Skip to main content

டான் - பழசும் புதுசும்

டான் - பழசும் புதுசும்

சலீம் ஜாவீத் (சலீம் கான், ஜாவீத் அக்தர்), இந்தித் திரையில் என்றைக்கும் பேசப்படும் சில படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இரட்டையர். உதாரணத்திற்கு ஷோலே, மஜ்பூர் (நான் வாழவைப்பேன்). இருவரின் வாரிசுகளும் வடக்கே திரைத் தொடர்புள்ள, ஆனால், வெவ்வேறான துறைகளில் கால் பதித்தார்கள். சலீம் கானின் மகன் சல்மான் கான் நடிகராகவும், ஜாவீத் அக்தரின் மகன் ஃபர்ஹான் அக்தர் இயக்குனராகவும் உருவானார்கள்.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் டான் படத்தில் மகனின் (ஃபர்ஹான் அக்தர்) இயக்கத்திற்கு அப்பா (ஜாவீத் அக்தர்) பாடல்கள் எழுதியிருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களுள் ஒன்றாகிப்போனது இந்த டான். காரணம், இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமிதாப் நடித்து வெளியாகி சக்கைப்போடு போட்ட படத்தை, ஷாருக்கை வைத்து மீண்டும் உருவாக்கியது. அமிதாபைப் பார்த்த அலைவரிசையை முன்வைத்து ஷாருக்கைப் பார்க்கக்கூடாது. பழைய டான் வேறு ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது, புதிய டான் வேறு ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது. கதையமைப்பு, உத்திகள், அரங்கங்களில் ஒலியமைப்பு, வெளிநாட்டுப் படப்பிடிப்பு, டிஜிட்டல் அச்செடுப்புகள், மல்டிப்ளெக்ஸ் வெளியீடுகள் என மொத்தத் திரையுலகும் மாறிப்போயிருக்கும் இந்த நேரத்தில் வெளியாகியிருக்கும் புதிய டானை அமிதாபின் பழைய டானுடன் ஒப்பிடக்கூடாது; ஒப்பிடாமலும் இருக்கமுடியாது. இப்படிப்பட்ட இரண்டுங்கெட்டான் மனநிலையில்தான் புதிய டானை அணுகிப்பார்க்க முடிகிறது.

கதையமைப்பில் புதிதாகச் சொல்ல ஏதுமில்லை. இரட்டையர் கதை. பன்னாட்டுக் காவல்துறையால் தேடப்பட்டுவரும் கடத்தல் மன்னன் மரணமடைகிறான். அவனைப் போன்ற தோற்றமுள்ள தெருப்பாடகனை கடத்தல் மன்னனாக்கி உள்ளே அனுப்புகின்றது காவல்துறை. தெருப்பாடகனே கடத்தல் மன்னன் வேடத்தில் உளவாளியாக இருக்கிறான் என்னும் விவரம் அறிந்த அதிகாரி இறந்துவிடுகிறார். தன்னை நிரூபித்துக்கொள்ளும் முயற்சியில் தெருப்பாடகன் வெல்கிறானா என்பதே முடிவு.

பழைய டானுக்கும் புதிய டானுக்கும் கதையமைப்பில் மாற்றம் எதுவும் இல்லையென்றபோதிலும், படத்தின் கடைசிக் காட்சி பழைய டானில் இல்லாதது. இன்னும் ஓரிரு விமர்சனங்கள் இணையத்தில் (ஆங்கிலத்தில்) வரும்வரையில் அது என்ன கடைசிக் காட்சி மர்மம் என்பதை எழுதுவது முறையன்று. இப்போதைக்கு (25.10.2006) இணையத்தில் இருக்கும் விமர்சனங்கள் எதிலும் இந்த கடைசிக் காட்சி ஒப்புமை இல்லாததால், அதனை அப்படியே விட்டுவிடுகிறேன். ஏனென்றால், 'அட! கடைசில மாத்திடானய்யா ஃபரான் அக்தர்' அரங்கை விட்டு வெளியே வரும்போது இப்படி நினைத்துக்கொண்டுதான் வந்தேன். இதைப் படித்த பின்பு டான் (புதியது) பார்க்கும் நண்பர்கள்
'அட! மாத்திட்டானய்யா' என்றோ,
'யப்பா! இம்மாம் பெரிய பூவா காதுல சுத்றது' என்றோ,
'எதிர்பார்த்ததுதான். நாட் எ பிக் சஸ்பென்ஸ்' என்றோ,
அவரவர் தங்கள் அணுகுமுறைக்கேற்ப சொல்லவேண்டும்.
முடிவைத் தெரிந்துகொண்டே பார்த்தால் இந்த சுவாரசியம் இல்லாமற்போக வாய்ப்பு இருக்கிறது.

