Skip to main content

வேட்டைக்காரன் - புதிய சண்டைக்காட்சிகளில் எனது எதிர்பார்ப்பு

தற்போதைய ஸ்டண்ட் மாஸ்டர்கள் கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் இருவரும் சராசரியான உடல் அமைப்பு கொண்டவர்கள், இருவரின் சண்டைக்காட்சிகளையும் ரசித்திருக்கிறேன். அன்றைய ஸ்டண்ட் மாஸ்டர்களுள் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தரையும் இதில் சேர்க்கலாம். ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கவேண்டுமென்றால் ஆஜானுபாகுவாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள்.

கனல் கண்ணன் அவர்கள் நடிப்பிலும் ஒரு காலை ஊன்றிக்கொண்டார். சில படங்களில் சண்டைக் காட்சிகளில் கதாநாயகனிடம் தோற்பதையும் நகைச்சுவையாக்கி சிரிப்பை வரவழைத்திருப்பார். சிலம்பரசனுடன் பெண்ணிடம் நேரம் கேட்பதில் உண்டாகும் சண்டையில் சிலம்பரசன் இவரைத் துவைத்தெடுத்த பின் மணி சொல்லும்போது ராகுகாலம் எமகண்டம் சூலம் உட்பட எல்லாமுமாக இவர் சொல்லிய நகைச்சுவைக்கு நான் ரசிகன். கமலின் அவ்வை ஷண்முகி வேடமிட்ட சண்டைக்காட்சி, ரஜினிக்கு சிவாஜியில் பாடலுடன் அமைந்த சண்டைக்காட்சி என்று கனல் கண்ணன் நடித்த ஸ்டண்ட்களில் சிரிப்பையும் வரவழைத்த ஸ்டண்ட்கள் சிலவற்றைச் சொல்லலாம்.

எனது நினைவாற்றல் சரியாக இருக்குமானால் ரஜினி-25 விழாவில் ரஜினிகாந்த் நடித்த சண்டைக்காட்சிகளை மேடையில் அமைக்கும் பொறுப்பு கனல் கண்ணனுக்கு தரப்பட்டிருந்தது (ஒருவேளை அந்த சண்டைக்காட்சிகளை மேடையில் அமைத்தவர் கண்ணன் இல்லையென்றால் ரஜினி ரசிகர்கள் தெரியப்படுத்துங்கள்). திரையில் வெட்டி ஒட்டும் காட்சிகளில் சண்டை செய்வது வேறு அதனையே மேடையில் செய்வதென்பது வேறு. அங்கே ரீடேக் உண்டு, இங்கே அது கிடையாது. கரணம் தப்பினால் மரணம் என்பது வேறு விஷயம், நடப்பது ரஜினி-25 விழா, கொஞ்சம் பிசகினாலும் ரஜினி ரசிகர்கள் சண்டைக்காட்சியை மேடையில் அமைத்த அந்த மாஸ்டரை அதன் பின்னர் ரசிக்கமாட்டார்கள் என்பது முதன்மையான விஷயம்.

சண்டைப்பயிற்சியாளர்களில் எனக்கு கனல் கண்ணனையும் பிடிக்கும்.

திரையின் எல்லா பிரிவுகளிலும் தொழில்நுட்பக் கருவிகள் வசதிகளை வழங்கியதுபோல் சண்டைக் கலைக்கும் வசதிகளை வழங்கியிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட பிரேமை நிறுத்தி குதிரைகளை எண்ணினால் 40 எண்ணிக்கை இருக்கும்படி அத்தனை கேமரா உத்திகள் இல்லாத காலத்தில் (அலிபாபாவும் 40 திருடர்களும்) கவனமாகப் பார்த்துக்கொண்ட சண்டைக்கலைஞர்களுக்கும், ஒளிப்பாதிவாளருக்கும் இப்போதைய கருவிகள் கிடைத்திருந்தால் இன்னமும் அற்புதமான காட்சிகளை அமைத்க்திருப்பார்கள்.

