உயரே போகும்போது அச்சம் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், உயரே செல்ல உதவும் இயந்திரங்களில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள். என்னதான் மேலே போனாலும் விழமாட்டோம் என்னும் நம்பிக்கையை பாதுகாப்பு ஏற்பாடுகள் தந்ததால் உயரம் ஒரு பொருட்டாகத் தெரியாமல் சாதாரணமாக இருக்கும். ஆனால், எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், ஏறக்குறைய எழுபது அடிகள் உயரத்தில் பணியாளர்கள் இரும்புப் பாளங்களைப் பிரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது ஒரு திகைத்து நிற்பதையும், இப்படிப் படம் எடுத்து வலைப்பூவில் இடுவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாது.
அரசின் சமீபத்திய ஆணையின்படி அனுமதிக்கப்படாத விளம்பரப் பலகைகளை எடுக்கும் பணி துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அண்ணாசாலையில் அதிஉயரத்திலிருந்த சில விளம்பரப் பலகைகள் பிரிக்கப்பட்டு, போக்குவரத்திற்காக காத்திருக்கும்போது ஆகாயத்தைக் கொஞ்சம் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அப்படி அதிகமாகத் தெரிந்த ஆகாயத்தை ரசிக்கும்போது கூடவே இந்தக் காட்சியும் நினைவுக்கு வருகின்றது.
அங்கே இருந்த விளம்பரதாரரின் ஒரு கடையின் கால்மணிநேர மின்சாரச் செலவுகூட இவர்கள் அனைவரின் ஒருநாள் கூலியைவிட அதிகமாக இருக்கும். இந்த நேரெதிர் சமாசாரத்தைப் பேசவரவில்லை. தினக்கூலி - வணிகம் - விளம்பரம் இவற்றின் செயல்பாடுகளையும் செலவுகளையும் ஓரளவிற்கு அறிவேன். பேச வந்தது எதைப் பற்றியென்றால், பாதுகாப்பாக தனது வயிற்றில் ஒரு கயிற்றைக் கட்டி அதனை கம்பியின் ஏதாவது ஓரிடத்தில் முடிந்து வைத்துவிட்டு பிறகு இரும்புப் பாளங்களைக் கழட்டத் துவங்கியிருக்கலாம்.
அவர்கள் அந்த ஏற்பாடுகளெல்லாம் தேவையில்லையென நினைத்தார்களோ, அதைச் செய்தால் வீரமற்றவன் என மற்ற தொழிலாளர்கள் நினைப்பார்களோ என்னும் எண்ணமோ, இதற்கெல்லாம் ஏது நேரம் ஏறினோமா கழட்டினோமா என்னும் எண்ணமோ, எது உண்மையோ?
எதுவாக இருப்பினும் இப்படி உயரத்தில் தினக்கூலிக்காக உயிரைப் பணயம் வைத்து தொழிலில் ஈடுபடுவது கழைகூத்தாடிகளின் நிலைமைக்கு இவர்களை இட்டுச் செல்கிறதென்பது எனது எண்ணம்.
அன்புடன்
ஆசாத்
Comments
இது கட்டுமானத்துறையில் இருந்து இறக்குமதியான அறிவு.
சாரம் கட்டுவதற்கு முன்பு அதன் உயரம் மற்றும் பாதுகாப்பு விதி முறைகள் என்று பல உள்ளன.அது எல்லாம் செய்து வேலை முடிக்க இந்த மாதிரி (படத்தில் காட்டிய மாதிரி) செய்வதை காட்டிலும் 2 அல்லது 3 மடங்கு நேர மற்றும் பணம் செலவாகும்.இதை நேர்படுத்த நம்மூரில் ஏதேனும் அமைப்பு இருக்கா என்று தெரியவில்லை.அதெல்லாம் இல்லாத போது இந்த மாதிரி காட்சிகள்,இப்படி வேலை செய்யும் போது ஏற்படும் இழப்புகளும் "அவன் விதி- போய்விட்டான்" என்பதற்குள் முடிந்துவிடும்.
இங்கு (சிங்கையில்) கடைப்பிடிக்கப்படும் சில விதி முறைகள்.
1.கட்டாய PPE ( Personal Protection Equipment) ஆதாவது ஹெல்மெட்,பாதுகாப்பு வார்(இதிலும் இரு வகை உண்டு)இருக்கவேண்டும்.
2. இரண்டு மீட்டர் உயரத்துக்கு மேல் போனால்,ஏறிப்போக ஏணி மற்றும் மத்திய பிளாட்பார்ம் இருக்கவேண்டும்.
3.ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் போனால்,அங்கிகரிகப்பட்ட பொறியாளரின் சான்றிதழ் வேண்டும். (Professional Engineer)
4.இதில் வேலை செய்யும் ஆட்கள் Certified ஆக இருக்க வேண்டும்.
நிறைய இருக்கு எழுத,சாம்பிளுக்கு கொஞ்சம் மட்டும் கொடுத்துள்ளேன்.
வடுவூர் குமார், பாதுகாப்பு சம்மந்தமாக பதிவு போடுவதாக முன்னர் எனக்கு தெரிவித்ததாக ஞாபகம் - எப்பொழுது வரும்? - நாகூர் இஸ்மாயில்