Skip to main content

கூண்டுக்கிளி - திரைப்படம் எனது பார்வையில்

கூண்டுக்கிளி (1954)

நடிப்பு: எம்.ஜி.ராமச்சந்தர் (இப்படித்தான் எழுதியிருக்கிறார்கள்), சிவாஜி கணேசன், பி.எஸ்.சரோஜா
இசை: கே.வி.மகாதேவன்
திரைக்கதை, வசனம்: விந்தன்
இயக்கம்: ராமண்ணா

எம்.ஜி.ஆர். - சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் என்பதைத் தவிர வேறு எதற்காகவும் ஏன் இந்தப் படம் குறிப்பிடப்படுவதில்லை என்பதை நினைத்து வியப்பாக இருக்கிறது. கடைசிக் காட்சியில் கதாநாயகியின் மீது பாலியல் வன்முறையில் இறங்கும்போது வில்லனின் கண்களை மின்னல் தாக்கி அவன் குருடாகிப் போகின்ற திரை மசாலாவைத் தவிர்த்துப் பார்த்தால், ஐம்பதுகளின் சாயலுக்கு இப்படம் மாறுபட்ட கதையமைப்பு கொண்டதாகவே தோன்றுகிறது. ஐம்பதுகளின் சாயல் என்று இங்கே குறிப்பிடுவது மந்திரி குமாரி, மர்மயோகி, மலைக்கள்ளன் வகையறாக்களை.

பராசக்தியின் பாதிப்போ என்னவோ தெரியாது, 'வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடே'யின் மறுபதிப்பாகத்தான் படத்தின் ஆரம்ப வசனம் ஒலிக்கிறது.

'காதலையும் வீரத்தையும் இருகண்களெனப் போற்றி வளர்த்த என் கன்னித் தமிழ்நாடே, நீ காதல் கொண்ட நெஞ்சுக்கு நஞ்சூட்டும் வஞ்சகியாக எப்போது மாறினாய்?' தற்கொலை முயற்சிக்கு முன்னால் இப்படிப் பக்கம் பக்கமாக வசனம் பேசுவது அப்போதைய திரையில் அவசியப்பட்டிருக்கிறது. தற்கொலை முயற்சிக்கு கயிற்றில் சுருக்குப் போடுவதும் இரயில் சத்தம் கேட்டதும் கயிற்றைத் தூர எறிந்துவிட்டு தண்டவாளத்தில் தலையை வைத்துக்கொள்வதும், தன்னை நோக்கி வரும் சாவைப் பார்த்துக்கொண்டே வெறித்தனமாக சிரிக்கத் துவங்கி பின்னர் அப்ப்டியே அழுகையாக மாற்றுவதுமாக சிவாஜி கணேசன் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.

தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஜீவாவை (சிவாஜி) அவனது பழைய நண்பன் தங்கராஜ் (எம்.ஜி.ஆர்.) காப்பாற்றும் காட்சியிலிருந்து படம் துவங்குகின்றது. மங்களாவைப் (பி.எஸ்.சரோஜா) பெண்பார்க்கப் போனதுமுதல் அவள் மேல் பைத்தியமாகிப்போகிறான் ஜீவா. குனிந்த தலை நிமிராமல் இருக்கும் மங்களா ஜீவாவைப் பார்க்கவில்லை; ஜீவாதான் மங்களாவைப் பார்க்கிறான். இதுதான் கதைக்கான முடிச்சு.

ஜீவாவின் அப்பாவுக்கு இந்த சம்மந்தம் பிடிக்காமற்போகிறது, காரணம், அந்தஸ்து. அதனால் பெற்றோரைப் பகைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மங்களாவை மணந்துகொள்ளும் ஆசையுடன் புறப்படுகிறான் ஜீவா. ஏழ்மையின் காரணமாக வீட்டை விற்றுவிட்டு மங்களாவின் குடும்பத்தினர் வேறெங்கோ சென்றுவிட்டதை அறிந்து மனம் கலங்குகின்றான். மங்களாவைத் தேடி சில வருடங்கள் அலைந்து, கடைசியில் அவள் கிடைக்கவேமாட்டாள் என நம்பிக்கை இழந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோதுதான் ஜீவாவை அவனது பழைய நண்பன் தங்கராஜ் காப்பாற்றுகின்றான், தனது வீட்டிற்கும் அழைத்துச் செல்கிறான். அங்குதான் ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

