Skip to main content

பெருநாள் தொழுகையும் மழைநீரும்

பெருநாள் தொழுகையும் மழைநீரும்

நான் குடியிருக்கும் பகுதியிலிருக்கும் பள்ளிவாசல் அத்தனை பெரிதன்று. குன்றத்தூர் சாலைக்கு வந்து மாங்காடு செல்வதென்றால் எந்தச் சாலையில் திரும்புவீர்களோ அதில் நூறுமீட்டர் சென்றதும் இடப்புறமாக இருக்கும் சிறிய கட்டடம்தான் எங்கள் ஜமாத்தின் பள்ளிவாசல். தோராயமாக நூறு நபர்கள் வரையில் நெரிசலில்லாமல் தொழலாம். அதற்கு மேலென்றால் மொட்டைமாடிக்குதான் செல்லவேண்டும்.

பெருநாளன்று அதிகமாகக் கூட்டம் கூடுமென்பதால் மாடியில் பந்தல் போட்டு கோரைப்பாய்களை அடுக்கி வைத்திருந்திருக்கிறார்கள். நேற்று பெய்த மழையில் பாய்களெல்லாம் ஈரமாகி, மாடி முழுதும் நீர் தேங்கிக் கிடந்தது. சமமான தரையாக பூசப்படாததால் தண்ணீர் ஓட வழியில்லாமல் அங்கங்கே சிறிதுசிறிதாக தேங்கிக் கிடந்தது.

காலையில் யாரையாவது ஏற்பாடு செய்து தளத்தைச் சுத்தப்படுத்தியிருக்கலாம், எப்படியோ தவறவிட்டுவிட்டார்கள், தாமதமாகத்தான் ஒரு நபரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கூட்டம் அதிகமாவதை உணர்ந்ததும் மாடிக்குச் சென்றேன். மாடியில் இரண்டாவது ஆளாக நான் சென்றிருக்கிறேன். தண்ணீரைத் துடைக்க வந்த நபர் தென்னந்துடைப்பத்தால் நீரைத் தள்ளிக்கொண்டிருந்தார். தேவைப்படும் நேரத்தில் களமிறங்கிவிடுவது என் வழக்கம். இன்னொரு துடைப்பத்தை எடுத்து நான் தள்ளத் துவங்கினேன். தளத்திலிருந்து ஓட்டை (கூடல்வாய்) வரையில் நானும் கூடல்வாயின் அருகில் தேங்கும் நீரை அவருமாக விறுவிறுவெனத் தள்ளினோம். மிச்சம் மீதமிருக்கும் தண்ணீரின் மேல் சாக்குப்பைகளைப் போட்டு ஒற்றியெடுத்தோம். அது கதைக்கு உதவாது போலத் தோன்றியது. அத்தனை எளிதில் ஈரம் உலர்வதாகத் தெரியவில்லை.

கீழே இடம் கிடைக்காத சிறுவர்கள் மேலே வரத் துவங்கினார்கள். கதைக்கு உதவாத சமாசாரத்தை எப்படித் தொடர்வது என்னும் யோசனையில் ஒரு பையனிடம் காசைத் தந்து அருகிலிருக்கும் கடையிலிருந்து ஸ்பாஞ் வாங்கிவரச் சொன்னார். சாக்குப்பையைவிடவும் ஸ்பாஞ்ஜால் உறிஞ்சி எடுத்துப் பிழிந்தால் விரைவாக தண்ணீரைத் துடைத்துவிடலாம் என்பது அவரது யோசனை. ஸ்பாஞ் வாங்கப்போன சிறுவன் வருவதற்கு நேரமானதால், என்னுடன் சேர்ந்து தண்ணீரைத் தள்ளியவர் கீழே போனார். நான் மட்டும் தனியாக சாக்குப்பையால் நீரை ஒற்றியெடுக்கும் வேலையைத் தொடர்ந்தேன். பழக்கமில்லாத வேலையாதலால் வியர்த்துபோய் சட்டை, கைலியெல்லாம் தொப்பலாக வியர்வையும், தெறித்த தண்ணீருமாக உருவம் மாறிப்போனேன்.