பழைய டானில் இல்லாத கதாபாத்திரம் இஷா கோபிகர். எந்தவிதமான முக்கியத்துவமும் (குறைந்தபட்சம் கதையமைப்பிலாவது) இல்லாமல் வந்துபோகிறாரே இஷா, இதற்காகவா இந்தப் படத்தில் ஒப்பந்தமானார் என கடைசி வரையில் நினைத்துக்கொண்டே இருந்தேன். கடைசி நேர முடிச்சுக்கு அவர் தேவைப்பட்டிருக்கிறார்.

சண்டைக்காட்சிகள்:
சண்டைப் பயிற்சியாளர்கள் ஹாலிவுட்காரர்கள் (ஜோ). டான் அறிமுகமாகின்ற காட்சியில் சங்கி பாண்டேயுடனான உரையாடலின் முடிவில் இரண்டே வீச்சுகளில் டானின் கை ஓங்கவேண்டிய அவசியம், வசனத்தின்படி. அதற்கான சண்டை அமைப்பு நுணுக்கமாக அமைந்திருந்தது.

வானில் பறக்கும் சண்டைக் காட்சியில் அதிகமான ஜேம்ஸ்பாண்ட் நெடி. ரோஜர் மூர் (மோர்?!) என்றோ செய்ததன் மறுபதிப்பாக அதனைச் செய்யவேண்டிய அவசியம் இப்போது என்னவென விளங்கவில்லை.

கோலாலம்பூர் வீதிகளில் வெள்ளை உடை ஆள்கள் மோட்டார் சைக்கிளில் வருவதும், ஆம்புலன்ஸை அப்படியே கொக்கிபோட்டு தூக்கிச் செல்வதும்கூட ஹாலிவுட் சமாசாரங்களே. பிரம்மாண்டத்தைக் காட்ட ஃபரான் அக்தருக்கு இது தேவைப்பட்டிருக்கிறது.

பிரியங்கா சோப்ராவின் சண்டைக் காட்சிகளில் பிரியங்கா - ஸ்டண்ட் மாஸ்டர் இருவரின் உழைப்பும் தெரிகிறது. குறிப்பாக பிரியங்கா ஷாருக்கை கால்களால் உதைக்கும் அமைப்பில் 'டூப்' இல்லாமல் நடித்திருப்பதைப் பாராட்டவேண்டும். இது குறித்து பிரியங்காவின் பேட்டியில் முன்னமே படித்திருந்ததால் இந்தக் குறிப்பிட்ட சண்டைக் காட்சிகளை ஆவலுடன் எதிர்பார்த்தேன். பிரியங்காஜி ஏமாற்றவில்லை.

ஆனால், கடைசி சண்டைக் காட்சி சொதப்பலின் உச்சம். ரசிக்கும்படியாக இல்லை. நமது கோடம்பாக்கத்தில் அப்ரெண்டீஸாக இருக்கும் பயிற்சியாளரால் இதைவிட சிறப்பான சண்டைக் காட்சிகளை அமைக்கமுடியும்.

பாடல்கள், இசை:
ஜாவீத் அக்தருக்கு பண்டிகைப் பாடல்கள் எழுதுவதென்றால் பேனாவில் (லேப்டாப்பில்!?) என்னதான் அதிசயம் நிகழுமோ தெரியாது, மனிதர் அசத்துவார். லகானின் 'ராதா கைஸே நா ஜலே ஆக் தன் மன் மே லகே' நினைவிருக்கிறதா. டானில் கணபதி பாப்பா மோரியாவிலும் அதேபோல் அசத்தியிருக்கிறார். இசை கலக்கலோ கலக்கல். நான் அண்ணா திரையரங்கில் இதனைப் பார்த்தேன். DTS ஒலியமைப்பில் அட்டகாசம். மும்பைத் தெருக்கள், வானுயர்ந்த விநாயகர் சிலை, கொங்கணி உடையில் கடற்கரையோரத்தில் பெண்கள் கூட்டம் - ஐந்து நிமிடங்கள் ஷாருக்குடன் மும்பையை வலம் வரலாம்.