தங்கராஜின் மனைவியாக மங்களா. ஜீவா துடிக்கிறான். அவனால் எதையும் சொல்லமுடியவில்லை. எதையுமே அறியாத தங்கராஜும், மங்களாவும் ஜீவாவின் மேல் அன்பைப் பொழிகிறார்கள். ஒரு விதிவசமான பொழுதில், ஜீவா, மங்களாவின் கையைப் பிடித்து இழுத்துவிடுகிறான். மங்களா, ஜீவாவை மன்னிப்பதோடு, 'இன்னமும் நீங்கள் அவளை நினைத்து வாடுவதால்தான் இப்படித் தவறு செய்ய முற்படுகிறீர்கள். திருமணம் செய்துகொள்ளுங்கள் எல்லாம் சரியாகிப்போய்விடும்' என்கிறாள். மனப்புழுக்கமடைந்த ஜீவா அவர்களை விட்டுப் பிரிய முற்படுகின்றான்.

ஜீவாவிற்கும் மங்களாவிற்கும் தகாத உறவு இருப்பதாக அக்கம்பக்கத்தார்கள் பேச, அதனால் ஏற்படும் கைச்சண்டையில் ஒருவனின் மண்டையை உடைத்துவிட்டு தங்கராஜ் சிறைக்குச் செல்கிறான். ஜீவாவை மங்களாவுக்கும் தனது மகனுக்கும் காவலாக இருக்கச் சொல்லிவிட்டுச் செல்வதால் ஜீவாவால் மங்களாவைப் பிரியமுடியாமற்போகிறது. அப்பொழுதுதான் ஜீவாவின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றப்படுகிறது. மணவாழ்வை விட்டுவிட்டு தன்னுடன் வந்துவிடும்படியாக வற்புறுத்துகின்றான். மகனையும் உடன் வைத்துக் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறான். மங்களா சீறுகிறாள். ஜீவா பணம் தருவதை நிறுத்துகிறான். மங்களா வீதிக்கு வருகிறாள். ஜீவா வெறிபிடித்தவனாகி தொல்லை தந்துகொண்டே இருக்கிறான்.

ஒருகட்டத்தில் ஜீவாவின் உதவியில்லாமல் காரியம் நடக்காது என்னும் நிலையில் மங்களா ஜீவாவைத் தேடிப்போகின்றாள். அவன் அவளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த நினைக்க, வெளியே மழை உக்கிரமாகப் பெய்கையில் கதவருகில் மங்களா ஓடிச் செல்ல, தொடர்ந்து வரும் ஜீவாவின் கண்களை மின்னல் தாக்கிவிடுகின்றது. சிறையிலிருந்து வெளியே வரும் தங்கராஜ் விவரங்கள் அறிந்து ஜீவாவைக் கொன்றுவிடும் நினைப்புடன் அவனைத் தேடி ஓடுகின்றான். குருடனாகிப் போன ஜீவாவும் சாவைத் தேடி ஓடுகின்றான். இருவரும் சந்தித்ததும் தங்கராஜ் ஜீவாவின் கழுத்தை நெறிக்கின்றான். பக்கத்து வீட்டுத் தோழியின் கெஞ்சலால் அவனது கொலை முயற்சி கைவிடப்படுகிறது.

தோழி ஜீவாவை கைத்தாங்கலாக அழைத்துப்போக - சுபம்.

விவரங்களை ஆவணப்படுத்தும் வழக்கம் நம்மிடம் குறைவாகவே இருப்பதாக எனக்குப்படுகிறது. வீதிக்கு வரும் மங்களாவிற்கு அடைக்கலம் தரும் வயதான பிச்சைக்காரர் வேடத்தில் நடித்தவரின் பெயர் தெரியவில்லை. பெயர் காட்டும்போது விவரங்கள் எழுதும் வழக்கம் நம்மிடம் இருந்திருந்தால், இப்படி மண்டை காயும் நிலை வந்திருக்காது. 'எனக்குத் தெரியல்லே எஜமான் எனக்குத் தெரியல்லே' பாடலைப் பாடுபவர்தான் குசலகுமாரியா, பைத்தியக்காரி வேடத்தில் நடித்திருப்பவர் குசலகுமாரியா என்னும் சந்தேகத்தைத் தீர்த்க்துவைக்க எனது தந்தையார் இல்லை.

