Skip to main content

நடிகை ஸ்ரீவித்யா மரணம்

தோற்றம்: 24.7.1953
மறைவு: 19.10.2006

புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஸ்ரீவித்யா அவர்கள் இன்று மரணமடைந்தார் (தகவல்: சன் செய்திகளில் ஃப்ளாஷ் ந்யூஸ், தி ஹிண்டு). 77-78இல் மதுர கீதம் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த நடிகை (சிறப்பு விருது) விருதினைப் பெற்றார் என தி ஹிண்டு செய்திக்குறிப்பு சொல்கிறது.

ஸ்ரீவித்யாவின் தாயார் பிரபல பாடகி எம்.எல்.வசந்த குமாரி (ஆடாத மனமும் உண்டோ - படம்: மன்னாதி மன்னன்) என்பதை பலர் அறிவார்கள். தந்தையார் 'விகடம்' கிருஷ்ணமூர்த்தி (தகவல்: தி ஹிண்டு).

எம்.ஆர்.பி. - எம்.ஆர்.பைரவி (அபூர்வ ராகங்கள்). ஸ்ரீவித்யாவின் பெயரை எங்கு படித்தாலும், அவர் படங்களில் தோன்றும் காட்சியைப் பார்த்தாலும், ஒரு வினாடிக்காவது எம்.ஆர்.பி. என்னும் அந்தப் பாத்திரம் நினைவில் தோன்றி மறையும். 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' (வாணி ஜெயராம்). திரையிலும் அதனை உயிரோட்டமுள்ள பாடலாக மாற்றியதன் பெருமையை இயக்குனருடன் சேர்ந்து ஸ்ரீவித்யாவும் பங்கு போட்டுக்கொள்வார். அந்தப் படத்தில் ஸ்ரீவித்யா கமலஹாசனுடன் பலப்பரீட்சை (ஆர்ம் ரெஸ்லிங்) செய்யும் காட்சி சென்னையின் சில சுவர்களை அலங்கரித்தது.

குழந்தை நட்சத்திரமாக திருவருட்செல்வரில் அறிமுகமான இவர், குமாரியானதும் தமிழில் முதலில் தோன்றியது அனேகமாக நூற்றுக்கு நூறு (இயக்கம்: கே.பி.). கல்லூரி மாணவி பாத்திரம். குற்றவாளியாகப் பழி சுமத்தப்பட்ட பிரகாஷ் (ஜெய்சங்கர்) மீது மேலும் ஒரு குற்றத்தைச் சுமத்தும் மாணவியாக நடித்திருப்பார். கல்லூரி மாணவியை ஆசிரியர் தவறான முறையில் நெருங்கும்போது தப்பித்து ஓடும் மாணவி இறைந்து கிடக்கும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஓடுவாளா, விட்டால் போதுமென்று ஓடுவாளா என்னும் குறுக்குக் கேள்வி விசாரணையின்போது எழுப்பப்பட, தலையைக் குனிந்து நிற்கும் மாணவியாக நடித்திருப்பார்.

சொல்லத்தான் நினைக்கிறேன். சொல்லத்தான் நினைக்கிறேன்! உள்ளத்தால் துடிக்கிறேன்! பாடலில் ஒவ்வொரு பத்திக்கும் ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மைகளைக் காட்டும் இயக்குனர் (கே.பி.) இவரது தன்மையைக் காட்டும்போது அடுப்பில் பால் பொங்குவதைக் காட்டியிருப்பார். கதையமைப்பின் முன்பகுதியில் அதிக நேரத்தை சமையலறையில் கழிக்கும் பாத்திரமாக அவர் சித்தரிக்கப்பார்.

பாடலில் ஸ்ரீவித்யாவின் பாத்திரம் காட்டப்படும் வரிகள்:
ஆசை பொங்குது பால்போலே - அவன்
அனல்போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் - கொஞ்சம்
குளிரும் விதம் - அவன்
அணைப்பானோ! இல்லை மாட்டானோ!


வீட்டிற்கு வந்த விருந்தினர் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்படும்போது, சமையலறையே தனது எல்லை என்றிருக்கும் இவர் மீது விருந்தினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, விருந்தினர் சன்னலைக் கடக்கும்போது ஓசையுடன் சன்னலில் குவளையை நகர்த்தி வைப்பதும், விருந்தினர் சிவகுமார் நின்று இவரிடமும் சொல்லிக்கொண்டு போவதும் அத்தனை எளிதில் மறக்க முடியாத காட்சிகள்.

இவரது காலகட்டத்தில் அறிமுகமாகி / நடிக்க வந்து ஒத்த வரவேற்பு பெற்றிருந்த சில நடிகைகளுக்கு திரை வாய்ப்புகள் முழுதுமாக இல்லாமற்போய்விட்ட நிலையில், இவர் உடல் நலக் குறைவு ஏற்படும் வரையில் திரையில் தோன்றியது இவருக்குக் கிடைத்த பாக்கியம்.

முன்னணிக் கதாநாயகியரின் வரிசையில் இடம்பெறாமற்போனாலும், திறமையான நடிகை என அனைவராலும் ஏற்கப்பட்டவர். பின்னாளில் குணச்சித்திர நடிகையாக பல படங்களில் தோன்றியவர் இன்று நம்மிடையே இல்லை. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவேன்.