'யே மேரா தில்' பாடலில் கரீனா கொஞ்சம் ஏமாற்றிவிட்டார். பாடலைப் பாடிய சுனிதி சௌஹானின் மேல் இருக்கும் ஈர்ப்பால் எனக்கு அப்படித் தோன்றியிருக்க வாய்ப்புகள் இல்லை. இதில் கரீனாவையோ, நடனம் அமைத்தவரையோ குறை சொல்லக்கூடாது. நான்கு பேருக்கு மேல் நடனம் அமைத்திருப்பதால் இந்தப் பாடலுக்கான நடனத்தை அமைத்தவர் யாரென்பது தெரியவில்லை. வழமையான ஆடைக் குறைப்பு நடனத்தின் அசைவுகள், அதில் குறையேதும் இல்லை. ஆனால், 'முஷ்கில் ஹை ப்யாரே! தேரா பச்கே ஜானா' (பிரியமானவனே, நீ என்னிடமிருந்து தப்புவது சிரமம்) இந்த வரிகளைப் பாடும்போது காதலும் கொலைவெறியும் மாறிமாறி கண்களில் தெரியவேண்டும், கதையமைப்பின்படியும் அப்படியே. ஆனால், பாடலில் அது இல்லை. கரீனாவின் தவறோ, ஃபர்ஹானின் தவறோ, நடன ஆசிரியரின் தவறோ, யாருடைய தவறோ, ரசிகனை இருக்கையின் நுனிக்கு அழைத்துவரவேண்டிய பாடல் வெறும் களியாட்டப் பாடலாகிப்போனது.

ஷங்கர் - எஹ்சான் - லாய், மூவர் கூட்டணி தீம் ம்யூசிக்கில் கலக்கியிருக்கிறது.

ஆஜ் கி ராத், டான் இரண்டு பாடல்களும் ஏற்கெனவே அங்கங்கே போடுபோடென போட்டுக்கொண்டிருக்கின்றன. தொழில் நுணுக்கம், படப்பிடிப்பு இவற்றில் புதிதாக எதையும் நிகழ்த்திக் காட்டவில்லையென்றபோதும், மசாலப்ப் படத்திற்குத் தேவையான அனைத்துத் தன்மைகளும் இந்தப் பாடல்களில் இருக்கின்றன.

நான் மிகவும் எதிர்பார்த்த பாடல் 'காய்க்கே பான் பனாரஸ் வாலா'. கிஷோர் குமார் பாடிய பழைய பாடலை மறுகலவை செய்திருக்கிறார்கள். உதித்தும் ஷாருக்கும் பாடியிருக்கிறார்கள். கிஷோர் சாஹேப் தொட்ட உயரங்கள் வேறு, இவர்கள் தொட்டிருக்கும் உயரங்கள் வேறு. மற்ற காட்சிகளை பழைய டானுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் விட்டுவிட்டாலும், பழைய டானைப் பார்த்திருக்கும் நண்பர்களால் இந்தப் பாடல் காட்சியை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்கமுடியாது. அமிதாப் கொண்டு வந்த நகைச்சுவையை ஷாருக்கால் தர இயலவில்லை. ஜீனத் தந்த நளினமான நடன அசைவுகளை பிரியங்கா தரவில்லை. இதுதான் நிலை.

தமிழ்த் திரைக் கவிஞர்களோடு தொடர்புள்ள ஒரு சுவாரசியமான விஷயம் இந்தப் பாடலில் உண்டு.
'மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன' (காத்திருந்த கண்களே - கண்ணதாசன்),
'விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே' (வைரமுத்து),
'வோ நைன் த்வார்ஸே தன்மே ஆக்கே மன்மே ஜ்வாலா ஜலாத்தீ ஹை' (அவள் விழி வாயில் வழியாக உடலுள் நுழைந்து மனதில் ஒளியேற்றுகின்றாள் - ஜாவீத் அக்தர்).
மூன்று பிரபலங்கள் ஒரே கோணத்தில் கற்பனை செய்திருக்கிறார்கள். இலக்கியம் அறிந்தோர்கள் இன்னமும் சில உதாரணங்களை சொல்லக்கூடும்.

ஒரு தேவையற்ற விஷயம்:
மோட்டோரெல்லா செல்பேசியை அங்கங்கே 'ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட்' செய்திருக்கிறார்கள். குறிப்பாக மோட்டோரெல்லா V3ஐ. படப்பிடிப்பு நடந்தபோது அது விலையுயர்ந்த செல்பேசியாக இருந்திருக்கக்கூடும். இப்போதுதான் தவணை முறையில் தாக்குகிறார்களே :) ஃப்ளிப் ஓப்பன் செல்பேசியை வைத்திருக்க டானாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை :) ஆசாத்பாய்கூட அதைத்தான் வைத்திருக்கிறார் :)


மொத்தத்தில் அமிதாபை நினைவில் நிறுத்திக்கொண்டு புதிய டானைப் பார்த்தால் படத்தில் சுவாரசியம் இருக்காது, இவர்கள் செய்திருக்கும் செலவைப் பார்த்து வேண்டுமானால் வியந்துபோகலாம்.