ஒரே கோணத்தில் படம் பிடிக்கப்பட்ட, குகையிலிருந்து வெளியில் வரும் வீரர்களை வாயிலிலேயே நிறுத்தும் சண்டைக்காட்சியின் (குலேபகாவலி) விறுவிறுப்பு இன்றைய தொழில்நுட்பம் கிடைத்திருந்தால் இன்னமும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

அந்த வகையில் இன்றைய ஸ்டண்ட் மாஸ்டர்கள் கொடுத்து வைத்தவர்கள். துள்ளி விழுவது, விழுகையில் அந்தரத்தில் உடலை சுற்றுவது போன்ற காட்சிகளை டாப் ஆங்கிளில் ஸ்லோமோஷனில் பார்க்கையில் காட்சியில் பங்குபெற்ற கலைஞர்களை பாராட்டத் தோன்றுகிறது.

உலக அளவில் சண்டைக்காட்சியமைப்புக்கென வெற்றிபெற்ற படங்கள் எதுவாக இருப்பினும் அதனை உடனே தமிழ்த் திரைக்குக்கொண்டு வந்து அழகு பார்த்தார்கள். சில நேரங்களில் அது ஏற்கவியலாத அமைப்பில் இருப்பினும், கதாநாயக ஆளுமைகள் முன்னின்று காட்சிகளைத் தூக்கி நிறுத்தின. இதற்கான சரியான உதாரணமாக ஷாவோலினை நினைத்து வார்க்கப்பட்ட பாயும் புலி ஜெய்ஷங்கர் - ரஜினி சண்டைக்காட்சியைச் சொல்லலாம்.

மாஸ்டர் ஜூடோ ரத்தினம் அவர்களின் தொழிற்திறனில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. வாளும் சிலம்பமும் சண்டைக்கான ஆயுதங்களென்றிருந்த நிலையில் 'ப்ராப்ஸ்'களை வைத்து அழகான சண்டைக்காட்சிகளை அமைத்தவர். டீக்கடை பெஞ்சு, ஏணி, வாளி என்று செர் ப்ராப்பர்ட்டீஸ்களையும் சண்டைக்காட்சியில் கையாண்டவர் ஜூடோ ரத்தினம். ஆனால், இன்னொரு நாட்டின் பாரம்பரிய சண்டைக்கலையை தமிழ்த்திரைக்குக் கொண்டுவருகையில் அன்றைய தமிழ்த்திரையின் சூழலில் அதற்கான இற்றைப்படுத்தல் கிடைக்காமற்போனதால் பாயும் புலி படத்தின் சண்டைக்காட்சிகளை, கதாநாயகத் தன்மையைக்கு வெளியே நின்று உத்திகளுக்காக ரசிப்போரால் ஏற்கவியலாமற்போனது.

மாஸ்டர் ஜூடோ ரத்தினம் அவர்களுக்கு இருந்தது போன்ற இற்றைப்படுத்தாப் பிரச்சனை இன்றைய சண்டைக்கலைஞர்களுக்கு கிடையாது. உத்திகளை உள்வாங்கிக்கொள்ள நவீன உபகரணங்கள், கலைகளைப் படித்துத் தெரிந்துகொள்ள விரல் நுனியில் உலகம், சீனக் கலைஞர்களை அழைக்க வேண்டுமென்றால் மலேசியநாடு அருகிலிருக்கும் ஊரைப்போலாகிவிட்டது, அனைத்திற்கும் மேலாக வளர்ந்திருக்கும் தொழில்நுட்பம்.

டெக்னிகலாக இந்தியத் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைவது தமிழில் மட்டுமே. அதற்காக உழைத்திருக்கும் மாஸ்டர்கள் பாராட்டிற்குரியவர்கள். இப்படியான திறனைப் பெற்றிருக்கும் கலைஞர்கள் எல்லா படங்களிலும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்கின்றார்களா, அல்லது கதாநாயக ஆளுமை முன்னிறுத்தப்படுவதால் இவர்கள் சமாதானப்படுத்திக்கொள்கிறார்களா என்னும் கேள்வி என்னுள் அடிக்கடி எழுகின்றது.

வேட்டைக்காரன் பார்த்து முடித்ததும் அப்படி ஒரு கேள்வி எழுந்தது.

