஓட்டத்துல நானு சொன்னதால வேகம் கொஞ்சம் கொறையலாம், அவ்வளவுதான். மத்தபடி அவரோட விறுவிறுப்பு இருக்கத்தான் செய்யும். அதுக்கு நான் உத்தரவாதம் தரேன்.

ஃபோர்சித் தன்னோட புத்தகங்களத் துவங்குறதே அட்டகாசமா இருக்குங்க.

டெவில்ஸ் ஆல்டர்னேட்ல செயற்கைக்கோள் எடுத்த படத்துல ஒருத்தரு வயல்ல இருக்றதக் காட்டினதோட அப்படியே அத்தோட அந்த வருஷம் வெளச்சல் சரியில்ல பஞ்சம் வரும்னு ஒரு முடிச்சப்போட்டு பன்னாட்டு அரசியல அதுல இணைச்சு சடார்னு வேகம் எடுத்தாரு.

ஃபோர்த் ப்ரொட்டோகால்ல ஒரு திருடன் திருடும்போது அதுல தஸ்தாவேஜு சிக்கிக்க, திருடனும் நியாயமானவனா அந்த தஸ்தாவேஜ சேரவேண்டியவங்களுக்கு அனுப்ப, கதை சூடு புடிக்கும்.

நெகோஷியேட்டர்ல ஒரு பொண்ணு அநியாயமா செத்துப்போவும்.

ஐகான்ல தலைவரு மாரடைப்பு வந்து எறந்துட்டத மெய்க்காவலாளிங்க எப்படி அரசுக்குத் தெரிவிக்றாங்கன்னு வேகம் எடுத்துரும்.

இதுல (த ஆஃப்கன்) 2005 லண்டன் குண்டு வெடிப்ப சொல்லி, பேஷ்வார்ல ஒரு தாலிபான் தீவிரவாதி லண்டன்ல வாங்குன 'சிம்' வழியா தன்னோட சொந்தக்காரங்களுக்குப் பேசும்போது, அந்த 'சிம்' பாகிஸ்தான் தொலை தொடர்புக்கு கணக்கு நேர் பண்ணிக்றதுக்கு தகவல் அனுப்ப, இதக் கவனிச்ச பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருத்தரு எதுவோ கொழப்பமுன்னு நெனச்சு புத்திசாலித்தனமா நடவடிக்கை எடுக்க, கிடுகிடுன்னு கதை வேகம் புடிச்சு அல்கொய்தாவோட பண விவகாரங்கள கவனிச்சுக்ற ஆசாமியோட மடிக்கணினிக்கு வருது.

அந்த மடிக்கணினில இவங்களுக்குக் கெடைக்ற ஒரே ஒரு துப்பு 'அல் இஸ்ரா' (இரவுப் பயணம்). என்னடா இது அல் இஸ்ரான்னு ஆராயத் துவங்குறாங்க. அல்கொய்தா எதுவோ பயணத்துல பெரிய சேதத்த உண்டாக்க திட்டம் தீட்டுன்னு தெரியுது, என்ன திட்டமுன்னு ஒண்ணும் புடிபடல. அல்கொய்தாவுக்குள்ள யாரையாவது ஊடுருவ வைக்கணும்னு ஐக்கியராச்சிய - அமெரிக்க உளவுத்துறைக்காரங்க திட்டம் போடுறாங்க.

ஆஃப்கான் வழியாத்தான் உளவாளிய உள்ள அனுப்பணும். அப்ப ஆஃப்கான் பத்தியும் அரபு நாடுகள் பத்தியும் தெரிஞ்சவரத்தான் அனுப்பணும்னு ஆஃப்கான்லயும், வளகுடா யுத்ததுலயும் வேல செஞ்ச ஒரு மேஜரத் தேர்ந்தெடுக்கறாங்க. காவ்ண்ட்டனாமோ (Guantanamo - தமிழ்ல எழுதுனது சரிதானுங்களா? தப்பா இருந்தா திருத்திடுங்க) சிறைல இருக்ற ஆஃப்கானி (தாலிபான்) ஒருத்தர ஆள்மாறாட்டம் செஞ்சு உள்ள அனுப்பலாமுன்னு முடிவாகுது. ஆப்பரேஷன் க்ரோபார் உதயமாகுது.

மேஜர் - மார்ட்டின்
ஆஃப்கானி - இஸ்மத் கான். இவருதான் த ஆஃப்கன்.