அன்றைக்கு அளவான பட்ஜெட்டில் குழந்தைகளைக் காப்பாற்ற மும்பை அடுக்குமாடிகளுக்கிடையே பிரான் நடந்தார். இன்றைக்கு கோலாலம்பூரின் இரட்டைக் கோபுரங்களுக்கிடையே அதையே அர்ஜுன் ராம்பால் செய்கிறார்.

தெருப்பாடகன் அமிதாபை அறிமுகம் செய்யும் காட்சியில் சாதாரணமாக 'ஈ ஹை பம்பய் நகரியா தூ தேக் பப்புவா' என மும்பைத் தெருக்களில் ஆடவைத்தார்கள். இன்றைக்கு, வானுயர்ந்த கணபதி சிலையும், கடற்கரையும், நடனப் பெண்களுமாக பணத்தை வாரியிறைத்து தெருப்பாடகன் ஷாருக்கை அறிமுகம் செய்கிறார்கள்.

சும்மாவேனும் ஒரு விடுதியின் அறைக்குள் ஹெலன் நடனமாடினார். கரீனா நடனமாடும்போது சன்னல் வழியே இரவு நேரத்தில் ஜொலிக்கும் ரெட்டைக் கோபுரம் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் இவர்கள் செலவழித்திருக்கும் பணம் தெரிகிறது.

பரிந்துரை:
1. ஷ்யாம் பெனகல், இந்திய சினிமா, கலைப்படம் என்றெல்லாம் பேசுபவர்கள் டானைத் தவிர்த்துக்கொள்ளலாம். அவர்களுக்கு இதில் ஏதுமில்லை.

2. நாற்பது அகவைகளைக் கடந்திருப்போர்கள், அமிதாபின் டானையும் பார்த்தோர்கள், ஒரு விவரத்திற்காக இதனைப் பார்க்கலாம். ஒருவேளை இன்னமும் ஜீனத், ஹெலனின் நளினங்களில் மூழ்கிக் கிடப்பவராக இருந்தால் புதிய டானைப் பார்க்காமலிருப்பதே சிறந்தது.

3. எத்தனை வயதானால் என்ன, வணிகப் படங்களின்மேல் ஈர்ப்பை வைத்திருக்கிரீர்களா? டான் உங்களுக்காகத்தான்.

4. உங்களுக்கு 30 வயதிற்கும் குறைவா...அறிவு ஜீவித்தனமான :) சிந்தனையெல்லாம் கிடையாதா...பாடல்களை உரத்த சத்தத்தில் வைத்துக் கேட்பவரா...உடனே எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு டான் பார்த்துவிடுங்கள்.

டான் தொடர்பாக நான் எழுதியிருக்கும் இரண்டு கட்டுரைகளின் சுட்டிகள்.

http://ennam.blogspot.com/2006/09/don.html

http://www.tamiloviam.com/unicode/09140606.asp

அன்புடன்
ஆசாத்

Comments

அட்டகாசமா எழுதியிருக்கீங்க...

//வானில் பறக்கும் சண்டைக் காட்சியில் அதிகமான ஜேம்ஸ்பாண்ட் நெடி. ரோஜர் மூர் (மோர்?!) என்றோ செய்ததன் மறுபதிப்பாக அதனைச் செய்யவேண்டிய அவசியம் இப்போது என்னவென விளங்கவில்லை.

கோலாலம்பூர் வீதிகளில் வெள்ளை உடை ஆள்கள் மோட்டார் சைக்கிளில் வருவதும், ஆம்புலன்ஸை அப்படியே கொக்கிபோட்டு தூக்கிச் செல்வதும்கூட ஹாலிவுட் சமாசாரங்களே. பிரம்மாண்டத்தைக் காட்ட ஃபரான் அக்தருக்கு இது தேவைப்பட்டிருக்கிறது. //
ஒண்ணு மறந்துடறீங்க... நம்ம நாட்ல இங்கிலிஷ் படம் பாக்கறவங்க ரொம்ப குறைவு... இல்லை அதை பார்த்தாலும் ஷாருக் செய்யும் பொழுது ப்பார்க்க சந்தோஷப்படுபவர்கள் அதிகம். அவர்கள்தான் டார்கெட்டட் ஆடியன்ஸ்... கண்டிப்பாக அவர்களை திருப்தி படுத்தும்...
Boston Bala said…
---ஆசாத்பாய்கூட அதைத்தான் வைத்திருக்கிறார் ---

