Skip to main content

Posts

சென்னையின் சில முகங்கள் - மீரான் சாகிபு தெரு

மீரான் சாகிபு தெரு காசினோ திரையரங்கை ஒட்டிச் செல்லும் தெரு. 17'' கணினித்திரை சுவர்த்தாள் என்ன ஜுஜுபி. இந்தத் தெருவில் நுழைந்ததும் இடதுபுறத்தில் பதினாறடிக்கு எட்டடி திரைப்பட சுவரொட்டியை நின்று நெருங்கி நிதானமாகப் பார்த்து ரசிக்கலாம், யாரும் நம்மை அதிசயமாகப் பார்க்கமாட்டார்கள். சென்னையிலேயே சுவரொட்டியை இத்தனை நெருக்கமாக நின்று பொறுமையாகப் பார்க்கக்கூடிய இடம் இதுவாகத்தான் இருக்கும். நீண்ட சுவர் இன்னமும் விளம்பரதாரர்களின் குத்தகைக்குச் சிக்காமல் இலவசமாக திரைப்படச் சுவரொட்டிகளைத் தாங்கி நிற்கிறது. எதிரே கடையில் தாராளமயமாக்கல் திரைக்கவர்ச்சி வெளிப்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் நடிகைகள் ப்ளாஸ்டிக் உறை போடப்பட்டு தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பார்கள். பொது இடங்களில் புகை பிடிக்கமுடியாத நிலை இருந்தபோதிலேயே மீரான் சாகிபு தெரு மட்டும் விதிவிலக்கு. நமது கோல்டு ஃப்ளேக் கிங்ஸுடன் போட்டி போட்டுக்கொண்டு 555வும் சில்லறையில் விற்பனையாகும். வசவசவென திரைப்பட வினியோகஸ்தர்களின் அலுவலகங்கள் ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரையில் பரவிக்கிடக்கும். யாராவது வெள்ளை வேட்டி மனிதர்...

சென்னையின் சில முகங்கள் - ப்ராட்வே

சென்னையின் சில முகங்கள் - ப்ராட்வே பிறவி சென்னைக்காரன் என்று சொல்லிக்கொள்வதையும் நிரந்தர முகவரியாக சென்னை முகவரியைத் தருவதையும் தவிர வேறெந்த வரலாற்று விவரங்களும் சென்னையைப்பற்றி அறியேன். இருபத்தியிரண்டு வயது வரையில்தான் சென்னையில் ஜாகை. அதன் பிறகு வளைகுடா வாழ்க்கை தலையெழுத்தானதால், வருடத்தில் ஒருமுறையோ இருமுறையோ வந்து போகும் விருந்தாளியாகத்தான் சென்னையைப் பார்க்கிறேன். வழமையான வளைகுடா 'பந்தா' இல்லாமல் லுங்கியைக் கட்டிக்கொண்டு இருசக்கரத்தில் பறப்பதும், சலிக்காமல் பேருந்து, ஷேர் ஆட்டோ என ஜோதியில் கலப்பதும்தான் இன்னமும் சென்னையின் வாசத்தை என்னிடம் விட்டுவைத்திருக்கின்றன. ப்ராட்வே (1977): முதன்முதலில் மேட்டூர் அணைக்கட்டில் வேலைக்குச் சேர்ந்தபோது அதிகாலையில் மேட்டூரை அடைந்து நெரிசலே இல்லாத பேருந்து நிலையத்தைப் பார்த்து வியந்து நான் விழித்ததைப் போல சென்னைக்கு வந்தவர்கள் எத்தனை பேர் பரபரப்பைக் கண்டு விழித்திருப்பார்கள். பழைய பேருந்து நிலையத்தில் (பூக்கடை) இறங்கி காலார நடந்து குறளகம் வரையில் வந்து அப்படியே ப்ராட்வே க்குள் நுழைந்தால் இதுதான் உலகிலேயே குறுகலான சாலை என்று சத்தியம் செய்ய...