நம்ம டான், சச்சா ஜூட்டா, பட்டிக்காட்டு ராஜா அளவுக்குதான்னாலும் ஆள்மாறாட்டத்துக்கு ஆள எப்படி தயார் பண்ணறாங்கன்னு ஃபோர்ஸித் தர்ர விளக்கங்கள் படிக்க விறுவிறுப்பா இருக்குங்க. என்னா முடிச்சுன்றீங்க? நீதிமன்றத்துல ஆஃப்கானி பண்ண குற்றத்துக்கு அவன ஆஃப்கான் அரசுகிட்ட ஒப்படச்சுருவோமுன்னு சொல்லிட்டு, அன்னிக்கு ராத்திரி இஸ்மத்கான வேற எடத்துக்கு கொண்டு போயிட்டு, மார்ட்டின சிறைல வச்சுர்ராங்க. இதுல மார்ட்டினும் இஸ்மத் கானும் இளம் வயசுல ஆஃப்கானிஸ்தான்ல ரஷியாவுக்கு எதிரா சண்டை போட்டதாவும், அப்ப ஒசாமா இவங்கள சந்திச்சதாவும் கொஞ்சம் விவரிப்பு இருக்கு.

ஆஃப்கானிஸ்தானுக்குப் போனதும் இஸ்மத் கானா இருக்ற மார்ட்டின் தப்பிச்சுர்ரதா கதை பண்ணிர்ராங்க. ஆஃப்கான் - பாகிஸ்தான் எல்லைல சரக்கு வண்டிங்க நிக்கிறது, வண்டியோட்டிங்க பழக்கம், ஆஃப்கன் (மார்டின்) ஒரு வண்டில எடங்கேட்டு ஓடறது, பாகிஸ்தானுக்குள்ளாற அல்கொய்தா ஆதரவாளர்கள் மூலமா அப்படியே அல்கொய்தாவுக்குள்ள நொழையறது எல்லாம் அட்டகாசம்.

நமக்கு ஒண்ணுமே புரியாம அல் இஸ்ரா திட்டம் எங்கியோ மூலைல துவங்குதுங்க. மலேயாக்காரரு ஒர்த்தரு தன்னோட சரக்குகள அனுப்ப ஒரு கப்பல் போக்குவரத்து நிறுவனத்தோட ஒப்பந்தம் பண்ணிக்றதா சின்னதா மூலைல திட்டம் துவங்குது. இன்னொரு பக்கம் இன்னொரு குழு பிலிப்பைன்ஸ் பக்கமா இன்னொரு கப்பல கடத்திக்கிட்டுப்போயி அத உருமாற்றம் பண்றாங்க. உருமாற்றம் பண்ணப்புறம் கப்பலோட அமைப்பு, மலேயாக்காரரு சரக்கு அனுப்புன கப்பலாட்டம் ஆகிடுது. ஒவ்வொரு தீவிரவாதியா கப்பலுக்கு வராங்க. கேரளாவுலேர்ந்தும் ரெண்டு பேரு வர்ரதா கதையமைப்புன்னா பாத்துக்கங்களேன். அதுல அபூ சயாஃப் கையும் இருக்றதா கதையமைப்பு. அந்தக் கப்பல்ல என்னா சரக்கு இருக்கு...அதுதான் அல் இஸ்ராவுக்கு முக்கியமான ஆயுதம்.
அத எழுத மாட்டேங்க.

அல்கொய்தா விசாரணைக்காகவும் விவரங்கள சரிபாத்துக்கவும் இஸ்மத் கானா இருக்ற மேஜர் மார்ட்டின துபாய் ஆப்ரா கரை வழியா ராஸ்-அல்-கைமாவுக்கு அல்கொய்தா ஆளுங்க அனுப்பி வைக்றாங்க. அங்க ஒரு வீட்டுல வச்சு ஒரு பெரிய அல்கொய்தா ஆசாமி எல்லா விவரத்தையும் கேட்டு சரிபாத்துக்கறாரு. எல்லாம் பொருந்துனப்புறம், இஸ்மத் கானை அல்கொய்தாவுக்கு உள்ள அனுமதிக்றாங்க. உள்ள வந்ததும் உடனே வேலைதான். தற்கொலைப் படை ஆளா இஸ்மத்கான் கப்பலுக்குப் போய் சேர்ரான்.

ஆப்பரேஷன் க்ரோபாருக்கு அல் இஸ்ரா துவங்குது.

இதுக்கு எடைல எல்லைல தனியா சிறைல அடஞ்சு கெடக்ற உண்மையான இஸ்மத் கான் தப்பிச்சிர்ரான். கடுங்குளிர்ல எல்லையக் கடந்து கனடாவுக்குப் போயி அங்கேர்ந்து ஒரு எண்ணுக்கு தொலைபேசுறான். அவனத் துரத்திக்கினு வர்ர அமெரிக்க உளவுத்துறை ஆசாமிங்க அத தொலைநோக்கில பாத்து சுடறதுக்கு குறிவெச்சுர்ராங்க...சுட்டாங்களா? அதயும் எழுத மாட்டேன்.