விஜய் அவர்கள் வேட்டைக்காரனின் சண்டைக் காட்சிகளில் எடுத்திருக்கும் ரிஸ்க் வியக்கவைத்தது. பல இடங்களில் டூப் இல்லாமல் நடித்திருப்பது தெரிகிறது. தொழில்நுட்பம் அதற்கு உதவியிருக்கலாம், விஜய் ரசிகர்கள் ஆத்தண்டிசிட்டியை எதிர்பார்க்கிறார்கள் என்பது மாஸ்டரின் கணிப்பாக இருக்கலாம். ரசிகர்களுக்காக அவர் செய்துகாட்டும் சில காட்சிகளை நான் குறைகூறமாட்டேன். அது அவருடைய ரசிகர்களுக்குத் தேவையானது. எம்.ஜி.ஆரின் எண்ட்ரிக்குக் கைதட்டிய சராசரி ரசிகனான எனக்கு இத்தகைய கதாநாயக ஆளுமைக் காட்சிகளெல்லாம் உடன்பட்டவையே, தவறேதும் இல்லை.

எனது கேள்வி என்னவென்றால், தனது ரசிகனுக்குத் தேவையானதோடு சண்டைக்கலைக்குத் தேவையான உத்திகளையும், அதே துறையில் இருப்போர்க்கு ஆய்வுக்கான சிற்சில அசைவுகளையும், சண்டைக்கலை பயில்வோரை இம்ப்ரொவைஸ் செய்துகொள்ளத் தூண்டுவதுமாக பல அடுக்குகளில் அடர்ந்திருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் சண்டைக்காட்சிகளை நினைவிற்கொண்டு இன்றைய நாயகர்களும் செயல்படுவற்கு அவர்களுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பு தடையாக இருக்கிறதா?

ஸ்டண்ட் கலைஞர்கள் பறக்கிறார்கள், கண்ணாடியை உடைக்கிறார்கள், ரத்தம் துப்புகின்றார்கள் எல்லாம் சரி, என்னைப் போன்ற சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு அதில் ஏதும் வைத்திருக்கிறார்களா?

ட்ராயில் ப்ராட்பிட்டின் வாள்வீச்சுதான் இங்கும் தேவையென்று சொல்லவில்லை.

அன்று ரிக்‌ஷாக்காரனில் எம்.ஜி.ஆர். வீசிய சுருள்கத்தி வீச்சுதான் இன்றும் தேவையென்று கேட்கவில்லை.

அன்று தீவாரில் அமிதாப் காட்டிய ஆக்ரோஷம்தான் தமிழிலும் எனக்கு வேண்டும் என்று கேட்கவில்லை.

நான் கேட்பதெல்லாம் மீண்டும் ஒரு பாட்ஷாவை, மீண்டும் ஒரு தசாவதரத்தை.

ரஜினி, கமல் இந்த இருவரும் தந்திருக்கும் பெஞ்ச்மார்க்குகளை கவனத்தில்கொண்டு மற்ற கதாநாயகர்கள் சண்டைக்காட்சிகளில் செயல்படவேண்டும் என்பது எனது பார்வையாக இருக்கிறது.

கமலால் செய்ய முடிந்ததை, ரஜினியால் செய்ய முடிந்ததை, ஏன் தானேகூட இரண்டொரு படங்களில் செய்துகாட்டியிருப்பதை விஜய் அவர்களால் ஏன் தொடர்ந்து கடைப்பிடிக்க இயலாமற்போனது?

கஜினிக்கு ஆக்ரோஷமான காட்சிகளை அமைத்தவர்தானே கனல் கண்ணன், அவரால் முடியாததா? 'ணங்'கென்ற ஒலிக்கு ஒரு பயங்கரத்தை ஏற்படுத்திய குழுமத்தில் (கஜினி) இருந்தவர்தானே கண்ணன், அவரால் முடியாதா? முடியும், ஏனோ இந்த பறப்பதிலும் உடைப்பதிலும் கவனம் செலுத்துகிறார்.

செல்லமும் விஜயும் மோதும் காட்சிகளில் இன்னமும் வீரியம் இருந்திருக்கவேண்டும் என்பது கண்ணன் அறியாததா?

