Skip to main content

வாளமீனுக்கும் வெலாங்குமீனுக்கும்

கானா மீனா?

சவூதி அரேபியாவில் உட்கார்ந்துகொண்டிருப்பதால் வாள மீனுக்கும் வெலாங்கு மீனுக்கும் நடக்கும் கல்யாணத்தை ரசிப்பதற்கு இத்தனை நாள்கள் ஆயின. இதற்கு முன்னரே எத்தனையோ கானாப் பாடல்கள் தமிழ்த்திரையில் பிரபலமாகியிருந்தபோதும் இப்படி அனைவரையும் இழுத்து வந்து ஆட்டம் போடவைத்திருக்கும் பாடலில் என்ன விசேஷம் இருக்கிறது என குறிப்பாக எதையும் சொல்ல இயலவில்லை; ஆனால், பாடலின் வெற்றிக்கு கானா உலகநாதன் மட்டுமே காரணம் அல்லர் என்பது எனது தெளிவு.

கானாவின் வரிகளுக்குச் செல்லுமுன், பின்னணி இசை குத்துப்பாட்டிற்காக உறுமினாலும், நளினமான சில நடன அசைவுகளை மாளவிகாவிற்கு அமைத்துத் தந்த நடன அமைப்பாளர் ஷோபி அவர்களுக்கு முதல் பாராட்டு.

·பால்குனி பாதக்கின் 'மேரி ச்சூனர் உடுஉடு ஜாயே' பாடலை அப்படியே நகலெடுத்த 'எந்தன் சேலையும் நழுவியதேனோ' (நடிகை: காலஞ்சென்ற பிரதியுக்ஷா) பாடலைப் பார்ப்பதுபோலவே பல காட்சிகள் இருந்து, சிறிது நெளியவைத்து, சமீபத்திய ரசனைக்கும் நமக்கும் தலைமுறை இடைவெளி இருப்பதை உணர்த்தியபோதும், ஷோபிக்காக இரண்டு வரிகள் கானா எழுதாமல் இருக்க முடியவில்லை.

ஆட்டம்போடுது மாளவிக்கா ஷோபிக்கா! - அய்ய
அப்பீட் வுட்டது சைதாப்பேட்ட டோபிக்கா!
தேட்டம் போடுது தெனந்தெனமும் ஷோவுக்கா! - அய்ய
தேடி வந்தது த்யேட்டராண்ட டாவுக்கா!


*

சென்னைக் கடற்கரையோரத்தில் எழுதப்பட்ட கானாக்கள் சிலவற்றில் மீன்வாசம் இருக்கும். அது ஒரு கையொப்பம் போல.

மீனின் பெயர்களும் சென்னையின் சுற்று வட்டாரங்களில் அதிகமாக புழங்கப்படும் பெயர்களாகவே இருக்கும். காரப்பொடி, செங்கரா, சென்னாக்குனி, மடவை, தும்பிலி, வவ்வாலு, வஞ்சிரம், பாறை, எறா, சுறா, கெளுத்தி, விலாங்கு, உளுவை, வாளை இப்படியாக பல மீன்களின் பெயர்கள் கானாக்களில் அடிக்கடி தலையைக் காட்டும்.

'வாராயோ வெண்ணிலாவே' பாடலை கானாவாக மாற்றி 'வாராயோ வாளமீனு கேளாயோ கெளுத்திமீனு' என்று பாடப்பட்ட பழைய கானா ஒன்று சென்னை அயோத்தியா குப்பம், ராயபுரம் பகுதிகளில் (எழுபதுகளின் மத்தியில்) வலம் வந்தது.

'இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே'

என்னும் வரிகள்

'மீச மொளச்சது எறா! நடுக்கடலுல கெடைக்குது சொறா!'

என்று மாற்றப்பட்டதைக் கேட்டால் மனம் விட்டுச் சிரிக்கலாம்.

இப்படியான மீனவக் கையொப்பம் சரிவிகிதத்தில் அமைந்தது 'வாளமீனுக்கும் வெலாங்குமீனுக்கும் கல்யாணம்' பாடலின் வெற்றிக்கு இன்னொரு காரணம்.

