Skip to main content

மு.மேத்தாவுடன் சிலமணிநேரங்கள்

மு.மேத்தாவுடன் சிலமணிநேரங்கள்

சவூதி அரேபியாவுக்கு வந்திருந்த கவிஞர் மு.மேத்தா அவர்களை மக்காவிற்கும், மதீனாவிற்கும் அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. அலுவலகத்தில் விடுமுறைக்குச் சொன்னேன். ஜித்தாவில் இருப்பவர்களுக்கு இப்படியான (அறிந்தோர்களை மக்கா, மதீனா அழைத்துச் செல்வது) சேவை புதிதானது அல்ல என்பதால் உடனே அனுமதி கிடைத்தது.

ஜித்தா - மக்கா ஒருமணிநேரப் பயணம். நலம் விசாரித்து, பயணத்திற்கான சில விவரங்களை சொல்லி முடிக்குமுன் மக்கா வந்துவிட்டது. கடமைகளைச் செய்து முடித்தபின் மக்காவின் அருகிலிருக்கும் மினா, அரஃபாத் திடல்களுக்குச் சென்றோம். மினாவில் கல்லெறியும் இடத்தில் கட்டுமானப் பணிகள் அதிவேகத்தில் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன (சென்ற ஹஜ்ஜில் இங்கே அசம்பாவிதம் நிகழ்ந்தது சிலருக்கு நினைவிருக்கலாம்). சாலையோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் அதையே செய்தோம். அந்தி சாயும் பொழுது வந்துவிடவே, அவசர கதியில் மக்காவிற்கு வந்து அந்தி நேரத் தொழுகை முடிந்ததுக்கொண்டு ஜித்தா புறப்பட்டோம்.

இன்றைக்கு 1 + 1 மணிநேரப் பயணம்தான், நாளை 4 + 4 மணிநேரப் பயணம் என முன்கூட்டியே சொல்லிவிட்டேன்.

அடுத்த நாள் காலையில் மதீனாவுக்குப் புறப்பட்டோம். வழக்கமாக மதீனா பயணத்தில் வழியில் ஒரு இடத்தில்தான் ஓய்வுக்கும் பெட்ரோல் நிரப்புவதற்கும் நிறுத்துவேன். நெடுஞ்சாலை துவங்குவதற்கு முன் இருக்கும் பெட்ரோல் நிலையங்களின் அமைப்பு, அதனைச் சுற்றியுள்ள கடைகள் இவற்றைப் பார்க்கவேண்டும் என்பதற்காக, ஜித்தா - மதீனா நெடுஞ்சாலையின் துவக்கத்தில் சோதனைச் சாவடியின் அருகில் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நிறுத்தி இடங்களைப் பார்த்துவிட்டுப் புறப்பட்டோம்.

மதீனாவை அடைந்ததும் முதலில் 'கூபா மஸ்ஜித்' என்னும் பள்ளிவாசலுக்குச் சென்றோம். அங்கு மதியத் தொழுகையை முடித்துக்கொண்டு மஸ்ஜிதுன் நபவ்வீயை (மதீனாவில் இருக்கும் பள்ளிவாசல். பச்சை நிறமான கூரையுடன் அருகில் மினாராவுமாக இதனை படங்களில் சிலர் பார்த்திருக்கக்கூடும்) அடைந்து மதிய உணவை முடிக்கும்போது மாலை நேரத் தொழுகை துவங்கியது.

தொழுகைக்குப் பின் நபிகளாரின் அடக்கஸ்தலத்தில் 'சலாம்' சொல்லிவிட்டு வெளியே வந்து இன்னும் சில இடங்களைப் பார்த்துவிட்டு உஹத் மலையின் அடிவாரத்தில் கொஞ்ச நேரம் வண்டியை ஓட்டிவிட்டு, உஹத் போரில் உயிர் நீத்தவர்களை அடக்கம் செய்திருக்கும் இடத்திற்கு வந்து 'எமீன் சைய்யதினா ஹம்சா' (வலது பக்கத்தில் சைய்யதினா ஹம்சா) என வழிகாட்டும் வேலையைத் துவங்கியவரிடம் நன்றி சொல்லிவிட்டு, கட்டுமானப் பணிகளுக்காகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணல்களிடையே ஒரு மாதிரியாக நடந்து வந்து ஜித்தா - மதீனா நெடுஞ்சலையில் இணைந்தோம்.