அப்பொழுது மேலே வந்த இன்னொரு நபர் என்னை வேலைக்கு வந்த ஆள் என நினைத்து அங்கே கொஞ்சம் துடை, இங்கே பார் தண்ணீர் இருக்கிறது என மேற்பார்வை பார்க்கத் துவங்கினார். பெரியவராக இருந்தார். ஓரிருவர் தவிர மற்ற ஜமாத்தார்களுக்கு என்னைத் தெரியாது; எனக்கும் மற்றவர்களைத் தெரியாது. அதனால் அவரையும் குறை சொல்லமுடியாது. சரி பெரியவர் சொல்கிறார் கேட்போமே...ஒவ்வொன்றாகச் செய்தேன்.

கூட்டம் வரத் துவங்கியதும் நனைந்த பாய்களைக் கீழே அனுப்பிவிட்டு, நனையாத பாய்களை மேலே எடுத்துவரச் சொன்னோம். அதற்குள் ஸ்பாஞ் வாங்கப்போனவர் வந்து இன்னமும் இரண்டு பேரை அழைத்தார். மற்றவர்களிடம் பணியை ஒப்படைத்துவிட்டு முகம், கைகாலெல்லாம் கழுவுவதற்காக கீழே சென்றேன்.

மீண்டும் மேலே வந்து பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தேன் நானறிந்த ஒன்றிரண்டு நபர்களைக் காணவில்லை. தண்ணீரைத் தள்ளியவர் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். புன்னகைத்தப்டியே அவரருகில் சென்று எங்கள் வழக்கப்படி ஆரத்தழுவி வாழ்த்துச் சொன்னேன். மெதுவாக வண்டியை (டிவிஎஸ் எக்ஸெல் சூப்பர்தான் - வேறு பெரிய வண்டியெல்லாம் கிடையாது) எடுத்து மிகமிகக் குறைவான வேகத்தில் சைக்கிள்காரர்களையும் முந்தவிட்டு, வழுக்கும் களிமண் பாதையில் சர்க்கஸ் சாகசங்கள் புரிந்து ஓட்டி வந்தேன்.

மகளிருக்கான பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் சென்றிருக்கும் துணைவியாரும் குழந்தைகளும் இன்னமும் வரவில்லை. தெரிந்தவர்களுக்கெல்லாம் தொலைபேசியில் வாழ்த்து சொல்லிவிட்டு, சிலருக்கு இன்னமும் முயற்சி செய்துகொண்டு...விடுமுறையில் வரும் எனக்கு, இன்னொருவர் எங்கள் ஜமாத்தில் அறிமுகமாகியிருக்கும் சின்ன சந்தோஷத்தில் இதோ இதனை எழுதிக்கொண்டு...

கற்றது:
உதவி செய்கையில், நாம் உதவிதான் செய்கிறோம் என்பது பிறருக்குத் தெரியாமல் அவர்கள் நம்மை அதிகாரம் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போதும் எரிச்சலடையாமல் பொறுமையாக நாம் செய்யும் வேலையைத் தொடரவேண்டும்.


அன்புடன்
ஆசாத்

Comments

திரு ஆசாத்
ரம்ஜான் தின வாழ்த்துக்கள்.
ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்.

=இஸ்மாயில் கனி
ஜித்தா, சவுதி அரேபியா.
நன்று. நல்ல வேலை.
நல்லதொரு பாடம்.

ஆசாத்ஜீ உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துகள்.
நோன்புத் திருநாள் வாழ்த்துக்கள். பொதுப்பணி செய்யும் போது ஏற்படும் உணர்வுகளையும், அப்போது நமக்கு இருக்க வேண்டிய உளப்பாங்கையும் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.

அன்புடன்,
இராம.கி.
நல்ல பாடம்தான். ஈத் முபாரக் ஆசாத் பாய்.
Boston Bala said…
ரம்ஜான் வாழ்த்துக்கள்.

---பெரியவர் சொல்கிறார் கேட்போமே...ஒவ்வொன்றாகச் செய்தேன். ---

எனது பக்குவத்தை எடை போடவும் சிந்திக்கவும் வைத்தன.
இனிய குமார்,

நன்றிகள்.

*

இஸ்மாயில் கனி,

நன்றிகள்.