போட்டி முடிவுகள் - எனது எண்ணம்

போட்டி முடிவுகள் - எனது எண்ணம் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! வாக்களித்தவர்களுக்கு நன்றிகள். இந்த முறையும் வெற்றிக்கு அருகில்கூட எனது படைப்புகள் செல்லாததற்கு வருத்தம் கிடையாது என்று பொய் சொல்ல விருப்பமில்லை. வருத்தம் வந்தது, ஓரிரு நிமிடங்கள் சங்கடப்பட்டது இரண்டும் உண்மை. நண்பருடன் பேசும்போது, 'என்னப்பா நம்ம லெவல் அவ்வளவுதானா' என்றுதான் பேசினேன். ஆனால், அடுத்த நிமிடம் வழக்கம்போல சல்தா ஹை சொல்லிவிட்டேன். இந்தமுறை மரபுக்கவிதை வாக்குகளில் முன்னேறியிருப்பது மகிழ்வைத் தருகிறது. கானாவும் அதைத் தொடர்ந்து நிற்கிறது. உம்ரா ஜான் வாழ்வில் வெற்றி பெறாமல் நின்றதைப்போல உம்ராவைக் காதலித்த திரைச்சீலை கட்டளக்கலித்துறைக்கும் கானாவுக்கும் பின்னே தயங்கித் தயங்கி நிற்கிறது. கஜலை கட்டளைக்கலித்துறையும் கானாவும் பின்னே தள்ளிவிட்டன :) என்ன இருந்தாலும் உள்ளூர்க்காரர்கள் அல்லவா :) தீம்தீம்திமிதிமி தாளத்தில் ஒலிக்கும் தபேலாவின் ஜப்தால் இசையைக் கேட்க சுட்டி கொடுத்த படைப்பு பதினேழு பேர்களை ஈர்த்திருக்கிறது. முதல் பரிசு பெற்ற படைப்பிற்குக் கிடைத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு. நமக்குப் பிடிப்பது அனைவ...

ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி மரணம்

ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி மரணம் கே.பாலசந்தரின் புன்னகை திரைப்படம் நினைவிருக்கலாம். அத்தனை எளிதில் மறக்கக்கூடிய படம் அன்று. சத்தியத்தையே பேசும் கதாநாயகனாக ஜெமினி கணேசன் நடித்திருப்பார். தில்லு முல்லு வை நினைவிருக்கிறதா எனக் கேட்டபது சரியன்று. சிவாஜியும் ஜெமினி கணேசனும் நண்பர்களாக நடித்த திரைப்படம் ஒன்று இருக்கிறது, 'இமை தொட்ட மணி விழி இரண்டுக்கும் இடையினில் தூரம் அதிகமில்லை இருவரும் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை' பாடல் இடம் பெற்ற படம். 'கண்ணனிடம் குசேலன் கண்ட சுகம் இல்லை இல்லை கம்பனிடம் சோழன் கண்ட சுகம்' என நட்பைப் பாடிய பாடல். அநேகமாக படத்தின் பெயர் என்னைப் போல் ஒருவன். இப்படங்களின் மூல வடிவ இந்திப் பதிப்பின் இயக்குனர் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி மரணம் அடைந்தார். கடந்த ஜூன் மாதம் முதலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று மாலை நான்கரை மணியளவில் இயற்கை எய்தினார். 1922இல் கொல்கத்தாவில் பிறந்த முகர்ஜி 1945இல் லேப் அஸிஸ்டெண்டாக தனது திரையுலக வாழ்வைத் துவங்கியவர். அமிதாபும் ஜெயாவும் நடித்த அபிமான் படத்தை மறக்க முடியுமா? தேரி பிந்தியாரே சஜன் பிந்தியா ல...

சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு

இரட்டைச்சிலம்பம் இது எனது நூறாவது பதிவு. சிலம்பம் தந்த உடற்பயிற்சியையும் கவனக்கூர்மையையும் சில நாள்கள் அனுபவித்ததால் எனக்கு சிலம்பத்தின்மேல் கொஞ்சம் ஈர்ப்பு உண்டு. முறைப்படி பயின்று சண்டைக்கலையில் ஓரிரு படிகளைத் தொட்ட சமயத்தில் திடீரென்று சிலம்பத்தின் பக்கமே போகமுடியாமற் போனது. படிப்பும் அதனைத் தொடர்ந்த வேலை வாய்ப்புகளும் சிலம்பத்தைத் தொடும் வாய்ப்பை அறவே விலக்கிவைத்தன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு விட்டுப்போன விளையாட்டை பற்றிப் பிடித்தேன். அது ஜித்தாவில் நடைபெற்ற விழாவில் விளையாடுவதற்காக. விழா முடிந்ததும் விளையாட்டிற்கு மூட்டை கட்டியாகிவிட்டது. மீண்டும் தொய்வு. வலைப்பதிவு எழுதத் துவங்கியதும் சிலம்ப விளையாட்டின் துவக்கநிலை விளக்கங்களை ஒன்று , இரண்டு , மூன்று தொடர்களில் எழுதினேன். 'வீச்சு முறைகளில் அத்தனை தேர்ச்சி இல்லாமல் இதனைத் துவக்கிவிட்டோமா? இப்பொழுது முன்பு விளையாடியதைப் போல சுறுசுறுப்பாக விளையாட முடியுமா?' இப்படியான பல சிந்தனைகளில் சிலம்பத்தின் ஆழம் என்னை அச்சுறுத்த, தொடரை அப்படியே விட்டுவிட்டேன். இத்துடன் முன்னுரையை முடித்துக்கொண்டு விஷயத்...