கொத்தவால்சாவடியின் கையொப்பம் தாங்கி வந்த தேவாவின் பாடலுக்கு (கொத்தவால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி) வரவேற்பு இருந்து அதுவும் பிரபலமானபோதிலும், வாளமீனில் இருக்கும் கூடுதல் ஈர்ப்பிற்குக் காரணம் மேற்சொன்ன நடன அமைப்பு.

கானாக்களை எழுத்தில் படிப்பதைவிடவும், பாடலாகக் கேட்கும்போது சென்னைத் தமிழின் தன்மை தனியாகத் தெரியும். உதாரணமாக, 'வாங்க', 'போங்க' என்னும் வார்த்தைகளும், மரியாதைக்காக 'ங்க' சேர்த்துக்கொள்ளும் சில வார்த்தைகளும் கானாவில் உச்சரிக்கப்படும்போது, என்னைப் போன்ற கானா ரசிகர்கள் 'வாஹ் வாஹ்' சொல்லி ரசிப்போம். எங்களுக்கு அதனுடனான ஈர்ப்பு அப்படி. கொத்தவால்சாவடி லேடி பாடலில்,

'காஜா பீடி கவ்னர் பீடி கறீம் பீடிங்கோ! - அத
வலிச்சுப் பாத்த பசங்களெல்லாம் ரொம்பொக் கேடிங்கோ!'


என்று ஒரு அடி வரும். இதில் உச்சரிக்கப்படும் அந்த 'ங்கோ', ங்கோவென்று நின்றுவிடாமல், லேசாக 'ங்கோவ்' என்று அந்த 'வ்'வை அரை அளவிற்கும் குறைவாகவே உச்சரித்து இழுக்கும்போது கிடைக்கும் நிறைவு, கேட்டு ரசிக்க வேண்டியது.

அதே 'ங்கோவ்' இழுவை, வாளமீனுக்குமிலும் உண்டு.

'பஞ்சாயத்து தலைவருன்னா சுறாமீனு தானுங்கோ(வ்)! - அவரு
.சொன்னபடி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ(வ்)!
....
மாப்பிள்ள வாளமீனு பழவேற்காடு தானுங்கோ(வ்)! - அந்த
மணப்பொண்ணு வெலாங்குமீனு மீஞ்சூரு தானுங்கோ(வ்)!'

வரிகளில் உலகநாதன் சென்னைத் தமிழின் கானா மொழியை அட்டகாசமாகக் கையாண்டிருக்கிறார்.

நாட்டியம், வாத்தியம் என்று இயைபுத்தொடையாக கானாவின் இலக்கணம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதான நாட்டியம்! - அய்ய
மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்!


கானாக்களில் மரபாக எழுதப்படும் இன்னொரு உத்தி, 'டா' சேர்த்துக்கொள்வது. சென்னையில் புழங்கிய பழைய கானா ஒன்றில்,

'சப்பி சாராயம் எனக்கு வாணா(ம்)! - இப்போ
நடக்குத*டா* அமிஞ்சிக்கர கானா' என்று வரிகள் துவங்கும். இதில் நடக்குதடாவை உச்சரிக்கும்போது ந*ட*___வில் 'ட'வின் உச்சரிப்பில் லேசாக 'டு'வின் சாயல் தெரிந்ததென்றால் அது அசல் சென்னை உச்சரிப்பு. இந்த 'டா' சேர்க்கும் உத்தியும் வாளமீனுக்குமில் உண்டு. '... -

'அங்க - தேரு போல போகுத*டா* ஊர்கோலக்காட்சியும்! ஊர்கோலக்காட்சியும்! வாளமீனுக்கும்...'

