Skip to main content

குறுஞ்செய்திகளுடன் ஒரு ஈகைத் திருநாள்

குறுஞ்செய்திகளுடன் ஒரு ஈகைத் திருநாள்

சீக்கிரமாகவே பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு தயாராக வேண்டுமா?
ஆழ்வார்ப்பேட்டை திவான் சாஹிப் பள்ளிவாசலுக்குப் போகலாம்.

திர்லக்கண்ணி ஆள்களுடன் சேர்ந்து தொழ வேண்டுமா?
வெல்வெட் தொப்பி அணிந்து திருவல்லிக்கேணி லெப்பை பள்ளிக்குப் போகலாம்.

வெள்ளைச் சட்டை, வெள்ளைக் கைலி, 'ஜின்னா கேப்' சகிதமாக ராமநாதபுரம்
கீழக்கரை முதலாளிகளைப் பார்க்க வேண்டுமா?
அங்கப்ப நாயக்கன் தெருவுக்குப் போகலாம்.

அத்தர் மணக்க ஷேர்வானி சுருவால் உருதுக்காரர்களைப் பார்க்கவேண்டுமா?
ஐஸ் ஹவுஸ், ஜாம்பஜார், வாலாஜா என எங்காவது செல்லலாம்.

ஆஹ்ஹா, தாமதமாகிவிட்டதே என்னும் நினைப்பா?
இருசக்கர வாகனம் எதையாவது எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்று மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கும் மகா தண்ணீர்த் தொட்டி நீரில் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு கடற்கரையிலும் தொழலாம்.

இவற்றில் எதுவுமே இல்லாமல் பெருநாள் தொழுகை தொழுத சுவடே தெரியாமல் வீட்டிற்கு வரவேண்டுமா?
சவூதி அரேபியாவில் சேலை செய்யலாம்.

ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பழக்கம். இங்கே பெருநாள் என்பது மாலையில்தான் தெரியும். காலையில் தொழுகைக்குப் பின் சத்தம் போடாமல் வீட்டிற்கு வந்து உறக்கம்தான். ஒருமாதகாலமாக காலைச் சிற்றுண்டி இல்லாத வழக்கத்திற்கு ஆட்பட்டிருந்த உடம்பு, திடீரென்று காலைச் சிற்றுண்டி கிடைத்ததும் மயக்கமாகி கண்களைச் சுழட்டும்.

'அக்கடா' என சாயும்போது 'பீப் பீப் பீப் பீப்', மக்கா மதீனா பள்ளிவாசல் படம் போட்ட பெருநாள் வாழ்த்து செல்பேசியில் வந்திருக்கும். 'ஈத் முபாரக்' என தமிழிலும் செய்திகள் வரும், iniya perunaal vaazhthukkal என ஆங்கிலத்திலும் வரும். துபாய், குவைத், பஹ்ரைன், இந்தியா, சிங்கை என மூன்று திசைகளிலிருந்தும் மக்கள் குறுஞ்செய்தி அனுப்பினார்கள்.

'ஒண்ணரை அங்குல விசைப் பலகையில் பொறுமையாக எப்படியப்பா இப்படி தட்டச்சுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு,

'பாய்! நீங்க 6600வச்சு தட்டிக்கிட்டிருந்தா அப்படித்தான். கம்யூனிகேட்டர் வாங்கிடுங்கன்னு சொல்றோமில்ல, கேட்டாத்தான. காச மிச்சம் பண்ணாதீங்க பாய்! இல்லாட்டி வந்த மேசேஜ டெம்ப்ளேட்டா போட்டு 'செண்ட் மெனி' ஆப்ஷனுக்குப் போயி சர்ரு சர்ருன்னு தட்டி வுடுங்க, ஈசியா இருக்கும்.' என்னும் பதில் நேற்று இரவே கிடைத்துவிட்டது.

கம்யூனிகேட்டரின் காசுக்கு நான் அனைவரையும் தொலைபேசியில் அழைத்தே வாழ்த்து
சொல்லிவிடுவேனே என நினைத்துக்கொண்டேன்.

தொலை தொடர்பு வசதிகளால், இத்தனை நெருக்கமான நட்பு வட்டம் உருவாகியுள்ளதா, இல்லை, செல்பேசியின் நினைவகத்தில் (மெமரி) நமது எண் இருந்து செண்ட் ஆப்ஷனில் வாழ்த்துகள் வருகின்றனவா என்னும் அகழ்வாராய்ச்சியில் இறங்காமல், வாழ்த்து அனுப்பிய எல்லா நண்பர்களின் எண்ணையும் நானும் நினைவகத்தில் சேமித்துக்கொள்கிறேன்.

மாலையில் அனைவருக்கும் நன்றி சொல்லி செய்தி அனுப்பவேண்டும். 'செண்ட் மெனி' வழியாகத்தான் :)

இவைகளுக்கிடையே, 'dear azad bai...' என யாராவது வாழ்த்தினைத் துவங்கியிருந்தார்களென்றால் கிடைக்கின்ற ஈர்ப்பே தனி.

அன்புடன்
ஆசாத்

Comments

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...