Skip to main content

சித்திரம் பேசுதடி - புத்தகம் குறித்த எண்ணங்கள்

சித்திரம் பேசுதடி - புத்தகம் குறித்த எண்ணங்கள்

ராயர் காப்பி க்ளப் நண்பர்களுடன்1 தியோடர் பாஸ்கரன் அய்யாவின் கருத்துப் பரிமாற்றங்களை ஒருமுறை நேரில் கேட்டிருக்கிறேன். பிறகு அய்யாவை சந்தித்தது சென்னை புத்தகக் கண்காட்சியில். அவரது சித்திரம் பேசுதடியை வாங்கி அவரிடம் கையெழுத்தையும் பெற்றுக்கொண்டேன். கருப்பு வெள்ளையில் என்.எஸ்.கே. - டி.ஏ.மதுரம் நகைச்சுவைக் காட்சியை அட்டையாகக்கொண்டு 1934முதல் 2003வரையில் எழுதப்பட்ட பல கட்டுரைகளின் தொகுப்பு. அனைத்து கட்டுரைகளும் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்பானவை. தமிழகத்தில் வெகுஜன கேளிக்கைச் சாதனமாக திரைப்படங்கள் உருவானதை எழுத்தாளர்கள் எப்படி அணுகினார்கள் என்பதை தமிழ் வாசகர்களுக்கு உணர்த்துவதே தொகுப்பின் நோக்கம் என முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

நோக்கம் நன்றாக நிறைவேறியிருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்கள் கீழ்த்தட்டு மக்களின் ரசனைக்காக எடுக்கப்படுபவை என்னும் நினைப்பால், சில காலங்கள் திரைப்படங்களின் வளர்ச்சி குறித்தோ, தாக்கங்கள் குறித்தோ மேல்தட்டு மக்கள் அக்கறையேதும் கொண்டிருக்கவில்லை. 1916முதல் 1931வரையில் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மௌனப் படங்களின் வரவைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை என முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இசை, நாட்டியம் போன்ற நுண்கலை குறித்து எழுதுவோர் திரைப்பட ரசனையை வளர்த்துக்கொள்வதை அவசியமற்றதாக நினைத்திருக்கிறார்கள். திரைப்படம் தொடர்பாக மக்களின் கருத்தைக் கேட்டறிவதற்காக பிரிட்டிஷ் அரசால் 1927இல் இண்டியன் சினிமேட்டோக்ராஃப் கமிட்டி அமைக்கப்பட்டு 4325பேருக்கு கேள்விப் படிவங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றில் 320 படிவங்களே பதிலுடன் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்தக் குழு சந்தித்துப் பேசிய முக்கியப் புள்ளிகள் அனைவரும் திரைப்படங்களின் தரம் மிகக் குறைவாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். மேலும், கலாசாரம் அற்றவர்களே திரையரங்கங்களில் கூடுகின்றார்கள் என்னும் பெரிய குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறார்கள்.

எண்பதாண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தகைய தாக்குதல்களைத் தாங்கத் துவங்கி மெதுவாக எப்படி தனது எல்லைகளை தமிழ்த் திரை விரித்துக்கொண்டது என்பதை புத்தகத்தின் உள்ளே செல்லச்செல்ல விளங்கிக்கொள்ள முடிகிறது.

1927இல் இந்த நிலையைச் சந்தித்த திரை உலகின் மேல் எழுத்தாளர்களின் கவனம் திரும்புவதற்கு முக்கியமான நிகழ்வாக இருந்தது சாஸ்திரீய சங்கீதக் கலைஞர்களின் திரைப் பிரவேசம் என்கிறார். பாபநாசம் சிவன், தண்டபாணி தேசிகர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற இசை மேதைகள் பலரும் திரைத்துறைக்குள் நுழைந்ததும் திரைப்படம் குறித்து எழுத முன்வராவிட்டாலும் தங்களுக்குப் பரிச்சயமான கலை குறித்து எழுதிட எழுத்தாளர்கள் முன்வந்ததில், தமிழ்த் திரை, அவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பிறகு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு ஊடகமாக திரைப்படங்கள் உருவாகத் துவங்கியதும் அதன் வளர்ச்சி யாராலும் உதாசீனப்படுத்த முடியாததாக நிலைத்திருக்கிறது.