ராத்திரிக்கு புவ்வாவுக்கே லாட்டரி! - வாழ்க்கை
லைட் எரியப் பணம்தானே பேட்டரி!
- இப்படி அந்தக்காலத்திலேயே ஆங்கிலத்தைக் கலந்து குத்துப்பாடலின் தன்மைக்குப் பாடல் எழுதிய கவிஞர் விந்தனா, கா.மு.ஷரீஃபா, தஞ்சை ராமையாதாஸா, மருதகாசியா என்பது தெரியவில்லை. அடிமைப்பெண்ணில் தாயில்லாமல் நானில்லை - ஆலங்குடி சோமு எனத் தெளிவாகக் காட்டியிருப்பார்கள். காதல் ஓவியத்திலும் குயிலே - பஞ்சு அருணாசலம் எனக் காட்டியிருக்கும் நினைவு. அப்படியல்லாமல் பாடலாசிரியர்களின் பெயரை மட்டும் காட்டுவதால் எது யார் எழுதியதென்பதே ரசிகனுக்குத் தெரியாமல் போகிறது. பழைய இசைத்தட்டை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் நூறுரூபாய் கொடுத்துத் தேடிப்பார்த்துதான் விவரங்கள் எடுக்கவேண்டுமென இணைய நண்பர் சொன்னார்.

கே.வி.மகாதேவன் அப்பொழுதே பல புதுமைகளைச் செய்திருக்கிறார்.
வாங்க எல்லாருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை அன்பாகக் கொண்டாடுவோம்
- இந்தத் தீபாவளிப் பாடலின் முன்னே ஒலிக்கும் ஜணணஜணணஜண கிணணகிணணகிண ஒலி, லகானின் ஏ.ஆர்.ரகுமானை நினைவுபடுத்துகிறது. மிகையாக எழுதுவதாகத் தோன்றினால் எங்காவது தேடிப்பிடித்து இதனைக் கேட்டுப் பாருங்கள். சென்னையிலிருப்போர்களென்றால் இன்னும் ஒருவாரத்திற்குள் என்னுடன் ஒரு தேதியை முடிவுசெய்துகொண்டு எனது வீட்டிற்கு வந்தீர்களென்றால் இந்தப்பாடலைப் போட்டுக்காட்டுகிறேன், நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்.

பாடலே இல்லாமல் அரேபிய இசைக்கு ராகினியின் நடனம் ஒன்றும் இருக்கிறது. பின்னாளில் அடிமைப்பெண்ணில் கே.வி.மகாதேவன் இசையமைத்த 'ஏமாற்றாதே ஏமாற்றாதே'யில் ஒலிக்கும் அரேபியப் பின்னணி இசையெல்லாம் அவர் நமக்குக் காண்பித்த மாதிரி மட்டுமே என்னும் எண்ணம் இந்த நடனத்திற்கான இசையைக் கேட்டால் உண்டாகிறது.

சொல்ல வல்லாயோ - கிளியே
சொல்லடி வல்லாயோ
அவசியம் கேட்கவேண்டிய பாடல்.

கொஞ்சும் கிளியான பெண்ணை
கூண்டுக்கிளியாய் நினைத்து
காலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா!
- இதனைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. வரிகளைக் கவிஞர் எழுதியதால் ஒவ்வொரு காட்சியாகத் தேடித் தேடிப் படம் பிடித்திருப்பதாகத் தோன்றுகிறது.