அன்புடன்
ஆசாத்

Comments

VSK said…
May her soul rest in peace!
எனக்கும் மனம் வருத்தமாப் போச்சு. ஆனா நோயின் கொடுமை & வலியிலிருந்து விடுதலை.

என்ன ஒரு சோகமான வாழ்க்கை அவுங்களுது.
எனக்கு ரொம்பப் பிடிச்ச மனிதரில் ஒருத்தர்.

அவுங்க நடிச்ச எத்தனையோ மலையாளப்படங்களைப் பார்த்துருக்கேன். எவ்வளவு லட்சணமான முக அழகு. ஹூம்...

ஆமாம். திருவருட்செல்வரில்தானே இளம்பெண்ணா கயிலாயத்தில் சக்தி நடனம் ஆடுவாங்க. இல்லே வேற படமா?
ஓகை said…
மிகப் பிரபலமான ஒருவரின் மகளாகப் பிறந்திருந்தும், தனக்கென பல தனித்திறமைகளைக் கொண்டிருந்தும் அவரது இல்வாழ்வு சிறப்பாக அமையவில்லை என்று படித்திருக்கிறேன்.

வருத்தமாக இருக்கிறது.
ரொம்ப கஷ்டமாயிருந்தது அய்யா. எவ்வளவு தடவை பார்த்தாலும் அலுக்காத படங்கள் அபூர்வ ராகங்கள் & சொல்லத்தான் நினைக்கிறேன். பாலசந்தர் படம் அப்போ adults only . விடலை வயசிலே அபூர்வ ராகங்கள் பார்த்தப்போ ஸ்ரீவித்யா மேலே புரியாத பிரமிப்பு இருந்தது. இப்போ அந்த 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' கேட்டா ஒரு பாட்டுல அவங்க பைரவியோட வாழ்க்கையையே கண் முன் கொண்டு வந்த மாதிரி இருக்கு. நிறைய பேருக்கு இனிய moments கொடுத்துட்டு அவங்க சொந்த வாழ்க்கையில் போராடியது இன்னும் கஷ்டமாயிருக்கு.
நானும் செய்தி அறிந்து வருந்தினேன். ஏசியாநெட்டும் கைராளியும் இந்த செய்தியையும் மலயாள நடிக,நடிகையரின் அஞ்சலிகளையும் ஒளிபரப்பின. திருவனந்தபுரத்தில் மரணம் சம்பவித்ததால் ஒருவேளை தமிழ் சானல்கள் ஒளிபரப்பவில்லையோ ?

அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.
எஸ்.கே.ஜி,

நன்றிகள்.

*

துளசியக்கா,

நானும் திருவருட்செல்வர் காட்சிகளை நினைவுபடுத்திப்பார்க்கிறேன் - பிடிபடமாட்டேனென்கிறது. வடபழனி - ராஹத் ப்ளாசா - அட்ரியம் கடையில் சற்று முன்னர் தேடிப்பார்த்தேன், திருவருட்செல்வர் குறுந்தகடு இல்லை.

கிடைத்தால் விவரமாக ஸ்ரீவித்யாவின் பங்கேற்பு குறித்து எழுதுகிறேனே.

*

நடராசன் அய்யா,

எம்.எல்.வியின் நினைவாக கே.பி. இவருக்கு எம்.ஆர்.பி. பாத்திரத்தைத் தந்திருப்பாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

*

சுவாமி,

புற்றுநோயின் வலி சமாசாரங்கள் குறித்து ஓரளவிற்கு கேள்விப்பட்டிருக்கிறேன். துளைத்து எடுத்துவிடும் என்பார்கள். வலியை மறக்கடிக்கும் மருந்துகளின் வீரியம் குறைந்தால் உடனே சித்ரவதையைப் போல் வலியை உணரத் துவங்குவார்களாம்.

துளசியக்கா சொன்னதுபோல் - இறப்பும் ஒருவகையில் விடுதலைதான். வாழ்வதற்குதான் மண்ணில் வந்தோம் என்பதை மறுக்கவில்லை; சில நேரங்களில் சில நினைப்புகள்.

*

மணியன்,

நேற்று இரவே சன் செய்திகளில் விவரம் சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு நான் தொலைக்காட்சியைப் பார்க்கவில்லை, சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

இன்று இரவு பார்க்கலாம்...நம்மவர்கள் ஏதாவது சொல்கிறார்களா என.

அன்புடன்
ஆசாத்
Sivabalan said…
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசாத்ஜி, இப்போ, ரெண்டு மூணு நாளுக்கு முன்னால் குமரன் போட்ட "இலவுகாத்த கிளி" என்ற பதிவில் சொல்லத்தான்
நினைக்கிறேன் படத்தையும், ஸ்ரீவித்யாவின் கண்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அதற்குள் :-(
இனிய சிவபாலன்,

நேற்று அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது.

நல்ல நடிகை.

*

உஷாஜி,

சிலருக்கு போராட்டமே வாழ்க்கை என்றாகிவிடுகிறது. அவர்களுள் இவரும் ஒருவர்.

அன்புடன்
ஆசாத்