புத்தகத்தின் கடைசிப் பகுதியில் 1970முதல் 2003வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டு இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகளின் ஆசிரியர்கள் ஜெயகாந்தன், எஸ்.ஆல்பெர்ட் (இவர் யாரென அறியேன்), ப.கங்கைகொண்டான் (கேள்விப்பட்ட பெயர், மற்ற விவரங்கள் அறியேன்), ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, அறந்தை நாராயணன், சாரு நிவேதா, வெங்கடேஷ் சக்கரவர்த்தி (இவரையும் அறியேன்), ஞாநி, எம்.சிவகுமார் (அறியேன் அய்யா), திலகவதி, அசோகமித்ரன், அம்ஷன் குமார், குட்டி (அறியேன்), வண்ணநிலவன், குட்டி ரேவதி, பாமரன்.

வண்ணநிலவனின் கட்டுரை ஒரு சிறிய 'மேக்கிங் ஆஃப் அவள் அப்படித்தான்.' படத்தில் இடம்பெறும் 'பன்னீர் புஷ்பங்களே' பாடலுக்கான மெட்டின் ஒலிப்பேழையை ருத்ரையா வண்ணநிலவனிடம் தந்து பாடல் எழுதிக் கேட்க, நாள் முழுதும் அதைக் கேட்ட பின்னும் தத்தகாரத்துக்கு ஒருவரியும் தோன்றாமல் அவர் கைவிட்டுவிட, பிறகு இதன் வரிகளை கங்கை அமரன் எழுதியது செய்தி.

பக்திப் படம், குடும்பப் படம் இவை இரண்டினை மட்டுமே மையக் கருத்தாகக்கொண்டு இயங்கிவந்த தமிழ்த் திரை, குடும்பப் படங்களின் வாரிசாக காதல் படங்களைத் தன்னுள் வளர்த்திருப்பதாக எழுதும் அம்ஷன் குமார், நமது கலாசாரம் தீவிரத்துடன் வணிக மயமாக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறார். 'காதலுக்கு மரியாதை'யை ஏற்றுக்கொள்ளவேண்டும் என நகைச்சுவையாக முடிக்கப்பட்டிருக்கும் இக்கட்டுரை 1999 அக்டோபரில் கணையாழியில் வெளியாகியிருக்கிறது.

தமிழ்த் திரையில் பெண்களின் சித்தரிப்பு குறித்துப் பேசுகிறது அசோகமித்ரனின் கட்டுரை. பெண்ணின் பெருமைக்கு முக்கியத்துவம் கொடுத்த 1950-1959வரையிலான படங்கள் குறித்து பேசும்போது, எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தும் படத்தின் பெயரில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருப்பதை அவரது ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்கள், ஏனென்றால், இப்படத்தில் சாவித்திரியின் பாத்திரப்படைப்பு அப்படிப்பட்டது என்கிறார். திரைப்படம் மகாதேவி2. புதிய பாதை, அக்னி சாட்சி, மௌனராகம் இப்படியாக பல படங்களில் பெண்ணின் பெருமை பேசும் பாத்திரங்களை இக்கட்டுரை தொட்டுச் செல்கிறது.

வாலி + வைரமுத்து = ஆபாசம் என்னும் பாமரனின் நூலுக்கு முன்னுரையான கட்டுரையில் திலகவதி தமிழ்த் திரைப் பாடல் வரிகளைக் கிழிகிழியெனக் கிழித்திருக்கிறார். எம்.ஜி.ஆரையும் விட்டுவைக்கவில்லை. அவரது ஆடவாங்க அண்ணாத்தேயும், பாரப்பா பழனியப்பாவும்கூட3 பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன என்றால் மற்றவற்றை ஊகித்துக்கொள்ளுங்கள். இவை பெண்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதலின் துவக்கம், கலாசாரக் கற்பழிப்பு என ஒரு பிடிபிடித்திருக்கிறார். ஆறுதலாக தூங்காதே தம்பி தூங்காதேயையும் இன்னும் சில பாடல்களையும் குறிப்பிடப்பட்டு இவை நல்ல மனமாற்றத்தை உண்டாக்கும் பாடல்கள் என்கிறார்.

1939இல் ஜகன்மோகினியில் ஜி.ஆர். என்பவர் எழுதியிருக்கும் கட்டுரையில் திரையில் காட்டப்படும் காட்சிகளில் புகைபிடிக்கும் பழக்கத்தின் மீதான மோகம் ஏன் என்னும் கேள்வி ஒலிக்கிறது. சிகெரெட்டிற்கும் தமிழ்த் திரைக்குமான தொடர்பு இன்று நேற்றல்ல; அது எண்பதாண்டுப் பழக்கம் என்பது புலனாகிறது.

