Skip to main content

போட்டியில் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள்

அன்புடையீர்,

வணக்கங்கள்.

எதிர்பாராதவிதமாக தேன்கூடு + தமிழோவியம் போட்டியில் வெற்றி கிடைத்திருக்கிறது. வாக்களித்தவர்களும், நடுவர்களுமாக ஒன்றுசேர்ந்து இதனை எனக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள். போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித் தந்த தேன்கூட்டார்களுக்கும், தமிழோவியத்தார்களுக்கும் நன்றி சொல்லாமல் இதனைத் தொடர்வது சரியன்று. போட்டியின் அமைப்பாளர்கள் இருவருக்கும் நன்றிகள்.

இக்கடிதத்துடன் எனது சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

குடும்பத்தாருடன் சுற்றுலாவில் இருக்கிறேன். சிங்கையிலிருந்து கோலாலம்பூர் வந்து இரண்டு நாள்களாகின்றன. சரி...கொஞ்சம் மின்னஞ்சல்களைப் பார்க்கலாம் என உலவி மையத்திற்குச் சென்றால் இன்ப அதிர்ச்சி. நண்பர்களிடமிருந்து பாராட்டுகள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு விடுதிக்கு வந்தால், இரவு மணி ஒன்று. செல்பேசியிலிருந்த தொகை முடிந்துவிட்டது. கடைகள் அடைக்கப்பட்டுவிட்டதால் தொகையைக் கூட்ட வழியில்லை. தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளிநாட்டு அழைப்புகள் யானை விலை குதிரை விலை :). ஒருவார்த்தையில் தொலைபேசி எண்ணைத் தெரிவித்ததும் கே.வி.ராஜா தொடர்பு கொண்டார், தேன்கூட்டார்கள் தொடர்பு கொண்டார்கள். இதோ, இந்த இரவில் ஆர்வத்துடன் இதனை எழுதவைத்துவிட்டார்கள். போட்டி அமைப்பாளர்களின் ஆர்வமும் நண்பர்களின் ஊக்குவிப்பும் முடியாததாகத் தோன்றுவதையும் முடித்துக்காட்ட உதவுகின்றன.

கடந்த போட்டிகளில் வெற்றிக்கு அருகில்கூட எனது படைப்புகள் வராமற்போனதை நினைத்து வருந்தியதை இங்கே பகிர்ந்துகொண்டுள்ளேன். உடனே அந்த வருத்தத்தைத் துடைத்துப் போட்டுவிட்டு அடுத்த போட்டிக்கான தலைப்பை ஆவலுடன் எதிர்கொண்டேன். அப்படி எதிர்கொண்டமைக்கு பலன் கிடைத்திருப்பதால் இந்த நிமிடத்தில் எப்படி மகிழ்வேன் என்பதை விளக்கத் தேவையில்லை. எனது மகிழ்வுடன் படைப்பின் பின்னணியை நன்றியறிவிப்போடு சேர்த்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என எண்ணி இந்த மடல்.

நெல்லையிலிருந்து சென்னை - திருவல்லிக்கேணிக்குக் குடிபெயர்ந்த தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் பலருக்கு குடும்பத்தொழில் கைத்தறி நெசவு. பள்ளிப் பருவத்தில் கொஞ்சம் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை முறையையும் பார்த்திருப்பதால் அதையே கதைக் களனா அமைத்துக்கொண்டேன். தறிக்காரர்களின் பேச்சு, 1960களில் அவர்களுக்குக் கிடைத்த தினக்கூலி, தறியில் புழங்கும் உபகரணங்களின் பெயர்கள் இவற்றை சென்னைக்குத் தொடர்புகொண்டு உறுதிசெய்துகொண்டேன். 1962 முதல் 1967 வரையில் வெளியான வெற்றிப் படங்களின் பட்டியலை வைத்துக்கொண்டு அவற்றிலிருந்து வருடவாரியாக நான்கைந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். கதைக்களனை உண்மைக்கு வெகு அருகில் அமைக்க இவை உதவின.

அடுத்து கதைமாந்தர்கள்.

ஹயாத் பாய் - கற்பனைப் பாத்திரமல்லர். தாய்வீடு (ரஜினிகாந்த்) படத்தின் சண்டைப் பயிற்சியாளர்.

இஸ்மாயில் பாய் - கற்பனைப் பாத்திரமல்லர். சென்னை சாந்தோம் தேவாலயத்தின் பின்னாலிருக்கும் மாநகராட்சி உடற்பயிற்சிக்கூடத்தின் பொறுப்பாளராக இருந்தவர். உண்மையிலேயே நீலமலைத் திருடனின் சண்டைக் காட்சிகளில் தோன்றியவர்.