அதற்குள் அந்தி சாய்ந்துவிட்டது. இருட்டில் வண்டி ஓட்டுவதாலும் காலையிலிருந்து தொடர்ந்து வண்டி ஓட்டிக்கொண்டிருப்பதாலும் அசதியில் கண்ணயர்ந்துவிடுவேனோ என்ற பயத்தில் வழக்கத்திற்கும் மாறாக அதிகமாக சர்க்கரையுடன் ஒரு தேநீர் அருந்திவிட்டு சுறுசுறுப்பாக ஓட்டத்துவங்கினேன். இரவு நேரமாதலால், நமது வேகமான 120 - 140 செல்லாமல், 80 - 100 வேகத்தில் ஜித்தா வந்து சேர நள்ளிரவு பன்னிரண்டாகிவிட்டது.

சில பகிர்தல்கள்:

கவிஞர் என்ற ஒளிவட்டத்தில் அவர் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

அரபி உச்சரிப்புகள் சிலவற்றை நான் திருத்திச் சொல்லியபோது மீண்டும் ஒருமுறை கேட்டு சரியாக உச்சரித்துப் பார்த்துக்கொண்டார்.

தெரியாத விஷயத்தை, தெரியாது என்று சொல்லி விளக்கங்கள் கேட்டுக் கொண்டார். 'அங்கே இப்படிப் படித்தேனே' போன்ற கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடவில்லை.

மதீனாவில் மஸ்ஜிதுன் நபவ்வீயிலிருந்து வெளியே வந்ததும் சட்டென்று விரிகின்ற ஹில்டன், இன்டர்காண்டினெண்டல், சுழல் மெத்தை உணவு விடுதி வகையறாக்களுக்கு இன்னும் சிறிது தொலைவில் அனுமதி அளித்திருக்கலாமோ என்பது அவரது பார்வை.

சமீபத்தில் ராம் கோபால் வர்மாவின் (உதயம்) படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருப்பதாகச் சொன்னதும் என்னிடமிருந்த ஷிவாவின் (அதேதான் - உதயத்தின் இந்தி வடிவம்) பாடல்களை ஓடவிட்டேன். உருதுப் பாடல்களில் ஒற்றெழுத்துகளையும் அலகிடுவார்கள் என்று நான் சொல்லியதை நினைவில் வைத்திருந்து, ஷிவாவின் 'சாரா யே ஆலம் நூறானீ ஹை' பாடலைப் போட்டபோது,
'நீங்கள் சொல்லியது இதுதானே. இதோ இந்த மெட்டிற்கான தமிழ்ப் பாடலை எழுதும்போது எனக்கு அசை பிரிப்பதில் பிரச்சனை வந்தது' எனச் சொல்லி நூறானீஹை என்னும் வாக்கியத்தில் நான்கு அசைகளுமே நெடில்களாக வந்ததும், அதற்கு தமிழில் நான்கு அசையுள்ள வார்த்தையைப் போடாமல் பிரித்ததையும் பகிர்ந்துகொண்டார்.

கமலுக்கும் தனக்கும் நடந்த சில உரையாடல்களைப் பகிர்ந்துகொண்டார்.

ருபையாத்துகள் குறித்து சிறிது பேசியதால் என்னிடமிருந்த ஃபிட்ஸ்ஜெரால்ட்டின் ருபையாத் மொழிமாற்றம் (ஆங்கிலம்), ஆ.மா.ஜெகதீசனின் மொழிமாற்றம் (தமிழ்), நாகூர் ரூமியின் மொழிமாற்றம் (தமிழ்) இவற்றைக் காட்டினேன், ரூமி சாஹேபின் புத்தகத்தை இரவில் படிப்பதற்கு எடுத்துக்கொண்டார்.