*

மீனவர்களின் சாட்டையான திருக்கை(மீனின்) வாலும் கானாக்களில் அங்கங்கே தலைகாட்டும். திருக்கை என்னும் மீனின் வால் முன்னொரு காலத்தில் சாட்டையாக மீனவர்களால் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. திருக்கை வாலை வைத்திருப்பது குற்றம் (அறுபதுகளின் இறுதியில்) என்று காவல் துறையால் சொல்லப்பட்டதாக சில ஆதாரமற்ற செய்திகளைக் கேட்டதுண்டு. திருக்கை வாலை சாட்டையாக வைத்திருப்பதுதான் குற்றமே தவிர கானாவில் உபயோகிப்பது குற்றமன்று.

'இந்த திருமணத்த நடத்தி வைக்கும் திருக்க வாலு ஆருங்கோ(வ்)?
இந்த மணமக்கள வாழ்த்துகிற பெரிய மன்சன் யாருங்கோ(வ்)?
தலைவரு திமிங்கலந் தானுங்கோ(வ்)!..வாளமீனுக்கும்..'


மொத்தத்தில், இசையும் (சுந்தர் C. பாபு?), பாடலும் (கானா உலகநாதன்), பாடியவரும் (கா.உ), ஆடியவரும் (மாளவிகா), ஆட்டுவித்தவரும் (ஷோபி), இயக்குநர் + ஒளிப்பதிவாளர் எல்லாருமாகச் சேர்ந்து என்னைப் போன்ற ரசிகர்களை மூன்று நான்கு நிமிடங்களுக்கு கானா உலகில் மிதக்கவிடுகிறார்கள்.

இந்தப் பாடல் இடம்பெற்ற சித்திரம் பேசுதடி படத்தைப் பற்றி...சிலர் ஆஹா ஓஹோ என்கிறார்கள். எனக்கு...சொல்வதற்கு ஒன்றுமில்லை.

அன்புடன்
ஆசாத்

மீன் குறிப்பு:
நமது ஊர் செங்கரா மீனுக்கு சவூதி அரேபியாவில் என்ன பெயர் தெரியுமோ?

சுல்தான் இப்ராஹீம்.

(சத்தியமாங்க! சவூதிக்கார வலைப்பதிவர்களைக் கேட்டுப்பாருங்களேன்)

Comments

Unknown said…
சுல்தான் இப்ராகீம் இங்கேயும் தான். ஆனா இங்கே கிடைக்கற சுல்தான், கொஞ்சம் பெருசாவே இருக்காருங்க. நம்ம ஊரு சங்கரா மாதிரி சுவையும் (வாசனையும் தான்) இல்லை.

விலாங்கு மீன் கானா பாட்டை இவ்வளோ பிச்சி போட்டு, கருவாடு கணக்கா ஆக்கிப்புட்டீங்கோவ்வ்வ்வ்!
இனிய துபாய்வாசி,

சுல்தான் இப்ராஹீம் - இதனுடன் ஓமானி என்னும் இன்னொரு வார்த்தையையும் சேர்த்திருக்கிறார்களா என்று கேளுங்கள். ஏனென்றால், ஓமான் நாட்டின் கடற்கரைப்பகுதிகளில் கிடைக்கும் சுல்தான் இப்ராஹீமுக்கு அதன் பெயருடன் சேர்த்து ஓமான் கடற்கரையில் பிடித்ததால் 'ஓமானி' என்று கூடவே ஒரு அடையாளத்தை சேர்ப்பார்கள்.

அந்த ஓமானி செங்கராவின் வயிற்றுப்பகுதி மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். மற்றபடி உடல் அனைத்தும் நமது செங்கராவேதான்.

இந்த சுல்தான் இப்ராஹீம் ஓமானி சுவையில் கொஞ்சம் குரைவாக இருக்கும்.