வசனமும் காட்சியமைப்பும் சில இடங்களில் கைகோத்திருக்கும் விதம் அற்புதம். மங்களாவின் கையைப் பிடித்து ஜீவா இழுத்தபோது அவள் கைகளிலிருந்த வளையல் நொறுங்கிவிடுகிறது. அவள் அவனத் திருத்த முயற்சி செய்கிறாள். அவனும் தவறை உணர்கிறான்.
'மற்றவர்களைப் போல் மண்ணில் தோன்றி மறையும் பெண்ணல்ல நீ!
விண்ணில் தோன்றாமல் தோன்றும் தெய்வம் நீ!
அன்பு, அடக்கம், தியாகம், பொறுமை எல்லாவற்றுக்கும் ஒரே பெயர் இருக்கவேண்டுமென்றால் அது மங்களாவாகத்தான் இருக்கமுடியும்!'
அவளைப் பார்த்துப் பேசிவிட்டு அவள் சென்ற பிறகு உடைந்த வளையல்களை எடுத்து ஒவ்வொரு துண்டாக இணைத்து மேசையின்மேல் வளையலைச் செய்துவிட்டுப் போவதும், அறைக்கு வருகின்ற தங்கராஜ் அந்த வளையல்களை வேறொரு பெண்ணின் வளையலாக நினைத்துக்கொள்வதும், இவற்றை மங்களா கணவனிடம் மறைப்பதுமாக சட்சட்டென்று மாறுகின்ற காட்சியமைப்புகள். இந்தக் காலமென்றால் சிறந்த எடிட்டிங்கிற்கான பரிசு பெற்றிருக்க வாய்ப்பு உண்டு.

இத்தனை இருந்தும் இந்தப் படத்தைப்பற்றிக் குறிபிடுவோர்கள் சொல்லும் ஒரே வாசகம் 'எம்.ஜி.ஆர். - சிவாஜி சேர்ந்து நடித்த ஒரே படம்.' அது ஒரு முக்கியமான செய்திதான், மறுக்கவில்லை. ஆனாலும், அதனுடன் சேர்ந்து வசனத்திற்காகவும், பாடல்களுக்காகவும், இசைக்காகவும், நண்பனின் மனைவியை பெண்டாளத் துடிக்கும் வில்லத்தனமான நடிப்பிற்காகவும் (சிவாஜி), முகத்தை மறைக்காமல் அழுதிருக்கும் எம்.ஜி.ஆருக்காகவும், முத்திரை பதித்த நடிகர்கள் ஈ.ஆர்.சகாதேவன், கள்ளபார்ட் நடராஜன், முத்துலெட்சுமி, சகஸ்ரநாமம் இப்படியானவர்களெல்லாம் சிறுசிறு பாத்திரங்களில் வந்து அழுத்தமான நடிப்பைக் காட்டிச் சென்றதற்காகவும்கூட இந்தப் படம் பேசப்படலாம்.

பழைய படங்களில் ஆர்வமிருப்போர் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம் இது.

அன்புடன்
ஆசாத்

Comments

நல்ல விமரிசனம்.

ரொம்ப வருஷமாச்சு பார்த்து.

ஆமாம், //சென்னையில் இருந்தால் ஒரு வாரத்துக்குள் //

சிங்கையிலிருந்து திரும்பி வந்தாச்சா?

வசனகர்த்தா விந்தன் ( கோவிந்தன்) எங்களுக்குத் தெரிந்தவர்தான்.
ஜோ/Joe said…
நல்ல அலசல்!
சிவாஜி ரசிகனான நானே இன்னும் பார்க்காத படம் .உங்கள் அலசல் பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டது .நன்றி!
துளசியக்கா,

சிங்கையிலிருந்து திரும்பிவிட்டேன். சென்னையில்தான் இருக்கிறேன்.

ஹா..விந்தன் உங்களுக்குத் தெரிந்தவரா. சந்தோஷம். அற்புதமா எழுதியிருக்காருங்க. ஜீவா - மங்களா உரையாடலெல்லாம் கோடிபெறும்.

ஜோ,

கண்டிப்பா தேடிப்புடிச்சி பாத்துடுங்க. எம்.ஜி.ஆர். - சிவாஜி ரெண்டு பேருமே போட்டி போட்டுக்கிட்டு வசனம் பேசியிருக்காங்க.

பிரசன்னா,

பாராட்டிற்கு நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்
நல்ல விமர்சனம். இப்ப கூண்டுக்கிளி படத்தைப் பார்க்க வேணும் போல இருக்கு.
G.Ragavan said…
கூண்டுக்கிளி படம் வெளிவந்த பொழுதிலேயே தியேட்டரை விட்டுத் தூக்கப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டது என்று கேள்விப்பட்டுள்ளேன். சிவாஜி எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சண்டை தாங்காமல்தான் என்று கேள்வி.