அங்க கப்பல்ல போற இஸ்மத்கான் (மார்டின்) அல் இஸ்ராவோட கடைசி நிலையப் பாக்குறான். தனித்தனியா பிரிஞ்சு மளமளன்னு வேலைல எறங்குற தீவிரவாதிகள கப்பு கப்புன்னு போட்டுத் தள்ளிட்டு கப்பலோட மேல் தளத்துக்கு மேல வரான். அங்க கடைசி விநாடிக்காக காத்திருக்ற இன்னொரு தீவிரவாதியோட போராட்டம்.

ஒண்ணு அடிபட்டு சாவறது, இல்லேன்னா அல் இஸ்ராவ அரகொறயா முடிச்சு அத வெற்றியடையாம ஆக்கிட்டு அத்தோட தானும் சேந்து சாவறது, இப்படின்ற ரெண்டு வழிதான் அவனுக்கு முன்னால தெரியுது. ஒரு உளவாளி, போர்வீரன், கண்ணு முன்னால கூட்டங்கூட்டமா மக்கள் அழியப் போறாங்கன்றத உணர்ந்துட்ட உயிருக்கு அஞ்சாத வீரன் அந்த மாதிரி நேரத்துல என்ன செய்வான்? அதையேதான் மேஜர் மார்ட்டினும் செய்தான். ஆப்பரேஷன் க்ரோபாரோட உச்சகட்டம். என்ன செஞ்சான்? அத எழுத மாட்டேன்!

அது என்ன கூட்டங்கூட்டமா மக்கள் அழியப்போறாங்க? எங்க? அந்தக் கடைசி முடிச்சுதாங்க ஃப்ரெட்ரிக் ஃபோர்சித்தோட வழமையான பன்னாட்டு அரசியல்ல வூடு கட்டுற முடிச்சுங்க. அதயும் எழுத மாட்டேன்.

சென்னைல புத்தகம் கெடைக்குது. வாங்கிப் படிங்க. முன்னூறு பக்கத்துக்கு மேல.

இப்ப நாவலப் பத்தி நம்ம கருத்துங்க.

1.
ஐக்கியராச்சிய - அமெரிக்க உளவுத்துறை விவரிப்புகளெல்லாம் கொஞ்சம் அதிகமாகிட்டதால திகட்டுற மாதிரி எனக்குத் தோணுது. ஏன்னா அவரோட கதைகள்ள நெறைய முன்னமே படிச்சிருக்கோமில்ல.

2.
எந்த நாடும் தீவிரவாத அமைப்புகளோட தொடர்பு வச்சுக்றதில்லேன்ற மாதிரியே நிகழ்வுகளை அமைச்சு சர்வ ஜாக்கிரதையா கதை நகருது.

3.
தாலிபான் அமைப்பு உதயம், முல்லா உமரின் வளர்ச்சியெல்லாம் பரபரன்னு கண்ணு முன்னால (மேலோட்டமா) ஓடவைக்றாரு. இதையே கட்டுரையா ஒக்காந்து படிச்சா பொரிச்செடுத்திருக்கும், அந்த விஷயத்துல ஆர்வமில்லேன்னா.

4.
துபாய் போக்குவரத்து நெரிசல், ஆப்ரா கரை, ராஸ்-அல்-கைமா வில்லா (தனிவீடு) - அங்க வந்து போற விநியோக வண்டிங்கன்னு நமக்குத் தெரிஞ்ச, பாத்த சமாசாரங்கள் கதைல வரும்போது, ஆரம்பத்துல சொன்னேனில்லையா அந்த ஈர்ப்பு.

5.
முஷர்ரஃப், வஜீரிஸ்தான், பலுசிஸ்தான்னு பாகிஸ்தானோட சமீபத்திய அரசியல கொஞ்சம் அலசுறது நல்லா இருக்கு.

6.
கடைசியா சொல்றேன்னு சொன்னேனுல்ல அது:

அதாவதுங்க, அல் இஸ்ரா சதித்திட்டத்துல இருக்ற தீவிரவாதிங்க எல்லாருமே ஒவ்வொரு துறைல நிபுணத்துவம் உள்ளவங்களா இருக்காங்க. கப்பல் ஓட்ட ஒருத்தன், தொலைதொடர்புக்கு ஒருத்தன், வெள்ளைக்காரன் பேசுற மாதிரி (அக்சென்ட்) தொலைதொடர்புல பேச ஒருத்தன், சதித்திட்டம் நடக்கும்போது படம் புடிச்சு இணையத்துல உடனே சேமிக்க ஒருத்தன்னு பல ஆசாமிங்க.

