Skip to main content

அங்காடித் தெரு - எனது பார்வையில்

அங்காடித்தெரு நன்றாக இருக்கிறது என அறிந்ததும் அது எப்பொழுது துபாயில் திரையிடப்படுகிறது என்று நண்பர்களிடம் வினவினேன். கேலரியாவில் திரையிடப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். துபாயில் நட்சத்திர மதிப்புள்ள படங்களைத்தான் பொதுவாகத் திரையிடுவார்கள், அங்காடித் தெருவைத் திரையிட்டிருக்கிறார்களே எப்படி என்று யோசித்துக்கொண்டே அரங்கத்தை அடைந்தேன். துபாய்க்காரர்களின் கூற்று சரியே. என்னையும் சேர்த்து நேற்றைய மாலைக்காட்சியில் பத்துப் பேர்தான் அரங்கில் அமர்ந்திருந்தோம். கந்தசாமிக்கும் ஆதவனுக்கும் வேட்டைக்காரனுக்கும் கொட்டகை நிறைந்து சீட்டியொலியால் அதகளமான கேலரியா எங்கே, பத்தே பத்து ரசிகர்களை நேற்று கண்ட கேலரியா எங்கே. துபாய் ரசிகர்களுக்கு இப்படியான படங்கள் தேவையில்லையெனத் தோன்றுகிறது. சல்தாஹை.

இந்தத் திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒருபுறமும், முதலாளிகளை வில்லன்களாக மட்டுமே காட்டியிருக்கும் நெருடல் மறுபுறமுமாக இரண்டு மாறுபட்ட உணர்வுகளுக்கு ஆட்பட்டிருக்கிறேன். ஒரு திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என்று தனித்தனியாக ஆய்ந்தறியும் அளவிற்கு தொழில்நுட்ப ரீதியாக திரைப்படங்களை அறியும் திறன் இல்லாவிடினும், வணிகத்திரைக்குச் சற்று மேல் யோசிக்கும் சராசரி ரசிகனின் கண்ணோட்டத்திலிருந்தும், மனநிலையிலிருந்தும் இந்தப் படம் குறித்த பார்வையை பகிர்ந்துகொள்கிறேன்.

எம்.ஜி.ஆரின் குரலில் ’என்னப் பெத்த தாய் மீது சத்தியமா நான் போனை எடுக்க மாட்டேன்’ என்று பேசப்பட்ட வசனத்தை ஒருவர் ரிங்டோனாக வைத்திருக்கிறார். இரவின் அமைதியான சூழலில் பேருந்து நிலையத்தில் மக்கள் நின்றிருக்கும்போது செல்பேசி ஒலிக்கிறது, இந்த ரிங்டோன், ஒலிக்க விடுகின்றார்கள், ஐந்தாறு விநாடிகள் யாரோ பலகுரல் மன்னன் பேசிய எம்.ஜி.ஆர். குரல் நையாண்டியாக செல்பேசியில் ஒலிக்கிறது. அவர் போனை எடுத்து ’கஸ்மாலம் வூட்டுக்குத் தான வந்துக்குனுக்குறேன் அதுக்குள்ளார இன்னா போனு’ என்று கத்துகின்றார். தசாவதாரத்தில் பல்ராம் நாயுடு காட்சியில் நகைச்சுவையை வரவழைக்க நாயுடுவின் செல்பேசியில் தெலுங்குப் பாடலை ரிங்டோனாக ஒலிக்கவிட்டார்கள், அதைப்போலவே இங்கே எம்.ஜி.ஆரின் குரலில் பேசப்பட்ட வசனம். படத்திற்கு வசனம் எழுதியவர் ஜெயமோகன் அய்யா அவர்கள். அந்த ரிங்டோனுக்கும் வசனம் எழுதியவர் அய்யாவா, அல்லது எம்.ஜி.ஆர். குரலில் பேசப்பட்ட ரிங்டோன்கள் எங்காவது தயாராகக் கிடைக்கின்றனவா என அறியேன்.

