Skip to main content

எழுத்துக்கூடக் கவியரங்கிற்கு எழுதியது

பொன்முட்டை
--------------

மாதமொரு முட்டையிடும் வாத்து நானையா - நல்ல
மஞ்சள்நிறப் பொன்முட்டை திர்ஹம் தானயா
காதவழிப் பாதையிலே தனிமை வெக்கையில் - நான்
கண்பிதுங்கி இட்டமுட்டைக் கதையைச் சொல்லவா

மீசைவரி மேலுதட்டில் காணும் முன்னரே - நானும்
மீனம்பாக்கம் போவதற்கு பெட்டி கட்டினேன்
வீசைவிலை ஆங்கிலமா அரபு உருதுவா - எதுவும்
விளங்காது தமிழ்தவிர முட்டி மோதினேன்

ஏட்டுச்சுரைக் காயெடுத்துக் குழம்பு வைக்கவா - இல்லை
ஏவுகின்ற வேலைசெய்து முட்டை போடவா
வாட்டுகின்ற கேள்வியெந்தன் இடுப்பு ஒடித்தது - அடடா
வளமான முட்டையொன்றை இடமு டிந்தது

வந்தகடன் தீர்ப்பதற்கு இட்ட முட்டைகள் - அங்கே
வாடகைக்கே போதவில்லை அழுகை வந்தது
சொந்தக்கதை சோகக்கதை பழகிப் போனது - எந்த
சோகத்திலும் முட்டையிடும் திறமை வந்தது

அரபுலகா பாரதமா எங்கு காணினும் - யாரும்
இடுவதெலாம் முட்டையன்றி வேறு ஒன்றிலை
இரவுநேர மையிருட்டில் அழுது தீர்ப்பது - அங்கு
இந்தியாவில் கண்டதில்லை இங்கு உள்ளது

இட்டமுட்டை எல்லாமே எங்கு போனது - சுற்றம்
ஈரநெஞ்சப் பாசத்தினால் பங்கு போனது
திட்டமிட்டுப் போட்டதெல்லாம் களவு போனது - யாரோ
தின்றுவிட்ட ஏப்பக்குரல் இங்கு கேட்டது

விட்டகுறை சரியாக்க மீண்டும் கூட்டினில் - நான்
வீழ்ந்துமுட்டை இடுங்கதையை கேட்டல் ஆகுமோ
தொட்டதெல்லாம் பொன்னாகும் பாக்கியத் தினால் - சோற்றுத்
தட்டினிலும் கைவைக்கத் தோற்றல் ஆகுமோ

மாதமொரு முட்டையிடும் வாத்து நானையா - நல்ல
மஞ்சள்நிறப் பொன்முட்டை திர்ஹம் தானயா
காதவழிப் பாதையிலே தனிமை வெக்கையில் - நான்
கண்பிதுங்கி இட்டமுட்டைக் கதையைச் சொல்லவா

*

கவியரங்கில் எனது சார்பில் இதனை வாசித்த நண்பர் ஷாஜஹானுக்கு நன்றிகள்.

*

Comments

:-)) :-)) :-))
ஆசாத், இப்படியெல்லாம் எழுதினதைப் படிச்சு ரொம்ப நாளாச்சு.

எழுதும்போது நீங்க உங்க சோகத்தை நெனச்சு எழுதிருக்கலாம், ஆனால் எனக்கு சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்கிறது. படிச்சுட்டு, Post a Comment link க்ளிக் பண்ணி, இந்த கமென்ட்டை தட்டச்சடிக்கும் வரையிலுமும் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன். குறைஞ்சது Publish Your Comment click பண்ற வரைக்குமாவது இந்த சிரிப்பு அடங்காது போலருக்கு. பின்னிட்டீங்க பின்னி.

இது மாதிரி இன்னும் நிறைய எழுதிப்போடுங்க. தமிழிணையம் சுத்தமாகும். :-)
இனிய கலையரசன்,

துபாயில்தான் இருக்கிறேன். தொடர்புகொள்ளலாம்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...