இவங்களுக்கு நடுவுல அல் இஸ்ரா சதித்திட்டத்துல வரப்போற நடவடிக்கை எதுலயுமே எந்த நிபுணத்துவமும் இல்லாத இஸ்மத்கான் ஏன் வரணும்? அல் இஸ்ரா சதித்திட்டம் துவங்கும்போது இஸ்மத்கான் இருக்ற எடங்கூட அல்கொய்தாவுக்குத் தெரியாதுன்ற மாதிரிதான் கதையமைப்பு.

ஆஃப்கானிஸ்தானப் பத்தி நல்லா தெரிஞ்ச தாலிபான் ஆசாமிய, அதுவும் சிறைலேர்ந்து தப்பிச்சு வர்ர தாலிபான் ஆசாமிய, அல்கொய்தா, ஆஃப்கானிஸ்தானுக்கு அனுப்பணுமா? இல்ல பாதி வேலை முடிஞ்சுபோன அல் இஸ்ரா சதித்திட்டத்துக்கு அனுப்பணுமா?

இதுதாங்க நமக்கு ஒரு சின்ன நெருடல்.

மத்தபடி விறுவிறுப்பான கதை. இணையத்துல அங்க இங்க இது பொரிச்செடுக்குதுன்னு எழுதியிருக்காங்க, நம்பாதீங்க. கைல எடுத்தீங்கன்னா வைக்க முடியாது. அப்படிப்போவுது. நாம கொஞ்சம் ஃபோர்ஸித் சாஹேப் ரசிகருங்களா, நாம சொல்றது சார்பு நெலையாவும் இருக்கலாம்.

எதுக்கும் முடிஞ்சா நீங்க படிச்சுப் பாத்துருங்க.

அன்புடன்
ஆசாத்

Comments

SP.VR. SUBBIAH said…
ஒரு நல்ல நாவலை அற்புதமாக விமர்சித்து, பரிந்துரை செய்தமைக்கு மிக்க நன்றி மிஸ்டர் ஆசாத்!

நான் ஜெஃபரி ஆர்ச்சரின் ரசிகன். அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் Twist in the tale என்ற புத்தகம் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். வாங்கிப் படியுங்கள்
SP.VR.Subbiah
Boston Bala said…
அடிச்சு பின்னியிருக்கீங்க (கதையை இன்னொரு வாட்டி படிக்கணும்... விரிவான பார்வைக்கு நன்றிங்கோ : )
நமக்குத் தெரிந்த இடங்கள் நாவலில் வரும்போது படிப்பதில் சுவாரசியம் அதிகரிக்கிறது என்பதும் நிஜமே.

இப்படித்தான் ஒரு ஃபிரெஞ்சு துப்பறியும் கதை தில்லியில் நடப்பதாகக் காட்டியிருந்தார்கள். நம்ம ஹீரோ பகல் பத்து மணி அளவில் புது தில்லி ஸ்டேஷன் இருக்கும் செம்ஸ்ஃபோர்ட் சாலையிலிருந்து காரை செலுத்தி கனாட் ப்ளேஸை அடைந்து வலது புறம் திரும்பி பஞ்ச்குவான் சாலையில் திரும்புவதாக எழுதப்பட்டிருந்தது.

நாவல் படிப்பதை நிறுத்தி விட்டேன். அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயம் நடக்க சான்ஸே இல்லை. கனாட் ப்ளேஸ் வட்டம் முழுக்க ஒரு வழிப்பாதை. செம்ஸ்ஃபோர்ட் சாலையிலிருந்து இடது பக்கம் திரும்பி கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் வட்டத்தில் பயணித்துத்தான் பஞ்ச்குவான் சாலையில் திரும்ப இயலும். ஆசிரியர் புது தில்லி மேப்பை வைத்து எழுதி விட்டார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்ன்
//காவ்ண்ட்டனாமோ//
க்வென்டாணமோ / க்வன்டாணமோ

Foresyth நாவல்களில் எனக்கு பிடிச்சது 'Dogs of war'. ஆப்ரிக்க நாட்டில் வைர/யுரேனிய சுரங்கத்த கைப்பற்ற இங்கிலாந்து நிறுவனமொன்று coup மூலமாக ஆட்சியை கைப்பற்றுவதை பற்றிச் சொல்லும் கதை. அவருடைய இன்னுமொரு சிறுகதைத் தொகுப்பும் (பெயர் மறந்துவிட்டது)நன்றாக இருக்கும்.
சுப்பைய்யா சார்,

ட்விஸ்ட் இன் தெ டேல் வீட்ல சென்னைல இருக்குன்னு நெனைக்கிறேன். ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஜித்தாவுல இருக்ற ஜரீர் புக் ஸ்டோர்ல இவருது ரெண்டு புக்கு வாங்குனதா நெனப்பு.

