Skip to main content

அமீரக வலைப்பதிவர் சந்திப்பும் சில எண்ணங்களும்

அண்மையில் சந்தித்த இளைஞர்களின் கடமையுணர்ச்சியும் அணுகுமுறையும் பாராட்டும்படி இருந்தது. இருக்கின்றார்கள்.

*

துபாயில் இருக்கும் கல்லூரி ஒன்றில் நிர்வாகம் பயிலும் மாணவி தனது புறத்திட்டு ஒன்றிற்காக நேர்காணல் எடுக்க வந்திருந்தார்.

'எப்படி என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்' என்று கேட்டேன்.

'எனக்குக் கிடைத்த பட்டியலில் அகரவரிசைப்படி முதலில் உங்கள் பெயர் இருந்தது, நேரம் கேட்டேன் நீங்களும் சரியென்றீர்கள், வந்துவிட்டேன்' என்றார்.

'நீங்கள் ஏதாவது கேட்கிறீர்களா, இல்லை நான் எனது பணி குறித்த விவரங்களைச் சொல்லட்டுமா, உங்களுக்கு எது வசதி', என்றேன்.

'நீங்களே சொல்லுங்கள்' என்றார்.

கால்மணிநேர விவரிப்பிற்குப் பின் 'இது மேலோட்டமான விவரம்தான் இன்னமும் விளக்கமாகச் சொல்லலாமா? இவற்றை உங்களால் கிரகிக்க முடிகின்றதா?' என்றேன்.

'அய்யா, நானும் இது மேலோட்டமாகச் செல்வதாகவே உணர்ந்தேன், எனக்கு இன்னமும் அதிகமான விவரங்கள் தேவை' என்றார்.

அவர் மாணவியா நான் மாணவனா என்று கொஞ்சம் யோசித்து அவருடைய கால்மணி நேரத்தை வீணாக்கிய குற்ற உணர்வில் நுணுக்கமான விவரங்களைப் பகிர்ந்துகொண்டேன். நான் முடித்த பின்னர் பொறுமையாக புன்னகைத்துக்கொண்டே அவர் கேள்விகளைத் துவங்கினார். நல்ல ஆசிரியரால் தயாரித்துத் தரப்பட்ட கேள்விகள்.

துவங்கும்போதே இந்தக் கேள்விகளைத் தொடுக்காமல், என்னைப் பேசவிட்டு இந்த கேள்விகளுக்கான பதில் அவற்றில் இருக்கும் பட்சத்தில் அதனைத் தவிர்த்துவிட்டு மற்ற கேள்விகளைக் கேட்டார். தனது குறிப்புகளை முடித்த பின்னர், 'உங்கள் புகைப்படத்தை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள், எனது அறிக்கையில் அதனைச் சேர்க்கவேண்டும்' என்னும் விண்ணப்பத்துடன் விடைபெற்றார்.

எதிரில் இருப்போரைப் பேசவிட்டு பொறுமையாக அதனைக் கிரகிக்கும் அந்த மாணவியின் திறனையும், அவரைப் பயிற்றுவித்த ஆசிரியரையும் மனதார வாழ்த்தினேன்.

ஏதோ ஒரு நிறுவனத்திற்காக ஒரு நல்ல நிர்வாகி உருவாகின்றார்.

*

சென்ற ஐந்தாம் தேதி துபாயில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் இளைஞர்கள் ஆச்சரியப்படவைத்தார்கள்.

அய்யனார் என்றைக்குமே வியக்கவைப்பார். சூஃபி இசையில் அவருக்கு இருக்கும் ரசனை அதீதமானது. பள்ளிப்பருவத்தில் திருவல்லிக்கேணி ஜமாலியாக்களில் ஹூஹக் ஹூஹூஹக் என்றெல்லாம் ஓசையிட்டு கூட்டாக மனதை ஒருமுகப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனுபவத்தை கேள்வி கேட்கும்படி சூஃபி வழியைச் சேர்ந்தோர் இசைக்கும் ஒலிகளை ரசிப்பார்.

சூஃபி வழிகளில் கொஞ்சம் பழகிப் பார்த்த எனக்கு அதிலெல்லாம் பழகாத இவர் 'எப்படி இப்படி' என்னும் ஆச்சரியம் வருவது சரியானதே.

*

கலையரசன்,
வெங்கடேஷ் கண்ணா
வினோத் கௌதம்
ப்ரதீப்
செந்தில்
சிவராமன் (இவரைப்பற்றி கடைசியில் எழுதுகிறேன்) இவர்களெல்லாரும் எனக்குப் புதியவர்கள், இளைஞர்கள்.

சுந்தர் அவர்களும் புதியவர்.

லியோ சுரேஷ், குசும்பன் சரவணன், ஓவியர் அஷோக், அவருடைய நண்பர் ஜெயக்குமார் இவர்களுடனெல்லாம் ஏற்கெனவே அறிமுகம் இருக்கிறது.