அவரது திரைப் பாடல் தொகுதியில் கையெழுத்திட்டுத் தருமமாறு கேட்டுக்கொண்டபோது, 'ம்ம்...இத வச்சிருக்கீங்களா' என்று கேட்டுக்கொண்டே கையெழுத்திட்டார்.

படகோட்டி படப் பாடல்களையும் ஓடவிட்டேன். என்ன அற்புதமான வரிகள் என வாலி அவர்களைப் புகழ்ந்து பேசியபோது கவனித்தேன், வாலியவர்களைக் குறிப்பிடும்போதெல்லாம் 'வாலியண்ணன்' என்றே குறிப்பிடுகிறார்.

கஜலை மொழிமாற்றி அதே சந்தத்துடன் எழுதியிருக்கிறேன் என்றபோது, சிறிதும் தயங்காமல், 'மலரை மட்டும் தராமல் விலங்கையும் தந்திருக்கிறீர்களா' என சிரித்துக்கொண்டே சொன்னார்.

லண்டனிலிருந்து முருகனார் (இரா.முருகன்) என்னிடம் பேசியபோது அருகில் மு.மேத்தா இருக்கிறார் என்று சொல்லி மு.மேத்தாவிடம் செல்பேசியைத் தந்தேன். மீராவின் நினவுகளை மேத்தாவுடன் பகிர்ந்துகொண்ட முருகனார் கண்ணீர்ப்பூக்கள் கவிதைத் தொகுதியை மிகவும் சிலாகித்துப் பேசியிருக்கிறார்.

இன்று காலையில்,
'பஹ்ரைன் புறப்பட்டுக்கிட்டிருக்கேன். தம்மாம்லேர்ந்து பாலத்துக்கு வந்த்தாச்சு. ரொம்ப நன்றி ஆசாத். சென்னைக்கு வந்தா தொடர்பு கொள்ளுங்க' எனச் சொல்லி விடை பெற்றார்.

கவிஞருடன் செலவழித்த சிலமணிநேரங்கள் சுவையான அனுபவத்தைத் தந்திருக்கின்றன.

அன்புடன்
ஆசாத்

Comments

Sivabalan said…
நன்றாக எழுதியுள்ளீர்கள்.

இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
படகோட்டி படத்தை பற்றி படித்தது மகிழ்ச்சியளித்தது. சமீபத்தில் 1964 திசம்பரில் அப்படத்தை பார்த்த போதே அதன் எல்லாப் பாடல்களும் என் மனதைக் கொள்ளை கொண்டன. வெவேறு வகைகளில் பாடல்களை வரிசைப் படுத்தும்போது ஒவ்வொரு வகையிலும் இப்படத்தின் பாடலே முதல் இடத்தைப் பெற்றது.

1. சிறந்த பெண் தனிப்பாடல்: என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி...
2. சிறந்த ஆண் தனிப்பாடல்: கரை மேல் பிறக்க வைத்தான்...
3. சிறந்த டூயட், ஒற்றைப் பக்கப் பாடல்: தொட்டால் பூ மலரும்..
2. சிறந்த டூயட், டபிள் சைட் பாடல்: பாட்டுக்கு பாட்டெடுத்து...

எல்லா வகைகளையும் சேர்த்தால், சிறந்தப் பாடல்: என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து...

பை தி வே, நான் துள்ளும் இசை தந்த ஓ.பி. நய்யாரைப் பற்றி பதிவு போட்டுள்ளேன். படித்தீர்களா? பார்க்க: http://dondu.blogspot.com/2006/11/blog-post_06.html

இப்பின்னூட்டத்தின் நகலை எனது மேலே சுட்டியுள்ள ஓ.பி. நய்யார் அவர்களை பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
அட! மு.மேத்தாவும் இஸ்லாமியரா? இஸ்லாமியர்களுக்கும் கவிதைக்கும் அப்படியென்ன உறவு?
Anonymous said…
//சில பகிர்தல்கள்:

கவிஞர் என்ற ஒளிவட்டத்தில் அவர் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
//

ஆம் ஆசாத் அண்ணா.. மிக சாதாரணமாகவே இருந்திருக்கிறார்.. இருந்தார்.. இங்கு ரியாத்தில் நடந்த விழா முடிந்தபிறகு நாங்கள் ஆர்வமாக அவரிடம் பேச விழைந்தபோது அவர் குறைவாகவே பேசினார்.

