
நண்பர் ப்ரகாஷ் முகப்புத்தகத்தில் இந்தப் படம் கிடைக்குமாவெனக் கேட்டிருந்தார். உடன் இருக்கும் சிங்க மராட்டியர்களிடம் படத்தின் பெயரைச் சொல்லிக் கேட்டேன். உடனடியாக இதெல்லாம் வராது, வந்தால் சொல்கிறேன் என்றார்கள். சென்றவாரத்தில் வெளியாகியிருப்பதாகச் சொன்னார்கள், பார்த்தேன். படம் பார்த்து முடித்தபின் வழமைபோலவே நான் படிக்கும் சில திரைவிமர்சகர்களைப் படித்தேன். படம் குறித்து மிக நன்றாக எழுதியிருந்தார்கள். விக்கியில் இப்படம் குவித்த விருதுகளை பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். நல்ல படம்.
படத்தின் பின்னணி கி.பி.1911 முதல்.
சராசரி மத்தியதரக் குடும்பஸ்தனாக இருக்கும் பால்கே, அரங்கில் ஏறி பார்வையளர்களை மகிழ்விப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறாரேயன்றி, தனது அச்சாபீஸை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. பால்கே நடத்தும் அச்சாபீஸ் தொழிலில் பணம் போட்டு பங்குதரராக விரும்பும் பெரிய மனிதரைக் கண்டால் ஓட்டம் எடுக்கிறார். ஓடி ஒளியும்போது தற்செயலாக டெண்ட் கொட்டகையில் ஊமைப்படம் வெளியிடப்பட்டிப்பதக் காண்கிறார். இரண்டு அணா (12 காசுகள்) கொடுத்து சீட்டு வாங்கி சலனப் படத்தைப் பார்க்கிறார். அது அவரை ஈர்க்க, மனைவி இரண்டு மகன்கள் என குடும்பத்தினரோடு மீண்டும் வந்து பார்க்கிறார். மற்றவர்கள் திரையைப் பார்க்க இவர் மட்டும் திரும்பி அமர்ந்து ஒளி வரும் திசையைப் பார்க்கிறார். சலனப் படங்களால் ஈர்க்கப்படுகிறார்.
வீட்டிலிருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களை விற்று பயாஸ்கோப் என்னும் புத்தகத்தை வாங்கி வந்து படிக்கிறார். பின்னும் சில வீட்டுப் பொருள்களை விற்று கொட்டகையில் ஆபரேட்டராக இருப்பவருக்கு பணம் தந்து பிலிம் சுருள்களைப் பார்ப்பதும், எப்படி படம் திரையில் காட்டப்படுகிறது எனப் புரிந்துகொள்வதும், சில பிலிம் துண்டுகளை வீட்டிற்குக் கொண்டுவருவதுமாக அவருடைய பொழுது கழிகின்றது. பிலிம் துண்டுகளைப் பார்த்துப் பார்த்து, நிஜவாழ்விலும் எல்லாவற்றையும் காமிர கோணம் பார்ப்பதாக இவர் பார்க்கத்துவங்கியதும், இவருக்கு சித்தப் பிரமை பிடித்திருப்பதாக நினைத்து மயக்க மருந்து கொடுத்து பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறார்கள். மயக்கம் தெளிந்து ஓடி வந்து விடுகிறார். தான் பைத்தியம் கிடையாது என்று மற்றவர்களுடன் சண்டைக்குப் போகிறார்.
தொடரந்த உழைப்பால் கண்கள் இரண்டும் பாதிக்கப்படுகின்றன. அதிலிருந்து மீண்டு வந்து திரும்பவும் சலனப்படம் தொடர்பான நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகிறார்.
தானே வீட்டில் லென்சுகளை ஒருமாதிரியாக வைத்து ஒரு பிலிம் துண்டை திரையில் காட்டுகிறார். பறவை ஒன்று அதில் தெரிய குடும்பத்தார் மகிழ்கிறார்கள். பிறகு, ஒரு விழியின் க்ளோஸ் அப்பை திரையில் காட்ட அனைவரும் மிகவும் மகிழ்கிறார்கள்.