மதீனாவிலிருந்து ஜித்தாவுக்கு மாற்றலாகியுள்ளீர்களோ. ஜித்தா வந்ததும் தொடர்புகொள்வேன்.

*

மதுமிதாஜி,

நன்றிகள்.

*

இராம.கி. அய்யா,

பெருநாளன்று நல்ல பாடம் கிடைத்தது. வாழ்த்திற்கு நன்றிகள் அய்யா.

*

இலவசக் கொத்தனார்,

நன்றிகள்.

*

இனிய பாலா,

வாழ்த்திற்கு நன்றிகள்.

எனது வரிகள் நண்பரின் சிந்தனையைத் தூண்டியது மகிழ்வாக இருக்கிறது

*

அன்புடன்
ஆசாத்
எனது அன்பான இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!

எல்லாம் வல்ல் இறைவன் உங்கள் நல்லுள்ளத்திற்கு நல்லருள் புரிவானக, ஆமீன்!!
gulf-tamilan said…
ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்!!!
Anonymous said…
// என்னைத் தெரியாது; எனக்கும் மற்றவர்களைத் தெரியாது. அதனால் அவரையும் குறை சொல்லமுடியாது. சரி பெரியவர் சொல்கிறார் கேட்போமே...ஒவ்வொன்றாகச் செய்தேன். //

25 வருடங்களுக்குப்பின் தொலைபேசி மூலம் கல்லூரி நட்பைப் புதுப்பித்துக்கொண்ட தோழியின் மகளின் திருமணத்திற்குச் சென்றிந்தேன். தோழியை நேரில் சந்திக்கும் முன் திருமண மண்டபத்தில் இருக்கைகளை வரிசையாகப் போட உதவிய என்னை இதுவரை பார்த்திராத தோழியின் மகள் இந்த இருக்கையை இப்படிப் போடுங்கள் அந்த இருக்கையை அப்படிப் போடுங்கள் என்று சற்றே அதிகாரம் செய்ய நானும் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், தங்களைப்போன்ற மனநிலையில்தான் இருந்தேன். பின்னர் அறிந்த தோழியும் அவரின் மகளும் மிகவும் வருத்தப்பட்டது தனிக்கதை.
:-)
Subbaraman said…
அற்புதமான செயல்..தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
murali said…
ஆஸாத் சார்,
"தேவைப்படும் நேரத்தில் களமிறங்கிவிடுவது என் வழக்கம்"

ஜெத்தாவில் நடைபெற்ற இந்தியத் திருநாள் நிகழ்ச்சியில்,
பனியனோடு நின்று,பேனரில் ஆணி அடித்துக் கொண்டிருந்த ஒருவர், அதன் பிறகு கோட்டு சூட் அணிந்து, லேப்டாப்பும் கையுமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது நினைவுக்கு வருகிறது.
புகழ்ச்சி என இப் பின்னூட்டத்தை நிராகரிக்க வேண்டாம்.
அதுதான் நமது முதல் சந்திப்பு, ஆகவே பதிந்தேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
லொடுக்கு,

கல்ஃப் தமிழன்,

அனானி,

சுப்பராமன்,

நன்றிகள்.

*

இனிய முரளி,

பழசை நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்
Anonymous said…
Idd mubarak, ungal saevai paratukuriyathu :)
nagoreismail said…
தரையை மட்டுமா சுத்தப் படுத்டியிருக்கிறீர்கள், உங்கள் மனதை எவ்வளவு அழகாக சுத்தப்படுத்தி வைத்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள், நாகூர் இஸ்மாயில்
இந்நிகழ்வில் படம் காட்டாமல் பாடம் கற்கும் பக்குவமான தங்கள் மனதை அறியமுடிகிறது.

பயனுள்ள பதிவு. அனுபவத்தினைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
மனதுக்கு நிறைவை தந்த பதிவுக்காக நன்றி ஆசாத் அவர்களே. உங்கள் வீட்டில் நோன்புக் கஞ்சி குடிக்க நான் வந்தபோது மனதுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

ரம்ஜான் கரீம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
இனிய
நாகூர் இஸ்மாயீல்,
ஹரிஹரன்,
டோண்டு சார்,

நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...