தாவூத் இப்ராஹிம் - முகமாற்றம்

அன்புடையீர், பழைய செய்திதானென்றாலும் இன்று என்.டி.டிவியில் இது குறித்து வந்த செய்தித் தொகுப்பைப் பார்த்ததால் இதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். தாவூத் இப்ராஹிம் இந்திய அரசால் தேடப்பட்டுவரும் குற்றவாளி. இவரது பாகிஸ்தானிய பாஸ்போர்ட்டுகளின் எண்களைக் குறிப்பிட்டு பாகிஸ்தானிய அரசிடம் இந்திய அரசு கொடுத்திருந்தும் பாகிஸ்தானிடமிருந்து ஒத்துழைப்பு இல்லாமையால் தாவூதைப் பிடிக்கமுடியாத நிலை. அவற்றில் ஒரு பாஸ்போர்ட்டின் எண் KC2859011. இதில் தாவூதின் பெயர் ஆமிர்கான் என்று பதியப்பட்டுள்ளதாம். கராச்சியில் பணக்கார வர்க்கம் வாழும் வெவ்வேறு பகுதிகளில் ஐந்து வீடுகளின் முகவரிகள் குறிக்கப்பட்டு பாகிஸ்தான் அரசிடம் தரப்பட்டிருக்கிறது. இவை ஐந்தும் ஒரே சொந்தக்காரரின் பெயரில்தான் இருக்கின்றன. ஒரே நகரில் இத்தனை பணத்தைக் கொட்டி ஐந்து வீடுகளை வாங்கி வைத்திருக்கும் அந்த உரிமையாளர் யார் என்பதற்கும் பாகிஸ்தானிய அரசிடமிருந்து பதில் இல்லை. கராச்சியில் ரெயின்போ சென்டரில் ஒலி ஒளிப்பேழைகள் தயாரிக்கும் / விற்கும் பிரபலமான நிறுவனம் இந்திய வெளியீடுகளை எந்தவிதமான காப்புரிமையும் இல்லாமல் பதிப்பித்து வெளியிடுகிறது. அதன் உரிமைய...

எஸ்.ரா.வின் 'உலக சினிமா' - மொழிமாற்றம் குறித்து

எஸ்.ரா.வின் 'உலக சினிமா' - வி.சாந்தாராமின் தோ ஆங்கேன் பாரா ஹாத் திரைப்படம் குறித்து அன்புடையீர், சென்ற ஆண்டு, எஸ்.ராமகிருஷ்ணன் தனது உலக சினிமா புத்தகத்தில் சென்னையில் தயாரான முதல் படம் குறித்து எழுதியிருந்த சில விவரங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். சுட்டி . இப்போது இன்னொரு விவரத்தையும் பகிர்ந்துகொள்ள விருப்பம். * கஜல்களை, ருபையாத்துகளை, பாடல்களை மொழிமாற்றம் செய்யும்போது வரிக்கு வரி மொழிமாற்றம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. மூலத்தில் இருக்கும் கற்பனையை உள்வாங்கிக்கொண்டு, அது தமிழில் வெளிப்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என யோசித்து, நமது கற்பனையை அதில் சிறிது சேர்த்து, மையக்கருத்திலிருந்து விலகாமல் எழுதுவது சிறந்தது என்னும் கருத்துதான் இன்று வரையில் எனக்கு உண்டு. ரூப்பு தேரா மஸ்தானா ப்யார் மேரா தீவானா ப்ஹூல் கோயி ஹம்ஸேநா ஹோஜாயே! உன் அழகு அசத்துகிறது என் காதல் பித்துப்பிடித்தது என்னால் தவறு ஏதும் நிகழ்ந்துவிடுமோ! இதுதான் சரியான பொருள். ஆனால், மொழிமாற்றம் செய்யும்போது, உன் அழகும் பொன்வசமோ என் மனமும் உன் வசமோ விதிவசத்தாலொரு வேள்வி நேருமோ! என மாற்றி எழுதினேன். ஆனந்த் பக்ஷி ...