அன்புடன்
ஆசாத்
Anonymous said…
பதிவு நல்லா இருந்துது. ரசிச்சு படிச்சேன். இங்க குவைத்துலையும் சங்கரா கெடைக்குது (பேரெல்லாம் தெரியாதுங்க. இங்க குவைத் மீன் மார்கெட்ல அரபிங்க கூட தமிழ்ல கூவி விக்கராய்ங்க). ஆனா நம்ம சென்னை சங்கரா பக்கத்துல கூட நிக்க முடியாது இந்த சங்கரா.
கொஞ்சம் லேட்டா தான் படிச்சேன் பாய்.வுட்டு பூந்து வெளையாடிரீங்க. சுண்டகஞ்சி, சால்னா, ஜபரு, சீனு வாசத்தோடு வேறு நல்ல கானா இருந்தால் சொல்லுங்கள். தேவாவின் பாடல்கள் கானா சாயலடிக்கும், ஆனால் கானா இல்லை. வாளமீனு அசல் கானா. 'தலைவாசல்' படத்தில் வரும் தெனந்தோரும் ரிக்ஷாயோட்டி பொழைக்கறேன் கானா வகையறா என்று என் சிற்றறிவுக்கு படுகிறது. மத்தபடி, நிறைய பேர்கள் மீனுக்கும், பெண்களுக்கும் இருக்கின்றன கானாவில் ;)
இனிய சாபு அண்ணன்,

மன்னிக்கவும். உடனே இந்த நகரைக்கான பதிலைச் சொல்லவில்லை.

நகரை வேறு, செங்கரா வேறு.

இனிய நாராயண்,

சில நேரங்களில் கானா பாடல்களின் சாயலாகத்தான் எனக்கும் வரிகள் வருகின்றனவே தவிர, அச்சு அசல் கானாக்கள் அதுவாக எப்போதாவது அமைகின்றன.

இதனை ஒப்புக்கொள்ளவேண்டும். எனது கானாக்களைப் படித்த இரண்டு நண்பர்கள் இதனை என்னிடம் சொன்னபோது அப்படியே ஒப்புக்கொண்டேன் (மறுத்துப்பேச முடியாது இல்லீங்களா).

அதுவாக அமைகிறது.

கவிதையாகப் படித்தாலும், கானாவாகப் பாடினாலும் சென்னையின் கானா அமைவது கொடுப்பினை.

கொஞ்சம் சமயம் கொடுங்கள் பழைய கானாக்கள் சிலவற்றை தூசுதட்டி எடுத்துப் போடுகிறேன்.

அன்புடன்
ஆசாத்
ஓகை said…
பாய்,
பாட்டு கொஞ்சம் ·பேமஸ் ஆவ சொல்லயே பதிவு போடுவன்னு நெனச்சன். அத்த மாதிரியே சொம்மா சூப்பரா போட்டுகின பாரு பதிவு. நம்ம புதுபேட்ட பொன்சாமி ஆக்சிடண்ட் ஆன அம்பாசிட்ர பார்ட் பார்ட்ட கல்ட்டி கட பரப்பி வச்சிகினாமாரி அலகா புட்டு புட்டு வச்ச பாய். சலாம் பாய் சலாம்.

நீங்கள் மிகச் சரியாகக் குறிப்பிட்டது போல பாடலின் வெற்றிக்கு பல காரணிகள் இருக்கின்றன. எனக்கு கூடுதலாகத் தெரிகின்ற ஒரு அம்சம் பாடலின் அடி நாதத்தில் ஒரு பாரம்பரிய இசைகூறு தென்படுகிறது. உலகநாதன் தமிழ்த்திரைக்கு ஒரு நல்ல வரவாக இருப்பார் என நம்புவோம்.

செங்காரா - வழக்குத் தமிழில் சங்கரா - இதில் மட்டும் அந்த செதில் நீக்கும் சிரமம் இல்லையென்றால் இதன் விலை எங்கேயோ போய்விடும்.

அன்புடன்
நடராஜன்.
பாய்,
தூத்துக்குடியில் மீனவர் பகுதியில் இரண்டு வருடம் குடியிருந்த பழக்கத்தில் மீனவ நண்பர் ஒருவர் நன்றாக பதப்படுத்தப்பட்ட திருக்கை வால் ஒன்றினை பரிசாக அளித்தார்...எங்கே போயிற்றென்று தெரியவில்லை. ஆனால் அது சவுக்கு அல்ல. நல்ல தடி போல கடினமான ஒன்று.

தடை செய்யப்பட்ட ஒன்று என்று கேள்விப்பட்டதில்லை.

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...