வெறும் பிலிம் துணுகளை வைத்து அசையாப் படமாக திரையில் காட்டுவதுடன் அவர் திருப்தியடைந்துவிடவில்லை. லண்டன் சென்று அசையும் படம் குறித்து தெரிந்துவரவேண்டி காப்பீடுகளை அடமானம் வைத்து லண்டனுக்கு அவர் புறப்படும்போது, அவர் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். லண்டனில் தங்கி சலனப் படம் குறித்து பயிற்சிகள் எடுத்து கர்காவ்ன் (மகாராஷ்டிரா) வரும்போது அவருக்கு மூன்றாது குழந்தை பிறந்திருக்கிறது.
முன்னம் முதலீடு செய்வதாகச் சொன்ன பெரிய மனிதரிடம் சென்று, தான் புதிய தொழில் தொடங்கவிருப்பதாகவும் அதற்கு அவருடைய பங்களாவைத் தரவேண்டுமென்று கேட்டுப் பெருகிறார். லண்டனில் வாங்கிய காமெரா வந்து சேருகின்றது. கண்ணில் கண்ட எல்லாவற்றையும் படமாக்குகின்றார். குழந்தையைக் கொஞ்சுவது, சப்பாத்தி சுடுவது என எல்லாம் படமாகின்றன. ஒரு சலனப் படம் எடுப்பது அவருடைய லட்சியமாக இருக்கிறது. முதலீட்டாளர்களை சந்திக்கிறார், அவர்கள் பணம் போடத் தயங்கும்போது பால்கேயின் துணைவியார் தனது நகைகளை முதலீட்டாளர்களிடம் அடகாகத் தந்து பணம் பெருகின்றார்.
ஒரு விதையை ஊன்றி தொட்டியை நோக்கி கேமராவை வைத்து தினசரி காலையில் ஒவ்வொருநாளும் அதே நேரத்திற்கு காமிராவை ஒரு சுற்று சுற்றுமாறு துணைவியிடம் சொல்கிறார். விதையிலிருந்து செடி முளைத்து வெளிவருவது படமாக்கப்படுகிறது. முதலீட்டாளர்களையும் நண்பர்களையும் அழைத்து செடி வளரும் சலனப்படத்தை திரையில் காட்ட அவர்கள் மகிழ்ச்சிக்கும் வியப்புக்கும் ஆளாகின்றார்கள். சலனப் படம் துவங்குகின்றது.
படத்தின் கதையானது இந்திய சாஸ்திர சம்பிரதாயமுள்ள கதையாகத்தான் இருக்கவேண்டும் என்று பால்கே விரும்பியதால், அரிசந்திரனின் கதையை படமாக்குகின்றார்கள். பால்கே வாழும் சமூகத்தில் அவர்களுடைய வாழ்க்கையை நெறியைப் பார்த்து அண்டை அசலார் பால்கே தம்பதியரை அரிச்சந்திரன் - சந்திரமதி என்றே அழைப்பது, அரிச்சந்திரன் நாடகத்தை பால்கேயின் குழந்தைகள் அடிக்கடி ஒத்திகை பார்ப்பது இவை பால்கேயின் முடிவுக்கு ஒரு காரணம்.
ஏகப்பட்ட சிக்கல்களைக் கடந்து படத்தைத் தயாரித்து வெளியிடுகிறார்கள். விளம்பரம் சரியாக இல்லாமல் ஈ ஓட்ட, பிறகு சந்தைக்கடையில் வீதியில் என நோட்டீஸ் அச்சடித்து விநியோகிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் சேர்ந்து கொட்டகை நிறைகின்றது. பால்கே அடுத்த படத்தைத் துவங்குகிறார், அடுத்த படத்தைத் துவங்குகிறார். எல்லா படங்களையும் லண்டனுக்கு எடுத்துச் சென்று திரையிடுகின்றார். லண்டனார் பால்கேயை லண்டனிலேயே தங்கிப் படமெடுத்தான் நிறையப் பணம் தருவதாகச் சொல்கிறார்கள். லண்டன் வேண்டாம், இந்தியாவில் இதனை தொழிலாக வளர்க்க விரும்புகின்றேன், என்று நன்றியுடன் மறுத்து இந்தியாவில் சலனப்படங்களை எடுக்கின்றார்.