எம்.ஜி.ஆர் நல்லவனாக நடிக்க சிவாஜி வில்லனாக நடிக்க என்ன மனத்துணிவு இருந்திருக்க வேண்டும் சிவாஜிக்கு. ம்...படம் கிடைத்தால் பார்க்க வேண்டும். வீசிடியில் கிடைக்கிறதா என்ன?
http://img474.imageshack.us/my.php?image=sivaji18uo2.gif

கூண்டுக்கிளியில் சிவாஜி எம்ஜி ஆரும் தோன்றும் காட்சி மேலுள்ள இணைப்பில் பார்க்கலாம்
Anonymous said…
அருமையான விமரிசனம். டிவிடியில் கிடைத்தால் கட்டாயம் தவறவிடமாட்டேன்.

//இயக்குனர் ராமையாவின் மனைவிதான் சரோஜா//
பி. எஸ். சரோஜா அக்காலத்தில் பிரபல நடன ஆசிரியர் பண்டிட் போல்நாத் என்பவரின் மனைவி. போல்நாத் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார் (1949இல்). அவருடன் சென்ற சரோஜா படுகாயமடைந்தார். இதனால் வாழ்க்கை படத்தில் சரோஜாவுக்குப் பதில் வைஜயந்திமாலா நடிக்க வேண்டிவந்தது. இது ஒரு தகவலுக்காக. சரோஜா பின்னர் மறுமணம் செய்திருக்கலாம்.
ஆமாம். பி.எஸ்.சரோஜாதான். இயக்குனர் ராமையா அல்ல, டி.ஆர்.ராமண்ணா. டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர்.

ராமண்ணா, பி.எஸ்.சரோஜாவுக்குப் பிறகு இன்னொரு திருமணமும் செய்து கொண்டார். அந்த மனைவியின் பெயரும் சரோஜாதான், ஈ.வி.சரோஜா தான்.

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே.." :-)
நிர்மல்,

எம்.ஜி.ஆர். குறைவாகத்தான் வருகிறார். ஆனாலும், வசனங்களைக் கேட்கும்போதும், நடிப்பைப் பார்க்கும்போதும்...எம்.ஜி.ஆராலும் இப்படியெல்லாம் செய்திருக்கிறார். பின்னாளில் தடம் மாறிவிட்டது என நினைக்கத் தோன்றுகிறது.

*

வெற்றி,

பழைய படங்களில் ஆர்வமிருப்பின் தாராளமாகப் பார்க்கலாம்.

*

ஜி.ராகவன்,

குறுவட்டு மலேசியாவில் கிடைக்கிறது. சென்னையில் இன்னும் தேடவில்லை.

*

சின்னக்குட்டி,

நன்றிகள்.

*

கனக்ஸ்,

தகவலுக்கு நன்றிகள்.

*

பிரகாஷ்ஜி,

வருகைக்கு நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்
Anonymous said…
Padam paartathillai , aanal thaanagal eshutiya vimarsanam arumai :)
Boston Bala said…
படம் பார்க்கிற உத்தேசமில்லை. பார்த்த நிறைவை பதிவு தருகிறது : )
Anonymous said…
நான் ஒரு ஐந்து வருடங்களுக்கு முன் இந்த திரைப்படத்தைப் பார்த்தேன் , நல்ல திரைப்படம், ஆனால் நான் பார்த்த முடிவு , சிவாஜிக்கு கண் போன பிற்பாடு , மனம் திருந்தி உடனே மன்னிப்பும் கேட்கிறார், எம்.ஜி.ஆர் சிறையில் இருந்து வெளியேறி வந்தவுடன் நடந்ததை அறிந்து சிவாஜியை மன்னித்து அவருடனேயே வைத்துக் கொள்கிறார் , இப்படி ஒரு சுபமான ஒரு முடிவையே நான் கண்டேன் ! தாங்கள் கூறியதைப் போல் ஒரு முடிவை நான் காணவில்லையே , ஒரு வேளை படத்திற்கு இரண்டு க்ளைமாக்ஸா என்ன?

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...