சதி சுலோசனாவை இயக்கிய அனுபவங்களை ப.சம்மந்த முதலியார் 1938இல் பகிர்ந்துகொண்ட கட்டுரை, திரை உலகில் கொஞ்சமேனும் ஆர்வமிருப்பவர்களும் அவசியம் படிக்கவேண்டிய ஒன்று. ஒலிப்பதிவு, அரங்க அமைப்புகள், நடனம், பின்னணிப் பாடல்கள், பாடல் பதிவாகாமல் போனதால் வருந்தும் நடிகை, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கதாநாயகன் கதாநாயகி படத்திலிருந்து விலகுவதால் உண்டாகும் பிரச்சனைகள், என பல தளங்களைத் தொட்டுச் செல்லும் பெரிய கட்டுரை.

1960இல் வெங்கட் சாமிநாதன் எழுதிய பாலையும் வாழையும் என்னும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி எடுத்து பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியத் திரை உலகில் புரட்சியை விளைவித்த படமான பதேர் பாஞ்சாலி (சத்யஜித் ராய்) சென்னையில் இரண்டே நாள்கள் மட்டும் ஓடியதைக் குறிப்பிட்டு இந்த அளவில்தான் நம்மை வளர்த்திருக்கும் ரசனை இருப்பதைச் சாடியிருக்கிறார். சத்யஜித் ராயைத் தமிழர்களால் ரசிக்க முடியாது என்று எங்கோ ஜெயகாந்தன் குறிப்பிட்டிருப்பதும் நினைவுக்கு வருகிறது.

மரகதம் (இலங்கை) இதழில் 1961இல் கா.சிவத்தம்பி பட்டுக்கோட்டையார் குறித்து அதிகமாக எழுதியிருக்கும் கட்டுரையில் திரைக் கவிஞர்களை நான்காகப் பிரித்து சிறிது அல்சியிருக்கிறார். கம்பதாசன், கண்ணதாசன், குயிலன், சுரதா இவர்களை முதன்மையாக வைக்கும் கா.சிவத்தம்பி, மனதை ஈர்க்கும் இளங்கவிஞர்கள் என மூவரைக் குறிப்பிடுகிறார், அவர்களுள் ஒருவர் ஜெயகாந்தன். கட்டுரையின் தலைப்பு திரை வளர்த்த கவிதை.

இடையே திரைப்பாடல்களில் இருக்கும் எதுகை மோனை சந்தங்களை அலசும் கட்டுரை ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. இந்த நூற்றாண்டில் தோன்றிய சிறந்த கவிதைகளின் தொகுதியில் சில திரைப் பாடல்களும் இடம் மெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை என்று உறுதியாகச் சொல்லி முடியும் இக்கட்டுரை, 1968இல் செல்வம் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது.

அதே வருடத்தில், 'நான் கடைசியாகப் பார்த்த படம் ஆர்ய மாலா' எனத் துவங்கி சுத்தானந்த பாரதியவர்கள் தனது எண்ணங்களை பொம்மையில் பகிர்ந்திருக்கிறார். காம உணர்ச்சிப் படங்கள் கலையுலகைப் பற்றிக்கொண்டன என வருத்தம் தொனிக்க எழுதியிருக்கும் அவர், காலை ஐந்து மணிமுதல் எட்டு மணிவரையில் ஏன் ஒரு திரைக்காட்சி வைக்கக்கூடாது, தூங்குமூஞ்சிகள் சிலர் சினிமா என்றால் விழித்துக்கொள்வார்களே என்னும் நகைச்சுவையுடன் மிகவும் சுருக்கமாகக் கட்டுரையை முடித்திருக்கிறார்.

பெரியார், இராஜாஜி, சிலம்புச் செல்வர் ஆகியோரின் கட்டுரைகளும் உள்ளன.

தமிழ்த் திரையின் வரலாறு குறித்தும், அதன் அந்தக்கால பின்புலங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள நினைப்போர் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரைத் தொகுப்பு இது. எண்பதாண்டுகால வரலாறு எழுத்தாளர்களின் பார்வையில் அவரவர் கோணத்தில் பகுதி பகுதியாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த அரிய கட்டுரைகளைத் தேடிப் பிடித்து தொகுத்துத் தந்திருக்கும் தியோடர் பாஸ்கரன் அய்யா பாராட்டுக்குறியவர்.

எனது புத்தக அலமாரியில் ஏற்கெனெவே இருக்கும் திரை தொடர்பான தமிழ்ப் புத்தகங்கள்,
தமிழ் சினிமாவின் கதை (அறந்தை நாராயணன்)
உலக சினிமா (எஸ்.ரா.)
நானும் இந்த நூற்றாண்டும் (வாலி)
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. (ராணி மைந்தன்)
திரைக்கதை எழுதுவது எப்படி? (சுஜாதா)
இவற்றுடன்,
சமீபத்தில் படித்த சித்திரம் பேசுதடியும் சேர்கிறது.

அன்புடன்
ஆசாத்

1-நண்பர்கள்:
முருகனார், பாரா, பிரகாஷ், வெங்கடேஷ், சேவியர்.

