Skip to main content

புல்லட்

புல்லட்

மற்ற இருசக்கர வண்டிகளை ஓட்டிப் பழக்கப்பட்டு முதன்முறையாக புல்லட்டை ஓட்டினால் "லெ·ப்ட்ல ப்ரேக், லெ·ப்ட்ல ப்ரேக்" என்று ஜெபித்துக்கொண்டே ஓட்டுவது நல்லது.

கார்களையே ஓட்டிப் பழக்கப்பட்டு முதன்முறையாக புல்லட்டைத் தொடுபவர்களும் கட்டாயம் இந்த ஜெபத்தினை உச்சரிக்கவேண்டும். அப்போதுதான் திடீரென்று வண்டியின் முன்னே நுழையும் இடையூறுகளைச் சமாளிக்க அனிச்சையாக வலது காலால் ப்ரேக்கை அழுத்துவது விடுத்து, இடது காலால் ப்ரேக்கை அழுத்தி விபத்தைத் தவிர்க்கலாம்.

மற்ற வண்டிகளுக்கு வலது காலால் ப்ரேக் என்றால், புல்லட்டிற்கு மட்டும் இடது காலால் ப்ரேக். ஓரிரு முறைகள் ஓட்டிப் பழகி விட்டால், அதில் அமர்ந்ததும் வருகின்ற கம்பீரம் போலவே 'இடது கால்' உணர்வும் தானாக வந்துவிடும்.

புல்லட் 350, புல்லட் 500, எலக்ட்ரா வகைகளில் மட்டுமே இடது கால் ப்ரேக் வழக்கம். அவை விடுத்து 'தண்டர் பேர்ட்'டில் இந்தப் பிரச்சனை கிடையாது. தண்டர் பேர்டில் ப்ரேக் வலது புறம்தான். அதனை அறிமுகப் படுத்தும்போதே, 'வலப்புற ப்ரேக்' என்னும் வாசகம் விளம்பரத்தில் இருந்தது. விளம்பரமும் வண்டியும் வெளிவந்த வருடம் இரண்டாயிரத்து ஒன்றா, இரண்டா என்பது சரியாக நினைவில்லை.

ப்ரேக் வலப்புறம் இருந்தால் என்ன, இடப்புறம் இருந்தால் என்ன, படபடவென புல்லட்டில் பயணம் செய்யும்போது கிடைக்கும் மரியாதையே தனி.

நானறிந்த வட்டாரத்தில் புல்லட் வைத்திருந்தவர்கள் செல்வாக்கு உள்ளவர்களாகவே இருந்தார்கள். காவல் துறை அதிகாரி, தென்தமிழகத்திலிருந்து வந்து சென்னையில் வியாபாரம் செய்பவர்கள், நெடிய பருத்த தோற்றம் உள்ளவர்கள், இப்படியானவர்களுக்கு அது செல்வாக்கு வாகனமாக இருந்தது / இருக்கிறது. வெள்ளை வேட்டி, தங்கக் கடிகாரம், முறுக்கு மீசை, பருத்த உடல் இவை புல்லட் 500உடன் பொருந்தியது போலவே, இப்பொழுது ஜீன்ஸ், கண்ணை ஈர்க்கும் 'டி' ஷர்ட், CAT காலணிகள் தண்டர் பேர்டுடன் பொருந்துகின்றன.

தண்டர் பேர்ட் இளையவர்களை நன்றாகவே ஈர்த்துவிட்டதாகத் தெரிகிறது. அருகில் வரும் மற்ற இருசக்கர வாகன ஓட்டிகளைப் பெருமூச்சு விடவைப்பதற்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய் முதலீடு தேவையாக இருக்கிறது.

எட்ட இருந்து பார்த்தால் சீறுவதற்குத் தயாராக இருக்கும் சிங்கமாக நிற்கும் புல்லட், நன்றாக ஓட்டத் தெரிந்தவர்களின் கைகளில் குழந்தைதான். காலை ஊன்றி அங்கும் இங்கும் தள்ளிச் செல்லும் கதையெல்லாம் இதில் கிடையாது. குறுகிய திருப்பமாக இருந்தாலும் த்ராட்டலைக் குறைத்து லேசாக ப்ரேக்கில் கால் வைத்தபடி நளினமாகத் திருப்பலாம்.

எந்த வேகத்திலும் ப்ரேக்கை அழுத்தியதும் நச்சென வண்டி நிற்கும். எல்லா வண்டிகளும் ப்ரேக்கை அழுத்தினால் அப்படியேதான் நிற்கும். ஆனாலும், புல்லட் நிற்கும் அழகே தனி. முன் சக்கரத்தைத் திருப்பி அப்படி இப்படி ஆடும் நாட்டியங்களெல்லாம் இதில் கிடையாது. நேராக நினைத்த இடத்தில் நிற்கும்.

சிகப்பு நிறத்தில் பாகங்களும், குரோமியப் பூச்சில் ஜொலிக்கும் கண்கவர் அமைப்புகளும், பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட 'ராயல் என்·பீல்ட்' இலச்சும், "என்றைக்கு என்னை சொந்தமாக்கிக் கொள்வாய்" எனக் கேட்பதாவே தோன்றும்.

*

மாணவப் பருவத்திலிருந்து என்னுடன் புல்லட் கனவுகளைப் பகிர்ந்துகொள்ளும் நண்பர் ஒருமுறை சொன்னது,

"கேன்சல் பண்ணிட்டு வர்ரதுக்கு ஒரு மாசம் முன்ன சொல்லு'பா போதும். வாங்கி ரெடி பண்ணி வெச்சிர்ரேன். வந்ததும் ஓட்டலாம். ஒனக்கெல்லாம் ப்ரேக் ஒரு பிரச்சனையே இல்ல. வேணும்னா த்ரீட்·பி·ப்டி டீசல் வாங்கிக்கோ. தண்டர் பேர்ட் ஒன்னோட வயசுக்கு சூட் ஆவாது'பா. பெசண்டுல ஷோரூம் இருக்கு. டீலர்ட்டயும் போலாம். புதுசாவே எடுத்துரலாம். ரிடர்ன் ஆவும்போது டூவீலர்ல போயி பணத்தப் போடணுமான்னு நெனச்சியானா யூஸ்டு கூட வாங்கி ரெடி பண்ணிரலாம். மொறைக்காத'பா, ஒரு பேச்சுக்கு சொன்னேன். கல்·புல இருக்கும்போது நெலம வேறல்ல"

*

அந்த 'கல்·புல இருக்கும் போது'விற்கு வாழ்க்கைப்பட்டு, தொலைத்த கனவுகளில் இளவயதில் புல்லட்டின் சொந்தக்காரனாகவேண்டும் என்ற கனவும் ஒன்று.

கேன்சல் செய்துவிட்டு ஊருக்குச் செல்லும்போது புல்லட் கிடைக்கும், வயது கிடைக்குமா?

அன்புடன்
ஆசாத்

Comments

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...