குழுவாக எதிரிகள் தாக்கவரும்போது ஏதாவது ஒரு அசைவிலாவது நாயகன் குழுவை உடைத்து எதிரிகளைப் பிரித்து தனித்தனியாக எதிர்கொள்வதாகத்தானே அமைப்பார்கள், வேட்டைக்காரனில் நடக்கும் குழுச்சண்டைகளில் அப்படி ஒரு காட்சியை எதிர்பார்த்தேன், கிடைக்கவில்லை. குழுவாக எதிரிகள் வருகையில், அவர்களைப் பிரித்து தனித்தனியாகக் கையாண்டு பிறகு மீண்டும் அவர்கள் ஒன்று சேரும் முயற்சி அவர்களிடையே நடந்துகொண்டிருக்கும்போதே நாயகனின் வீச்சுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டி ரணகளப்படுத்துவார்களே! கனல் கண்ணன் அறியாததா?

கனல் கண்ணனின் திறனுக்கும் உழைப்புக்கும் இன்னமும் அற்புதமாக சண்டைக்காட்சிகளை அமைக்கவேண்டும், அப்படியெல்லாம் அமைத்து என் போன்றோரை ஈர்த்தவர்தான், அமைப்பார், ஈர்ப்பார், காத்திருப்பேன்.

Comments

தருமி said…
// எம்.ஜி.ஆரின் எண்ட்ரிக்குக் கைதட்டிய சராசரி ரசிகனான எனக்கு இத்தகைய கதாநாயக ஆளுமைக் காட்சிகளெல்லாம் உடன்பட்டவையே, தவறேதும் இல்லை.//

சண்டைக்காட்சிகளுக்கு இப்படி ஒரு ரசிகரா?? அதுவும் நம்மூரு பட்ங்களில் வரும் சண்டைக்காட்சிகளுக்கு !!!

//டெக்னிகலாக இந்தியத் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைவது தமிழில் மட்டுமே.//

அடப்பாவமே .. அப்டியா?
கனல் கண்ணன் நடித்தது எனக்கும் பிடிக்கும். உங்கள் வேட்டைக்காரன் விமர்சனம் வித்தியாசமாக இருக்கிறது. அந்த நாளில் ஸ்டண்ட் சோமு, வி.பி.பலராமன் என்று ஸ்டண்ட் மாஸ்டர்கள் இருந்தார்கள். ஸ்டண்ட் சோமுவின் வாள் சண்டையும் பலராமன் அமைக்கும் நடனக் காட்சிகளும் ரொம்ப பாராட்டு பெற்றன. திரைக்குப் பின்னால் உழைக்கும் கலைஞர்களை பாராட்டியமைக்கு நன்றி
இனிய தருமி அய்யா,

நீங்கள் இயங்கும் தளத்திற்கு சண்டைக்காட்சி ரசனை என்பது ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்.

எனக்கும் நான் இயங்கிய தளத்திற்கு ஏற்புடையது.

படித்தவர்களுக்கும் அறிவுஜீவியோருக்கும் இது ஏற்புடையதன்று அய்யா, எனது ரசனை பாமர ரசனை.

அன்புடன்
ஆசாத்
இனிய சகாதேவன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்
ஆசாத்ஜி,

அசத்தல் பதிவு..
தருமி said…
ஆசாத்,
நான் ஒரு சராசரி சினிமா ரசிகன். ஆனாலும் "அந்தக் காலத்திலிருந்தே" (எம்.ஜி.ஆர். காலம்) இந்த சண்டைக் காட்சிகள் கொஞ்சம் ஒத்துவராத ஒரு விசயம். Dr.No அப்டின்னு ஒரு படம். ரயிலுக்குள் ஒரு சண்டை. அம்மாடின்னு சொல்றது மாதிரி இருக்கும். அடி ஒவ்வொண்ணும் நம்ம அடி வயத்தில இறங்கும்.

ஆனா இன்னைக்கி வர்ர சண்டைகளில் கயிறுகட்டி போடுற சண்டை, ஒரே ஆள் 50 பேரை (சிவாஜி படத்தில தலை போடுறது மாதிரி) பார்த்த 'அடக் கடவுளே"ன்னு சொல்லத்தான் தோணுது. அதத்தான் சொன்னேன். அதுவும் matrix படம் வந்த பிறகு நம்ம சண்டைக்காட்சிகள் ரொம்ப சொதப்பலா தெரியுது.