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அசையும் படங்கள், பொம்மைகள் எதுவாக இருந்தாலும், பால்கே பொம்மை என்று தெருவில் கூவி விற்கும் நிலை வந்திருப்பதைக் காட்டியதும் ‘ஹரீஷ்சந்த்ராசி ஃபாக்டரி’ முடிகின்றது.
முடிவில் போடப்படும் எழுத்துகளில், அன்றைக்கு பால்கேவால் எளிமையாகத் துவங்கப்பட்ட இந்தத் தொழில் இன்றைக்கு இந்தியாவில் 20 மொழிகளில் ஆண்டுக்கு 900 படங்கள் என்பதாக வளர்ந்திருக்கிறது என்னும் செய்தியோடு முடிகின்றது. ரசிகனுக்கு பால்கே குடும்பத்தாருடன் சிறிது நாள்கள் வழ்ந்து பார்த்த அனுபவம் கிடைக்கிறது.
இந்தப் படம் குறித்து சொல்வதென்றால், எந்தக் காட்சியிலும் பால்கேவை ஒரு ஹீரோவாக உயர்த்தும் நிலையைக் காண முடிவதில்லை. கிட்டத்தட்ட கொஞ்சம் காமெடி + கொஞ்சம் சீரியஸ் கலந்த பாத்திரமாகவே சித்தரித்திருக்கிறார்கள். படமெடுக்கும் முயற்சியில் பால்கே படுகின்ற கஷ்டங்களைக்கூட மிகச்சாதாரணமாக அன்றாடம் நடக்கும் விவரமாக முன்வைத்து நகைச்சுவையைத்தான் கூட்டியிருக்கிறர்களேயன்றி நெஞ்சைப் பிழியும் சோகம், பிள்ளைகள் சோற்றுக்கு அழுவது இத்தியாதிகளெல்லாம் கிடையாது.
ஏற்கெனவே பல படங்களில் பார்த்திருக்கும் உத்தியாக படத்தின் காலத்தை வாசகனுக்கு நினைவூட்டும் வசனங்களாக திலகர் கைதாவது விடுதலையானதெல்லாம் வந்து போகின்றது. லண்டனிலிருந்து திரும்பி வந்து தானே (Thane) பங்களாவில் பால்கே தங்கும் சமயத்தில் பின்னணியில் புகைவண்டியை ஓட வைத்து அதனையும் வசனத்தில் அனாயசமாக இணைத்திருக்கிறார்கள் (இந்தியாவின் முதல் இருப்புப்பாதை மும்பை டூ தானே தானே :-))).
வசனங்களால் காலத்தை உணர்த்துவது சில இடங்களில் நன்றாக வந்திருக்கிறது (நான் புரிந்து கொள்ள உபயம் ஆங்கில சப்டைட்டில்கள்).
1.
“என்னா இவன் தானே (Thane) பங்களாவுக்கு போயி தங்கப் போறானாம், தானே காடுல்ல, அங்க பிராணிங்கதான இருக்கு?”
“ஆமா, அதுங்களோட இவனும் போயி இருக்கட்டும், இவனும் ஒரு வகைல பிராணிதான்”
2.
"இங்க பாரு, ரெயில் வண்டி வரும்போதும் இப்படித்தான் இது ஓடாதுன்னாங்க, இப்ப ஓடுது, அப்படித்தான் சலனப் படமும் - முடியாதுன்றாங்க, நான் முடிச்சுக் காட்டுவேன்”
லண்டனில் தங்கிவிடு என்னும் கோரிக்கை முன்வைக்கப்படும்போது, "Then it will not be established as an industry in India" என்னும் வசனத்தை மிகச் சாதாரண உரையாடலாக பால்கே சொல்கிறார். Psudo பேட்ரியாட்டிக் கிளிஷேக்கள் கிடையாது, குளோஸ் அப் கிடையாது, பின்னணியில் இந்திய நாட்டு மேப் கிடையாது, ஒன்றும் கிடையாது. மொத்த திரைக்கதையின் ஒருவரிக் கருவான அந்த ஒரு வரி படத்தில் சராசரியான உரையாடலுக்கு உள்ள தன்மையோடு மட்டுமே சொல்லப்படும்போது வியந்தேன். ஆங்கில உரையாடல்களை ஆங்கிலத்திலும் மற்றவற்றை மராத்தியிலும் அமைத்திருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் சலனப் படம் எடுப்பவர்கள் பட்ட சிரமங்கள், திரைத் துறையில் இருந்தாலே கவுரவக் குறைச்சலென்ற எண்ணங்கள், மூடநம்பிக்கைகள், கதாநாயகியாக நடிக்க எவரும் முன்வராத நிலையில் ஸ்திரீ பார்ட்டை ஆண்களே ஏற்றல், சலனப் படம் என்பதையே ஏற்க இயலாத மனநிலையில் சமூகம் இருத்தல் என பல தளங்களில் விரியும் கதைக்களன் ரசிக்கும்படியாக இருக்கின்றது. மேலே சொன்ன தேசபக்தி வசனத்திற்குண்டான தன்மையைப் போலவே எந்தக் காட்சிக்கும் முன்னுரிமை கிடையாது. எல்லா காட்சியும் படத்தில் ஒரு அங்கம் அப்படித்தான் இருக்கின்றன.
