Skip to main content

கவியரங்கக் கவிதை - மறுபதிப்பு

அன்புடையீர்,

சந்தவசந்தம் யாஹூ குழுமத்தில் நடக்கும் கவியரங்கில் கலந்துகொண்டேன். எனக்கு மிகவும் பிடித்தமான எண்சீர் விருத்தத்தில் கவிதை ஒன்றை எழுதினேன். கவியரங்கின் தலைப்பு கனவிலிது கண்டேன்.

எண்சீருக்காக இரண்டு வகையான தாளக்கட்டுகளை அமைத்துக்கொண்டேன்.

முதலில்,
கவியரங்கத் தலைவருக்காகப் பாடியதில் ஒவ்வொரு அரை அடியிலும்,
[தன.னா.னன] [தன.னா.னன] [தன.னா.னன] [தன்னா]
என்னும் தாளக்கட்டு வரும்.

கனி கனி கனி மா கனி கனி கனி மா என்பார்கள்

சில இடங்களில் 'தன' என்னும் தாளம் 'னா'வாகவும், 'னா' என்னும் தாளம் 'தன'வாகவும் ஒலிக்கலாம்.

ஆயினும், ஒவ்வொரு அரை அடியிலும் முதல் மூன்று வார்த்தைகளின் கடைசிச் சீர் 'னன'வாகவும் நான்காவது வார்த்தையின் முடிவு 'னா'வாகவுமே இருக்கும்.

இசைப் பாடல்களில் இப்படி 'தன'வும் 'னா'வும் மாறி ஒலிப்பது சகஜம்.

காட்டு 1:

மதன மா.ளிகை.யில் மந்.திர மா.லை.களாம்
உதயக் கா.லம்.வரை உன்.னத லீலை.களாம்

முதல் அடியில் யில் = னா, அதே இடத்தில் இரண்டாம் அடியில் வரை = னன.

காட்டு 2:

நில்லாமல் சுழலும் பூமியிது
எல்லாரும் நடிக்கும் மேடையிது
போட்.டேன் நானும் வேஷங்களை
படித்.தேன் வாழ்க்கைப் பாடங்களை

போட் = னா, படித் = தன.

இரண்டாவதாக,
கவிதைக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தாளக்கட்டு,

[தன.னா.ன] [தன்.னா.ன] [தா.னா] [தா.னா]
[தன.னா.ன] [தன்.னா.ன] [தா.னா] [தா.னா]


காய் காய் மா மா காய் காய் மா மா என்பார்கள்.

இதிலும் சொற்களில் முதலில், இடையில் தன, னா, தன் இவை மாறி ஒலித்தாலும் ஒவ்வொரு சொல்லின் முடிவும் ஓரெழுத்தாகவே இருக்கும்.

*

கனவிலிது கண்டேன்


தலைவருக்கு

கவிமாமணி புகழ்தாங்கிய பெரியோரிவர்1 என்னை
. கவிபாடிட அழைத்தாலது அடியேனிவன் பேறே!
செவிகேட்டிட ஒலிகூட்டிய மணிபோலொரு ஓசை
. சொன்னாரிவர் சந்தக்கலை தந்தாரிசை கேட்டேன்!
புவிமீதினில் திரைக்காதலன் கவிவார்ப்பதும் ஆரால்!
. புதுப்பேரொடு விருத்தந்தனில் விளையாடுவ தாரால்!
நவில்வேனொரு வணக்கந்தனை நல்லோர்திசை நோக்கி!
. நானும்கவி சொல்வேனிவர் தலைமைக்(கு)அழ கூட்டி!

1 - கவிமாமணி இலந்தை இராமசாமி


கவிதை

அவையோரின் முன்னேநான் கேள்வி வைப்பேன்
. ஆண்டாண்டாய்த் தொடர்கின்ற கேள்வி யாகும்
சுவையாகச் சொல்வீரோ பதிலால் என்னைச்
. சூடாக்கிச் செல்வீரோ அறியேன் அய்யா
எவையெல்லாம் கனவென்னும் தேற்றம் தேவை
. ஏனென்றா(ல்) உறக்கத்தில் நெஞ்சம் காணும்
அவைமட்டும் கனவென்றால் இதுவே என்றன்
. அடிகளிலே கடைசிச்சொல் லாகிப் போகும்!

விழிப்போடு சிந்தைக்குள் வேகத் தோடு
. வியர்வைக்குள் குளிக்கின்ற நாட்டத் தோடு
சுழித்தோடிப் பொருளீட்டும் மோகத்தோடு
. சுகந்தேடும் வாழ்க்கைக்குப் பாதை போட்டு
வழியெங்கும் தூங்காத கண்கள் கொண்டு
. வருவோரும் போவோரும் நாளும் இங்கே
செழிக்கின்ற செல்வங்கள் பொங்க வெண்ணிச்
. சேர்க்கின்ற கனவென்ன தூக்கத்(து) உள்ளா?

ஆழ்நிலையின் உள்ளேகி நம்மை நாமே
. அறியாமல் விழிப்பாவை வேகச் சுற்றில்2
வீழ்நிலையே கனவென்னும் விஞ்ஞா னத்தில்
. விழிக்கின்றேன் என்கனவோ வேறு போக்கில்
நானிருக்கும் நிலையுள்ளே கனவென் றாலே
. நல்லதொரு முன்னேற்றப் பாதை கண்டு
மேனிலையில் நல்லோர்கள் நட்பைப் பெற்று
. மெருகூட்டும் வாழ்வினையே காணு கின்றேன்!

2 - விழிப்பாவை வேகச் சுற்று - REM, Rapid Eye Movement

என்பாடல் திரையிசையில் பாடக் கேட்டேன்
. என்கவிகள் இளையோரை ஈர்க்கக் கண்டேன்
என்பாதை ஓரத்தில் ரசிகர் வந்து
. ஏடெடுத்துக் கையொப்பம் கேட்கக் கண்டேன்
அன்பான மொழிபேசும் ஆற்றல் பெற்றேன்
. அழகாகாகத் தமிழ்மேடைப் பேச்சில் வென்றேன்
முன்பாகச் சொன்னதுபோல் இவைய னைத்தும்
. மூடாத விழிக்கனவே! வெல்லும்! வெல்லும்!

*****

அன்புடன்
ஆசாத்

Comments

ஆசாத்உங்கள் கனவுக்கும்,தன்னம்பிக்கைக்கும் பிடிங்க பாராட்டும்,வாழ்த்தும்

ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்க முற்றுகையிடறப்ப பழகிய நண்பர்களை மறந்து விடமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்

வெல்க உங்கள்கனவும்,எண்ணமும்.

சந்தவசந்தத்துக்கு வர முடியவில்லை.
யூனிகோட் வந்ததும் கணினி முரசில் ஏதோ கோளாறு செய்கிறது.

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...