விடுமுறைல வரும்போது படிக்கிறேன் சார்.

*

இனிய பாலா,

நன்றிகள்.

பின்னுறதெல்லாம் இல்லீங்க. அப்படியே கோவையா எழுதணும்னு நெனச்சேன். எழுதுனேன். அப்புறமா தேவையில்லாததையெல்லாம் வெட்டுனேன். அவ்வளவுதான்.

*

டோண்டு சார்,

அந்த உட்டாலக்டிய ஃபோர்சித் சாஹேபும் அடிச்சிருக்காரு. ராஸ்-அல்-கைமா வில்லா பக்கத்துலல்லாம் அவ்ளோ ஜாலியா ஸ்கூட்டர் ஓட்டிக்கினு வேவு பாக்க முடியாது. தனியா தெரிஞ்சுரும். ஆனாலும், சல்தா ஹை சார். கத எழுதுனது நமக்கு மட்டும் இல்லல்லீங்களா. கொஞ்சம் அங்க இங்க உட்டாலக்டி அடிக்றதுல தப்பில்லீங்க.

*

பெத்தராயுடுகாரு,

உச்சரிப்பத் திருத்துனதுக்கு நன்றிகள்.

ஹைய்ய்ய்யோ டாக்ஸ் ஆஃப் வார் அட்டகாசமான கதையாச்சுங்களே.

அரசாட்சிய கைல எடுத்துக்கத்துக்கு ஒப்பந்தப் போராளிங்க வருவாங்க இல்லீங்களா. ஆங்களுக்கு ஆயுதங்கள் ஒண்ணொண்ணா வந்து சேருமே.

அதுல வெடிமருந்து விகிறவங்க 'எண்ட் யூசர் சர்டிஃபிகேட்' கேப்பாங்க அப்ப ஈராக் தூதர் கையெழுத்தப் போட்டு ஈராக் போலீஸுக்கு துப்பாக்கி சுடற பயிற்சிக்கு குண்டு வேணும்னு வாங்கிருவாங்க. இவனுங்க வாங்கற குண்டு ஈராக் போலீஸ் படைக்கு ஒரு சுற்று பயிற்சிக்கே பத்தாதுன்னு வெடி மருந்து நிறுவனத்துக்குத் தெரிஞ்சாலும், கடிதம் இருக்றதால அவங்களால ஒண்ணும் பண்ண முடியாம சரக்கத் தந்துருவாங்க.

நல்ல கதை ராயுடுகாரு.

*
அன்புடன்
ஆசாத்
நான் 2 வாரம் முன் படித்தேன்.....ந்ன்றாக உள்ளது ஒங்களது கருத்துக்களும்.....
இனிய மௌல்ஸ்,

நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்
தலைவர்!
Fist of God - ஐ விட்டுவிட்டீர்களே! அதுவும் போர்சைத்தின் அனைத்து அம்சங்களும் (கதையின் எதிர்பாராத ஆரம்பம், முதல் 200 பக்கம் ஸ்லோ அப்புறம் சூப்பர்பாஸ்ட்) கொண்ட கதைதானே.. என் ஆல் டைம் favorite - Fourth Protocol தான்.

ஆப்கன் வைச்சிருக்கேன். ஜெப்ரி ஆர்ச்சர் லேட்டஸ்ட் False Impression படிச்சு நொந்து நூடுல்ஸ் ஆனதாலே இதை எடுக்க தைரியம் வரலே. எடுக்கலாம்ன்றீங்க? எடுத்துடலாம்.
சுரேஷ்ஜி,

ஃபிஸ்ட் ஆஃப் காட்'ல ஆரம்பத்துல ஈராக்கு பார்லிமெண்ட் ஆசாமிங்க விவரிப்பு இருக்றதால கொஞ்சம் போரடிச்சிருக்குங்க.

நம்ம ஆல் டைம் ஃபேவரிட் டெவில்ஸ் ஆல்டர்நேட்தான்.

அன்புடன்
ஆசாத்
ஃபோர்ஸைத் புத்தகங்களிலேயே எனெக்கு பிடித்தது ஒடெஸ்ஸா ஃபைல்தான் ஏன்னு தெரியல. :))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...