அமானுடத்தின் மீதான பயம், ஆச்சரியம் இவற்றிலிருந்து நான் தப்பிப் பிழைத்தவன் அல்லன். எங்கள் சென்னை - அல்லிக்கேணி - மீர்சாகிப்பேட்டை - அமீருன்னிசா அறக்கட்டளையின் இடுகாட்டு வாயிலை இரவு நேரங்களில் கடக்கும்போது திகிலுடனும் கடந்திருக்கிறேன். பள்ளிப் பருவம் முடித்து சென்னை சத்யம், ஆனந்த், சஃபையர், சன் திரையரங்குகளுக்கு மாலைக் காட்சியோ இரவுக் காட்சியோ சென்றுவரும்போதும் அந்த வாயிலைக் கடப்பது வழக்கமாகிப் போனதால், மெள்ளமெள்ள திகில் விட்டுப்போனது. இப்படியான வழமைகளும், கொஞ்சம் தைரியமும், சற்றே வாழ்வின் மீதான பிடிப்பை ஒத்தி வைப்பதும் அமானுடத்தின் மீதான பயத்தை விலக்கி வைக்கும் போலிருக்கிறது. புரசைவாக்கத்தில் ஒரு சுருள் கதவின்மேல் (ரோலிங் ஷட்டர்) ஆயத்த ஆடைகளின் படத்தை வரைந்துவிட்டு, நள்ளிரவில் பொடி நடையாக 'தௌலத் ஆர்ட்ஸ்' தௌலத்துடன் புரசையிலிருந்து மீர்சாகிப்பேட்டைக்கு வரும் வழியில் மத்திய சிறைச்சாலைக்கு அருகில் இருக்கும் கிறித்துவ இடுகாட்டையும், முணுக்முணுக்கென விளக்கெரிந்த பாடிகாட் முனீஸ்வரர் ஆலயத்தையும் கடந்தபோது திகில் கொள்ளாததன் காரணம் அந்நேரத்தில் (வேலை இல்லாமல்) வாழ்வின் மீதான பிடிப்பு கொஞ...