2-மகாதேவி:
சக்கரவர்த்தித் திருமகள், அடிமைப் பெண், பெரிய இடத்துப்பெண், அரசிளங்குமரி, மந்திரி குமாரி, தாய்க்குப் பின் தாரம் இப்படிச் சில படங்கள் (எம்.ஜி.ஆர். நடித்த) பெயர்களில் பெண் பாத்திரங்களை முன்னிறுத்தியிருக்கின்றன. ஆனாலும், அசோகமித்ரன் குறிப்பிட்டிருப்பதுபோல் மகாதேவியில் மட்டுமே கதையமைப்பில் நாயகனையும் மிஞ்சும் முக்கியத்துவமுள்ள நாயகி.

3-எம்.ஜி.ஆர். பாடல்கள்:
திலகவதி அம்மையார் குறிப்பிடும் இரண்டு எம்.ஜி.ஆர். பாடல்களும் அவர் சொல்கின்ற 'பாலியல் ரீதியான தாக்குதலின் துவக்கம்' என்கிற குற்றச்சாட்டுக்கு உட்படாது என்பது நான் கொண்டிருக்கும் மாற்றுக் கருத்து.

ஆடவாங்க அண்ணாத்தே (சக்கரவர்த்தித் திருமகள்) நடனப் போட்டிக்கான பாடல். பெண் பாத்திரம் (ஈ.வி.சரோஜா) ஆடிக்காட்டி, நாயகனை போட்டிக்கு அழைப்பதான பாடல். நாயகன் பாடும் வரிகளில் பெண்ணை கேவலப்படுவதான அமைப்பு கிடையாது.

பாரப்பா பழனியப்பா (பெரிய இடத்துப் பெண்) கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த நாயகனின் மனதைப் பிரதிபலிக்கும் பாடல். அப்பாடலில் அடுப்பூதும் பெண்கள் அச்சடித்த காகிதத்தைச் சுமப்பதான வரிகள்தான் பெண்ணைப் பற்றிய வரிகள், மற்ற வரிகள் பட்டணம் குறித்தே பேசும்.

Comments

Boston Bala said…
நன்றி.... நன்றி.... நன்றி! வெகு நேர்த்தியான கட்டுரை. வாங்கியதை படித்து முடித்தபிறகுதான் புத்தகக்கடை பக்கம் ஒதுங்குவது என்னும் விரதத்தை முறியடிக்க வைக்கும் பதிவு :-)
தியோடர் பாஸ்கரனின் சினிமா குறித்த கட்டுரைகள் ஒருபுறம் இருக்கட்டும். சுற்றுச் சூழல் பற்றியும் பல்லுயிர்கள், வனம் சார்ந்த பகுதிகள் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. "காடை 65" என்று உணவுடன் சம்பந்தப்படுத்திதான் ஒரு பறவையினத்தை அறிந்து கொள்கிறோமே தவிர நம்மைச் சுற்றியுள்ள பல உயிர்கள் பற்றிய அறிவோ, அக்கறையோ பெரும்பான்மையினருக்கு கிடையாது.


//சத்யஜித் ராயைத் தமிழர்களால் ரசிக்க முடியாது என்று எங்கோ ஜெயகாந்தன் குறிப்பிட்டிருப்பதும் நினைவுக்கு வருகிறது.//



நான் படித்த வரை ஜெயகாந்தன் இப்படி கூறினதாக நினைவில்லை. "ஒரு இலக்கியவாதியின் திரைப்பட அனுபவங்கள்" நூலில் ஜனாபதியின் தங்க விருதுக்காக ஜெ.காவின் படமும் ரேயின் படமும் ஒன்றையொன்று முந்தின அனுபவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஓகை said…
மிகச் சிறந்த புத்தக விமர்சனம். புத்ட்க்ஹகம் வாங்குவதாக முடிவு செய்து விட்டேன்.
இனிய பாலா,

டான் கேசெட் வாங்கிட்டீங்களா ;-)

*

இனிய வணக்கத்துடன்,

விவரங்களுக்கு நன்றிகள்.

*

சுரேஷ்ஜி,

பொருள்முதல் வாதத்தில் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு மற்ற மனமகிழ் சமாசாரங்களில் நேரம் கிடைப்பது நாம் செய்திருக்கும் புண்ணியம். சிலருக்கு நம்மைப் போன்ற பாக்கியம் இல்லை.

வாழ்வியல் மதிப்பீடுகள் மாறிவரும்போது, சில நுண்கலைகள் விலகித்தான் போகும். சல்தா ஹை சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டும்.

*

நடராஜன் அய்யா,

நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...