சினேகாவின் விளம்பரப் படப்பிடிப்பு. சேலையை ஒழுங்காகக் கட்டிக்கொண்டு நடனமாடுகிறார். முதலாளி அண்ணாச்சி விளம்பரப்பட இயக்குநரைப் பார்த்து, ’என்னங்க இப்படி மூடிக்கிட்டு ஆடறாங்க, சரோஜாதேவி மாதிரி முந்தானைய வீசி வீசி ஆடவேணாமா’ என்று சொல்ல, அடுத்த காட்சியில் முந்தானை பறக்கிறது.

சரோஜாதேவி மாதிரி ஆடவேண்டாமா என்பதாக மட்டுமே இந்த வசனம் அமைந்திருந்தால் அதில் சொல்வதற்கு ஏதுமில்லை, அது முதலாளியின் விருப்பம் அவ்வளவே. என்ன இப்படி மூடிக்கிட்டு ஆடறாங்க என்னும் வாக்கியத்தைத் தொடர்ந்து சரோஜதேவியின் நடனத்தை உதாரணம் காட்டியது, எனக்குக் கொஞ்சம் நெருடியது. அது தேவையற்ற நெருடல் என்றும் சிலர் நினைக்கலாம். அவரவர் பார்வை அவரவர் விருப்பம். இன்றைய நாயகியர் பலரின் உடையுடன் ஒப்பிடும்போது சரோஜாதேவியவர்களின் உடை முகம் சுளிக்கும்படியாக இருந்திருக்கிறதா என யோசிக்கிறேன்.

நான் ரசிக்கும் நா.முத்துக்குமாரின் வரிகள் இசையமைப்பால் இப்படி கனமில்லாமலும் ஒலிக்கக்கூடும் என்று பாடலைக் கேட்கும் வரையில் நினைத்தும் பார்க்கவில்லை.

கற்றது தமிழில் இருந்ததை விடவும் அல்லது தோன்றியதைவிடவும் கதாநாயகி இதில் உயரமாகியிருக்கின்றார். உயரமான நாயகனுக்கு இணையாக இதில் நடித்திருக்கிறார். கொஞ்சம் உயரக்குறைவுள்ள நாயகர்களுடன் இவரால் வலம் வர முடியுமா?

குள்ள கணேசனும் அவனது மனைவியும், போலி பேக்கிங் போட்டு டீஷர்ட் விற்கும் வியாபாரி, குப்பை பொறுக்கும் முதியவர், வெரிக்கோஸால் பாதிக்கப்பட்ட ஆள், என்று தனித்தனியாக ஆள்கள் வந்து அவரவர் பங்குக்கு வசனங்கள் பேசிச் சென்றது, பண்டார்க்கரின் டிராஃபிக் சிக்னலில் இது போன்ற பாத்திரங்கள் தனித்தனியே வந்துபோனதை நினைவுபடுத்தியது. கதைக்களனின் ஆழத்திற்கு ரசிகனை இட்டுச் செல்லும் உத்திகளுள் இதுவும் ஒன்றோ?

தியாகம், இலக்கு இந்த இரண்டில் எதுவும் இந்தப் படத்தின் முதன்மை நோக்கு அன்று, காதலும் கஷ்டங்களுமே இதன் நோக்கு, இருப்பினும், தியாகமும் இலக்கும் இரண்டே காட்சிகளில் வந்து என்னை ஈர்த்தது. கஷ்டத்தை அனுபவிப்பவனுக்குதான் கஷ்டம், தனது சகோதரன் சோற்றுக்கு அடித்துக்கொள்கிறான், மந்தையாடுபோல் உறங்குகிறான் என்பதெல்லாம் தெரியாதவரையில் அவனது தங்கைக்கு அண்ணன் வேலை செய்யும் கடையின் பை அதிமுக்கியமான பொருளாகின்றது. நாசரேத் பேருந்துநிலையத்தில் அண்ணன் வேலை செய்யும் கடையின் பை கண்ணில் பட்டவுடன் அதைத் தொடர்ந்துபோவது, தொட்டுப் பார்ப்பதும், அக்கா இந்தப் பையக் குடுங்கக்கா, எங்கண்ணன் இந்தக் கடைலதான் வேலபாக்குது என கெஞ்சுவதும், அந்தப் பையை வீட்டுச் சுவற்றில் அப்பாவின் படத்துக்கு அருகில் மாட்டிவைத்து அழகுபார்ப்பதும், அட்டகாசமான காட்சிப் பதிவுகள். துர்நாற்றமடிக்கும் பொதுக்கழிப்பறையை சுத்தம் செய்து அதில் பணம் வசூலித்து வளரும் இளைஞரும் ஈர்க்கிறார். முதன்மைக் காட்சிகளாக அல்லாமல் வந்திருக்கும் இக்காட்சிகள் இரண்டும் எனக்குப் பிடித்திருந்தன.