முதலீட்டிற்கு நகையை அடகு வைக்கும்போது திருமதி பால்கே அழுவதோ, மனவெழுச்சியில் பேசுவதோ கிடையாது, பால்கே லண்டனில் இருக்கும்போது இந்தியாவில் குழந்தை பிறக்க அதற்காக அப்பா அங்கே இருக்கிறாரே இங்கே இல்லையே போன்ற வசனங்கள் கிடையாது, கண் பாதிக்கப்பட்டிருக்கும்போது என்னங்க இப்படி ஆயிடுச்சே என கண்ணீர் வடிக்கும் திருமதி பால்கே கிடையாது, அவுட்டோர் ஷூடிங்கில் அடிபட்ட மகனை ரயிலில் மும்பைக்கு அழைத்து வரும்போது பரபரப்பாக ரயில் சக்கரத்தைக் காட்டி ரத்தப் பெருக்கைக் காட்டி, மகனே ஒனக்கு அடிபட நானே காரணமாயிட்டனடா என்று உச்சபட்ச டெசிபெல்லில் முழங்கி பிலிம் சுருள்களை வீசியடித்து, நோ நோ நான் ஜெயிப்பேன் ஜெயிப்பேன் ஜெயித்துக் காட்டுவேன் போன்ற நாடகத்தன்மையெல்லாம் கிடையாது. அனைத்தும் சாதாரணமாக ஆனால் ரசிகனின் நினைவில் நிற்கும்படியாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
படத்திற்கான விளம்பர நோட்டீஸ் கொடுத்துக்கொண்டிருக்கையில் குதிரையில் வரும் பிரிட்டிஷ் போலீஸ், ‘ம்ம்...கலைந்து போ’ ஒரு வார்த்தைதான், கீழ்மட்ட இந்தியனின் விடுதலை வேட்கை கீற்றாக ஒளிர்கிறது.
விலைமாதராக இருப்பதை பெருமையாக நினைத்து கதாநாயகியாக நடிப்பதை தரக் குறைவாகப் பேசும் விலைமாதர்களை இப்படத்தில் பார்க்கலாம். ’எனக்கு சினிமா என்றால் என்னவென்று தெரியும், நான் நடிக்கிறேன்’ என்று துணிச்சலாக வரும் ஒரு விலைமாதைக்கூட அவருடைய வாடிக்கையாளர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து சத்தம் போட்டு திரும்ப அழைத்துச் சென்றுவிடுகிறார். ’நீ இவளுக்காக எவ்வளவு கொடுத்தாயோ அதனினும் இரண்டு மடங்கு நான் தருகிறேன் அவளை விட்டுவிடு. ஏனடி சலனப் படத்தில் நடிக்க உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று பார்சி பாபா அந்தப் பெண்ணை அழைத்துப் போகும்போது “நான் நடிக்கிறேன்” என்று தன்னம்பிக்கையோடு வந்த பெண்ணின் கனவு நசுக்கப்பட்டதெல்லாம் ஏகப்பட்ட வயலின் ஒலியுடன் கிடையாது, ஜஸ்ட் லைக் தட், அவ்வளவுதான். ஆனால், எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
திரையில் ஆர்வமிருக்கும் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.
Comments
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in