நீங்க டானா!! :)) சொல்லவேயில்லையே ; )

---'மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன' ---

சம்பந்தமில்லாவிட்டாலும் உடனடியாக நிழலாடியது:
'விழிகள் மேடையாம்;
இமைகள் திரைகளாம்...
மைதடவும் விழியோரம் மோகனமாய் தினமாடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்'

---கோடம்பாக்கத்தில் அப்ரெண்டீஸாக இருக்கும் பயிற்சியாளரால் இதைவிட சிறப்பான சண்டைக் காட்சிகளை அமைக்கமுடியும்.---

: ) உண்மைதான்


கலக்கல் விமர்சனம்.
அருமையான விமர்சனம். அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்க.

ஷாரூக்குக்காகவும் பிரம்மாண்டத்துக்காகவும்தான் படம் இன்னும் ஓடுகிறது. நாள்முழுதும் இந்தப் பாடல்களையே கேட்டுட்டு படத்தைப் பார்த்தவுடன் பாடல்கள் அதிகம் இனிக்கவில்லை.

பாஜீகரிலிருந்து முகபாவத்தை இன்னமும் ஷாரூக் மாற்றவேயில்லை. அதுவே போரடிக்கிறது. அதோடு முகத்தில் தெரியும் அளவுக்கு நடிப்பில் முதிர்ச்சி தெரியவில்லை. ஷாரூக்குக்கான ஸ்டைல் டானுக்கு சரிவரவில்லை. அஜய் தேவ்கனோ...அபிஷேக்கோ... இல்லை நம்ம ஆளு ஹிருத்திக்கோ டானாகியிருக்கலாம். (ஹிருத்திக்கை வில்லனாக பார்ப்பதற்காக காத்திருக்கிறேன். தூம் வரட்டும். பார்ப்போம்.)

அர்ஜுன் ராம்பாலையும் தலைவி இஷாவையும் வீணடித்ததில் செம கடுப்பு. அதோடு கரீனாவை பார்த்தால் சாதாரணமாகவே கடுப்பாகும் எனக்கு நல்லதொரு பாடலை அவரை வைத்து வீணடித்திருப்பதில் செமத்தியான கடுப்பு. இஷாவை ஆட வைத்திருந்தாலும் நன்றாயிருந்திருக்கும்.

பிரம்மாண்டத்திலும் தொழில்நுட்பத்திலும் பெரிய திரையில் பார்ர்க்கும்போது சபாஷ் போட வைக்கிறார் பர்ஹான். ஆனாலும் போன இரண்டு படங்களில் இருந்த முழுமை பர்ஃபெக்ஷன் இதில் இல்லை.

கிளைமேக்ஸ் வேறுவிதமாக எடுத்திருக்கலாம் வில்லன் வேறொருவராக இருந்திருந்தால். இரானியையும் ஓம்பூரியையும் பார்த்தவுடனேயே சிரிப்புதான் வந்தது. பின முன்னா பாயும் மலாமால் வீக்லியும் என்ன மாதிரியான படம். என்னமோ நிறைய ஏமாற்றங்கள்.
Anonymous said…
சமீபத்தில் நரன் எனும் மோஹன்லால் நடித்த மலையாளப்படம் பார்த்தேன், அதில் காடும் காடுசார்ந்த ஒரு கிராமத்தில் அநியாயங்களை தட்டி கேட்கும் ஒரு பாத்திரத்தில் மோஹன்லால் நடித்துள்ளான்.( மரியாதை குறந்ததற்க்கு காரணம் படம் பார்த்தால் புரியும்)முதல் பத்தாவது நிமிடத்தில் காட்டில் மரம் வெட்டுமிடதிற்க்கு லோடு ஏற்றவரும் தமிழ்நாட்டு லாரி டிரைவர்களுக்காக உள்ளூர் சாய்கடைகாரன் சாயாக்கடை பெயரை தமிழிலும் எழுதுவதற்க்கு மோகன்லால் எதிர்ப்பு தெரிவித்து பேசும் மிகவும் கீழ்தரமானது.வார்த்தை படம் பார்த்து எழுதவும்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...