முதலாளிகளின் அணுகுமுறைகள் மட்டுமே பெரிதாக சுட்டிக்காட்டப்படும் காட்சியமைப்புகளின் இடையே, சேல்ஸ் கேர்ள் சும்மாவேனும் அடிக்காமல் அலறுவதும், உடன் பணிபுரிபவர்களை பொய்சொல்லத் தூண்டுவதும், வாடிக்கையாளர்கள் புழங்கும் இடங்களில் காதல் கடிதத்தை வைப்பதும் எடுப்பதும், படப்பிடிப்பு நிகழும் தளத்தில் எல்லாரும் இருக்க ஆளில்லாத தளத்தில் கடைக்குள்ளேயே சிருங்காரம் செய்வதும், கடையைப் பூட்டிச் சென்ற பின் புதிய ஆடைகளை உடுத்திக்கொண்டு ஆடுவதும் குற்றமாக எடுத்துக்கொள்ளப்படாமல் சகஜமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. வேலை வேண்டுமா இருக்கலாம், தேவையில்லையா விட்டுச் செல்லலாம என்பதாகவேதான் முதலாளியின் நோக்கம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கடைவேலையை விட்டுவிட்டு சினேகாவுக்கு மேக்கப் உதவியாளனாக ஒருவன் போகிறான், இன்னொருவன் அதே தெருவில் கமிஷன் அடிப்படையில் பிளாஸ்டிக் சாமான்கள் விற்கிறான், அந்தப் பெண்ணும் அப்படியே செய்கிறது. முதலாளி அவர்களை தேடிச் சென்று கெடுக்கவில்லை. கடையில் சிருங்காரம் செய்யும் அவர்கள் கடைக்குத் தேவையில்லை என்பதோடு அவரது வேலை முடிந்துவிடுகிறது.

எல்லாமே வாழ்க்கைதான். எல்லா இடங்களிலும் லாபமும் இருக்கின்றன கஷ்டங்களும் இருக்கின்றன. சிரமம்தான், வாழ்ந்துதான் தீரவேண்டும், இலக்கு இருக்கிறதா முன்னேறு, இலக்கு இல்லையா வருவதை ஏற்று வாழ்ந்துபார். நாயகனின் இலக்கு அம்மாவுக்கும் தங்கைகளுக்கும் மூன்று வேளை உணவு, காதலி கால்களை இழந்தாலும் அவளை வைத்துக் காப்பாற்றவேண்டும், இவற்றை அவன் நிறைவேற்றுகிறான். இந்த பாசிடிவ் மெசேஜை நான் இப்படத்தின் முதன்மைக் கருத்தாகக் காண்கிறேன்.

முன்னம் சொன்னதுபோல் திரைத்தனம், கலைத்தனம், உலகத்தர இத்தியாதிகளில் எனக்கு போதிய அனுபவமில்லாததால், வாழ்க்கை, போராட்டம், தன்னிறைவு இவற்றை முன்னிறுத்தி இந்தப் படத்தை அணுகி, இந்தப் படம் அவற்றை நன்றாகவே அடையாளம் காட்டிச் சென்றிருப்பதாக உணர்கிறேன்.

Comments

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...