வலைப்பதிவு எழுதுபவர்களுடன் அன்று வலைப்பதிவு எழுதாமல் வாசகனாக இருக்கும் ஒருவரும் கலந்துகொண்டார், அவர் நாகாஸ்.

மேற்சொன்ன இளைஞர்களின் அணுகுமுறைக்கு எனக்குப் பிடித்திருந்தது. வெறுமனே சந்தித்தோம் போனோம் என்றில்லாமல், நாங்களெல்லாம் உரையாடிக்கொண்டிருக்கையில் சட்டென அருகிலுக்கும் கடைக்குச் சென்று ஒரு குறிப்பேடும் பேனாவும் வாங்கிக்கொண்டு வந்தார்கள், ஒவ்வொருவரிடமும் தந்து பெயர், வலைப்பதிவின் சுட்டி, தொலைபேசி எண் இவற்றை எழுதித் தரச் சொன்னார்கள், தனித்தனியாக புகைப்படம் எடுத்தார்கள். அதனை அழகாக இந்தப் பதிவில் இட்டுவைத்திருக்கிறார்கள்.

இந்த அணுமுறையும், வெளிக்காட்டும் திறனும் இவர்களுடைய தொழிலிலும் இருந்து அவர்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும் என்றே நம்புகின்றேன்.

*

சிவராமன் ஆங்கில நாவல் படிக்கத் துவங்கியது எனது வலைப்புவைப் படித்த பின்னர்தான் என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டார். எனது வழமையான பாணியில், 'தலைவா இந்த உட்டாலக்டியெல்லாம் அடிக்காதீங்க' என்றேன். தலைமீது அடித்து சத்தியம் செய்யாத குறையாக குசும்பன் சரவணனை துணைக்கழைத்து விளக்கினார். த ஆஃப்கானும், கைட் ரன்னரும் உங்கள் பார்வையைப் படித்த பின்னரே வாங்கினேன், படித்தேன் என்றார். ஆச்சரியமாக இருந்தது. அவர் அப்படிச் சொன்னது இன்னமும் ஆங்கில அதிவிற்பனைகளை வாசிக்கவும், பார்வையைப் பகிர்ந்துகொள்ளவும் தூண்டியது.

எப்பொழுது ரூட்ஸ், ஷாந்தாராம், க்ரேஸ்டு எல்லாவற்றையும் முடித்து அவை குறித்த பார்வையைப் பகிர்ந்துகொள்வேனோ தெரியவில்லை.

ஏற்கெனவே பாகிஸ்தான் பேப்பர்ஸ் (மணிஷங்கர் அய்யர்) குறித்த பார்வைகளை இன்னமும் எண்ணத்தில் பகிர்ந்துகொள்ளவில்லையென்னும் குறை மனதில் இருக்கின்றது, சல்தாஹை!

சுந்தர் கொண்டுவந்திருந்த ச்சில்லி சாஸ் குறித்து ஏதும் சொல்லாமல் முடித்தால் இந்தப் பதிவு முழுமையடையாது :-) அளவுக்கதிகமாக வடையைத் தின்னவைத்தது இந்த சாஸ்தான்.

Comments

Unknown said…
//எதிரில் இருப்போரைப் பேசவிட்டு பொறுமையாக அதனைக் கிரகிக்கும் அந்த மாணவியின் திறனையும், அவரைப் பயிற்றுவித்த ஆசிரியரையும் மனதார வாழ்த்தினேன்.//

முறையான கல்வி

நன்றி
லேட்டா எழுதினாலும், லேட்டஸ்டா எழுதிட்டீங்களே அண்ணாச்சி! நாளை நேரில் சந்திப்போம்...
நாகா said…
உங்கள் சந்திப்புக்குப் பிறகு, நானும் கிறுக்க ஆரம்பித்து விட்டேன் ஐயா. மனம் நிறைந்த மாலை நேரம் அது..!
இதுக்கு தான் அகர வரிசைல பேர் இருக்குனும்கிறது !!!!???

நாளைக்கும் வந்துடுங்க ... வேற சரக்கு இருக்கு .
அண்ணாச்சி அழகாக எழுதி உள்ளிர்கள்..
:)

நல்லா எழுதியிருக்கீங்க!
அருமையாக எழுதி இருக்கிறீர்கள் அண்ணாச்சி..அதுவும் அந்த சில்லிசாஸ் பற்றி சொன்னது அருமை..

அன்றைக்கு உங்களையெல்லாம் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி..

அது ஓருவருக்கொருவர் அறிமுகமாகும் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் உங்களுடைய பேச்சுக்கள் எங்களுக்கு நிறைய வாசிக்க வேணடும் என்ற உத்வேகம் கொடுத்தது.

அதற்கு முதலில் நன்றி.


பாகிஸ்தான் பேப்பர்ஸ் குறித்த உங்கள் பதிவுக்கு காத்து கொண்டிருக்கிறேன்..
எந்த ஜமாலியாவில் ஹூ ஹூ ஹூக்ஹூ என்று கற்று கொடுக்கிறார்கள் என்று சொல்லுங்களே!

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...