லூர்து - கற்பனைப் பாத்திரமல்லர். 'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் தபேலா வாசிக்கும் கரங்கள் குளோசப் காட்சியில் காட்டப்பட்டிருக்கும். அவை தபேலா மாஸ்டர் லூர்துவின் கரங்கள். மரத்தடி டாட் காமில் எனது ரிகார்டிங் நினைவலைகள் படித்தவர்கள் இந்தப் பெயரைப் படித்திருப்பார்கள்.

கழகமென்னும் ஓடமதை - கதைக்காக எழுதப்பட்ட வரிகளல்ல; தி.மு.க.வின் பிரச்சார பாடகர் (முன்னணிப் பாடகர் கிடையாது) 'ஷண்முகப்பிரியா லோகநாதன்' உண்மையிலேயே 'மீட்டர்' போட்ட வார்த்தைகள் (1977-78).

ஹக் உம்மா, ஹக் வாப்பா - கற்பனைப் பாத்திரங்களல்லர்.

இந்த உண்மையான நபர்களின் நடுவே ஷேக் அலியும் அவனது வாப்பாவும்தான் கற்பனைப் பாத்திரங்கள். லூர்துவை மட்டும் கொஞ்சம் அதிகபட்சமாக (உண்மைக்கு மாற்றமாக) வளர்ந்துவிட்ட ஷேக் அலியுடன் கூடவே இருப்பதாகக் கற்பனை செய்துவிட்டேன்.

இன்னும் ஒரு உண்மை:

லூர்துவிடம் திரைப்பாடல் எழுத வாய்ப்பு கிடைக்குமா எனக் கேட்டதும், அதற்கு லூர்த்து 'எங்கே நிம்மதி' பாடலின் மையக்கருத்தில் இருபது வரிகள் எழுதச் சொன்னதும், பிறகு அதனை நான் தொடராமற்போனதும் உண்மையோ உண்மை (1979-80). அப்போது லூர்துவிடம் என்னை அழைத்துச் சென்ற நண்பர், தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களின் மத்தியில் இன்று கொஞ்சம் பிரபலமான பாடகர் 'இறையன்பன் அப்துல் குத்தூஸ்'.

போட்டியில் பரிசு கிடைக்காமற்போயிருந்தால் இவை அனைத்தும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அறிந்த விவரங்களாகியிருக்கும். பரிசு கிடைத்ததனால், அனைவருடனும் இதனைப் பகிர்ந்துகொள்கிறேன்.

வாக்களித்த நண்பர்களுக்கும், தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும், போட்டியின் அமைப்பாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்து இதனை முடிக்கிறேன்.

அன்புடன்
ஆசாத்

Comments

Anonymous said…
//படைப்பின் பின்னணியை... //

ஆகா, தங்களின் கதைக்குப் பின்னால் இவ்வளவு உழைப்பு இருந்ததே தங்கள் வெற்றியின் இரகசியம் ஆசாத் அவர்களே.! ஹயாத் பாய், இஸ்மாயில் பாய், லூர்து, ஹக் உம்மா, ஹக் வாப்பா - யாவரும் கற்பனைப் பாத்திரங்கள் அல்லர் எனும் போது ஆச்சரியமளிக்கிறது !

வெற்றிக்கும், அதன் பின்னணியில் இருந்த உழைப்பிற்கும் வாழ்த்துக்கள் பல !
வாழ்த்துகள் ஆசாத்
Anonymous said…
அன்புள்ள ஆசாத் ஐயா,

மிக அருமையாக ஒரு கதையை எழுதியதுடன், இதன் பிண்ணனியில் உங்களின் உழைப்பும், உண்மையும் விரவிக்கிடக்கிறது என்பதைப் படிக்கும் போது என் மனதில் நீங்கள் பெரிய இடத்தைப் பிடித்துவிட்டீர்கள். வெற்றிக்கு மீண்டும் ஒரு முறை, வாழ்த்துக்கள் ஐயா.
Dear

MurattukkaLai,
BR-ji,
ziavudeen,

Thanks.

anbudan
Azad
Anonymous said…
vaazththukaL
ஓகை said…
நண்பர் வென்றதை நான் வென்றதாக உணர்கிறேன்
gulf-tamilan said…
வாழ்த்துகள்
ஆசாத் பாய்,
போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!!!

அட்டகாசமான தலைப்பை கொடுத்தமைக்கு நன்றி
Dear

Chandra,
Natarajan ayya,
Gulf Tamilan,
vettippayal,

Thanks.

anbudan
Azad
வாழ்த்துகள் ஆசாத் அண்ணா.

அன்பன்
எம்.கே.
வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...