நண்பர்-கவிஞர் ஃபகுருதீன் அவரிடம் உங்களின் கண்ணீர் பூக்கள், இன்ன பிற படைப்புகள் எல்லாம் படித்திருக்கிறேன் என்று சொல்ல அவரிடமிருந்து ஒரு சின்ன தலையசைப்பே ஏற்றுக் கொள்ளலாய் கிடைத்தது..

அவர் தந்த சொற்பொழிவிலும் சிறிது ஏமாற்றமே.. இருப்பினும் அவருடனான சந்திப்பிலும் அருகாமையிலும் மகிழ்ச்சியே..

- லக்கி ஷாஜஹான் ரியாத்திலிருந்து...
Anonymous said…
ஆஸாத் சார்,
மு.மேத்தா அவர்கள் கலந்துகொண்ட தமிழ் சங்க நிகழ்ச்சி பற்றி தங்களிடமிருந்து மேலும் ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
Boston Bala said…
Nanri :)
ஆசாத்ஜி

அனுபவப் பகிர்வுக்கு நன்றி.
"இஸ்லாமியர்களுக்கும் கவிதைக்கும் அப்படியென்ன உறவு?"
இதில் என்ன ஆச்சரியம்? தேனினும் இனிய உருது மொழி, மற்றும் அரேபிய பாரசீக மொழிகள் கவிதை உருவாக்க சிறந்த மொழிகள் அல்லவா? வெவ்வேறு விதமான சாயல்களை சர்வ சாதாரணமாகத் தரக்கூடியவை.

முஷைரா எனப்படும் கவியரங்கங்களைப் பார்த்திருக்கிறீர்களா? கவி பாடப் போகிறவர் பார்வையாளர்களிடம் "இஜாஜத் ஹை?" (அனுமதி உண்டா?) என்று கேட்டு, பிறகு பாடும் அழகே அழகு. வாஹ் வாஹ் என்று ஆரவாரம் எழுவதும், "ஆதாப் அர்ஜ் ஹை" என்று கவி நன்றி சொல்வதும் காணக் கண்கொள்ளா காட்சிகள்.

இப்பின்னூட்டத்தின் நகலை எனது உருது மொழியைப் பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_13.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆசாத்ஜி
திரு சிவபாலன் சொல்லிட்டார்.
நன்றி
அன்புடையீர்,

பயணம் காரணமாக உடனே பதில் எழுதமுடியவில்லை.

சிவபாலன்,
பாலா,
சுந்தர்,
வடுவூர் குமார்,

நன்றிகள்.

*

ஷாஜஹான்,

அதேதான்...சல்தா ஹை :)

*

முரளி,

இப்போதைக்கு இருக்கும் வேலைகளுக்கிடையே வலைப்பதிவு எழுதமுடியுமென்று தோன்றவில்லை.

மன்னிக்கவேண்டும்.

*

டோண்டு சார், வக்கீலய்யா,

தாய்மொழிக்கும் கவித்துவத்துக்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாதுன்றது என்னோட அபிப்ராயம்.

ஹபீப் வலி மொஹம்மத் கஜலப் போட்டப்ப 'என்ன குளிர்ல நடுங்கறா மாதிரி பாடுறாரு'ன்னு சொன்ன உருதுக்காரங்களும் இருக்காங்க.

எல்லாம் தனிப்பட்ட முயற்சி, ரசனை, உழைப்பு, நண்பர் வட்டம், கிரகிக்கும் திறன்....இன்னும் நெறைய காரணிங்க உண்டு.

ஆக, என்னோட கருத்து என்னன்னா...கவித்துவத்தோட மதத்தையும் தாய்மொழியையும் இணைக்கவேணாம்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...