ஆனாலும் சேது, நான் கடவுள் சண்டைகள் எப்படி? செம ... இல்ல!?
ஆசாத்..

இம்புட்டு சண்டை வெறியரா நீங்க..?

ஆபத்தாச்சே..!!!
சென்ஷி,

நன்றிகள்!

*

இனிய உண்மைத் தமிழன்,

சண்டைக்காட்சி ரசிகன்தான், சண்டை வெறியன் கிடையாதுஜீ :-)
இனிய தருமி அய்யா,

நமது தமிழ்ப்பட சண்டைக்காட்சிகள் அதிகம் தாக்குதலுக்கானது சீன ஜப்பானிய சண்டைக்கலைகளால்தான்.

குஸ்தி, சிலம்பம் என்று விளையாடிய மக்கள் திலகமும் அந்நாளில் ஜூடோவில் கொஞ்சம் ஒதுங்கினார்.

அவருக்குப் பின்னர் கராத்தேயும் குங்ஃபூவும் முழுமையாக தமிழ்த்திரையை ஆக்கிரமித்துக்கொண்டன.

பின்னர், அய்யா நீங்கள் சொல்லும் மேட்ரிக்ஸ் பாணியிலான ஃப்ரீசிங் ஷாட்டுகள்.

எனது ரசனைகள் எங்கெங்கோ பரந்தபோதும் இந்த ரசனை மட்டும் அப்படியே தங்கிவிட்டது.

அன்புடன்
ஆசாத்
தருமி said…
கொஞ்சம் மாறுபட வேண்டியதிருக்கு ஆசாத்.

//நமது தமிழ்ப்பட சண்டைக்காட்சிகள் அதிகம் தாக்குதலுக்கானது சீன ஜப்பானிய சண்டைக்கலைகளால்தான்.//


அந்த சண்டைகள் எல்லாமே martial arts வகையறாக்கள். ஆனால் நமது சண்டைகள் அந்த டைப்பா?

1:50 -- இந்த பார்முலா போனால் நல்லா இருக்கும். அது என்னன்னு கேக்றீங்களா?

ஒரே ஆள் 50 ஆட்களை அடிச்சி பறத்துறது. அடுத்து, ஒரே அடியில் ஒரு ஆள் 50 அடி தள்ளிப் போய் விழுகுறது ... இந்த anti-gravitational பிரச்சனையையும் உங்க ஸ்டண்டு மாஸ்டர்கள் பார்த்தால் நல்லா இருக்குமே. சிவகாசி முதல் சீன்ல துணிய அடிச்சி காயப்போடுறது மாதிரி நம்ம சூப்ப்ர் ஸ்டார் 2 ஆளுகளை அடிச்சி போடுவாறே ... அம்மாடி!!!
அதுக்குத்தான் சொன்னேன்: //சேது, நான் கடவுள் சண்டைகள் எப்படி? //

அதுமாதிரி எல்லா சண்டையும் கொஞ்சம் realistic -ஆக இருந்தால் நல்லா இருக்காதா? அதுக்கு உங்கள மாதிரி சண்டை ரசிகர்கள் ஒத்துழைக்கணும்...........
தருமி அய்யா,

உங்கள் கேள்விகள் நியாயமானவை. இந்த வார இறுதியில் உங்கள் கேள்விக்கான பதிலை விவரமாக எழுதுவேன்.

அன்புடன்
ஆசாத்
தருமி said…
பதிப்பிக்க அல்ல.

தொடுப்பு அனுப்பி விடுங்களேன் -- வயசான ஆளு; மறந்துடுவேன்ல !!
வித்தியாசமான பார்வை மற்றும் பதிவு அண்ணாச்சி!!

நான்கூட பயந்துட்டேன் பேரை படிச்சவுடனே..
செத்த பாம்பை அடிக்க கிளம்பிட்டீங்களோன்னு?
zeaudeen said…
எனக்கு அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஆசாத் ஐயா அவர்களே,
நான் இப்போது நம்புகிறேன். உண்மையில் நீங்கள் ஒரு Terror தான்.
-சியா

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...