Skip to main content

இசைநிகழ்ச்சிப் புன்முறுவல்கள்

ஒலிவழங்கியைக் காதுகளில் மாட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டால் கிடைக்கும் இன்பத்தைவிடவும் அதிகமாக ரசனைக்குத் தீனி போட இசைநிகழ்ச்சிகளால் முடியுமா? எனது பார்வையில் முடியாது; ஆனால், இசைநிகழ்ச்சி மேடைகளில் உதிர்க்கப்படும் சில சின்னச்சின்ன புன்னகைகள் போடவைக்கும் 'அடடா'க்களுக்கும் 'ஆஹா'க்களுக்கும் விலை கிடையாது.

திரையில் 'வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது' பாடலில் ஒரு இசைக்கலைஞர் தனது வாசிப்பிற்குப் பின் சிந்திய புன்னகை இன்னமும் நினைவில் இருக்கிறது.

தொலைக்காட்சியில் அநேகமாக அது சொக்குதே மனம் நிகழ்ச்சி என நினைக்கிறேன். 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'யைப் பாடிக்கொண்டிந்த பெண்மணி பின்னணி இசையில் அட்டகாசப்படுத்திய தபேலாக்காரரைப் பார்த்து புன்னகைத்தார். அந்த வாசிப்பை அங்கீகாரப்படுத்த அதைவிடவும் சிறந்த பரிசு அந்த மேடையில் எதுவாகவும் இருக்கமுடியாது. அந்தப் புன்னகையையும் மறக்க முடியாது.

என்றோ நடைபெற்ற தெருவோர இசைக்கச்சேரியில் 'இன்பமே உந்தன் பேர் பெண்மையோ'வின் பல்லவியில் ஒலிக்கும் காங்கோ அடிக்குப் பின் அந்தக் கலைஞரும் இசைநடந்துனரும் பரிமாறிக்கொண்ட புன்னகை நீண்ட நாள்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவில் தோன்றி மறைந்தது; இப்போதும்.

'லேக்கர் ஹம் தீவானா தில்'லில் தர்மேந்திரா மாடிக்கு மாடி தாவும்போது ஒலிக்கும் காங்கோ ஒலியை காமேஷ் வாசித்தார். அந்த வாசிப்பிற்குப் பின் மூலையில் அமர்ந்திருந்த கமலாவைப் பார்த்து அன்று அவர் சிந்திய புன்னகை காதலை மட்டும் காட்டவில்லை, 'எப்படி நம்ம வாசிப்பு' என்னும் கேள்வியையும் கேட்டது.

இவை மட்டுமன்றி வர்ணனையாளர்கள் உதிர்க்கும் சில கடிகள், அபத்தங்கள், விவரம் சொல்வதாக நினைத்து அவர்கள் தருகின்ற சிற்சில தவறான தகவல்கள், இசைக்கலைஞர்கள் ஓய்வளிக்க இடையிடையே வரும் பலகுரல் வித்தகர்கள், அவர்கள் அடிக்கும் அரதப்பழசான 'அவர் இதைப் பேசினால் எப்படி? இதைப் பாடினால் எப்படி?' வகையறாக்கள் எல்லாமாகச் சேர்ந்து கலவையான அனுபவத்தைத் தருகின்ற இசைநிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்தால் சொல்லலாம்.

அப்படியான கலவையான அனுபவத்தைத் தருகின்ற ஒரு இசைநிகழ்ச்சியை துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தினர் நேற்று வழங்கினார்கள். பாடல்களை ரசித்ததை விடவும் பின்னணி இசை வாசித்தவர்களின் குழுமனவேற்றத்தையும் (டீம் ஸ்பிரிட்), அவர்கள் அவ்வப்போது உதிர்த்துக்கொண்ட புன்னகைகளையும், தலையாட்டல்களையும் மிகவும் ரசித்தேன்.

வீட்டிற்கு வந்து ராகாவில் ரோஜா மலரே ராஜகுமாரியை மீண்டும் கேட்கவைத்தது அந்நிகழ்ச்சி.

அன்புடன்
ஆசாத்

Comments

ஆஹா.......

அதைத்தான் 'பொருள் பதிந்த புன்னகை/பார்வை'ன்னு சொல்லறோம்.

மேடைக் கச்சேரிகளில் இதைக் கவனிப்பதும் ஒரு சுவாரசியம்தான்.

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...