Skip to main content

தலைக்கவசமும் இன்னும் சிலவும்

பதினான்கு ஆண்டுகள் வளைகுடா நாடுகளில் ஹோண்டா சிவிக் முதல் டொயோட்டா அவலோன் வரை பல சீருந்துகளை (cars) ஓட்டிய பின்னர், சென்ற மாதத்திலிருந்து இன்றோடு நான்காவது வாரமாக சென்னையின் சாலைகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் ஓட்டுகின்ற அனுபவம் வாய்த்திருக்கிறது.

தலைக்கவச விதி கட்டாயப்படுத்தப்பட்டாலும் தளர்த்தப்பட்டாலும் அது குறித்து ஏதும் பாகுபாடின்றி தலைக்கவசத்துடன் வண்டி ஓட்டும் 'பழம்' அல்லது 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா' வகையைச் சேர்ந்த ஜீவராசிகளுள் ஒருவனாக இருப்பதில் எந்தவிதமான தாழ்வு மனப்பான்மையும் கொள்ளாத நூற்றுக்கணக்கான சராசரி இந்தியக் குடிமகன்களுள் ஒருவனாக, குறிப்பிட்ட பாதை, குறிப்பிட்ட நேரம் என்றில்லாமல், நகரின் பல சாலைகளில் பல வேளைகளில் இருசக்கரத்தில் சுற்றியதில் கிடைத்த அனுபவத்தால், தலைக்கவசம் அணிவதால் மட்டுமே இருசக்கர வாகன ஓட்டியின் உயிருக்கு பாதுகாப்பு கிடைத்துவிடுகின்றதா என்னும் மிகப்பெரிய கேள்வி மனதிற்குள் எழுகின்றது.

தலைக்கவசம் அணியவேண்டும், அதில் எந்தவிதமான சமாதானத்திற்கும் இடமில்லை. ஆனால், தலைக்கு வரும் ஆபத்திற்கும் மேலாக இருசக்கர வாகனஓட்டிகளுக்கு இன்னும் எந்தெந்த விதங்களில் ஆபத்துகள் வரலாம் என்பதன் பட்டியல் நீள்கிறது.

குழு தானிகள் என்னும் ஷேர் ஆட்டோக்கள்:
அவெஞ்சரில், தண்டர்பேர்ட்டில் படுத்தமாதிரியான பாணியில் கடற்கரைச் சாலையில் பயணம் செய்யும் பெசண்ட் நகர், நீலாங்கரை வரையறா மேட்டுக்குடி வாசஸ்தலங்களிலிருக்கும் இருசக்கர வாகனஓட்டிகளுக்குப் பரிச்சயமில்லாத விவகாரம் இது.

கத்திப்பாரா சந்திப்பில் நடந்துகொண்டிருக்கும் பாலக் கட்டுமானப் பணிகளுக்கிடையே நெளிந்து, கிண்டி தொழிற்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், டி.எம்.எஸ், என எங்கு நோக்கினும் மக்கள் கூட்டத்தையும் வாகனக் கூட்டத்தையும் மட்டுமே கண்டு பழகிப்போன மத்தியதர இருசக்கர வாகனஓட்டிகளுக்கு மிகவும் பரிச்சயமான விஷயம் இது.

நந்தம்பாக்கம், பட்ரோடு போக்குவரத்து நெரிசலில் நீந்தி வந்த களைப்பில், கத்திப்பாரா சந்திப்பு தாண்டியதும் கிண்டியை நோக்கி விர்ரெனெ கிளம்பத் துடிக்கும் மனதுடன் வண்டியை விரட்டுவோரின் திறனைச் சோதிக்கும்படியாக வலப்புறமிருந்து சரேலென இடப்புறத்திற்கு மஞ்சள் நிற ஷேர் ஆட்டோக்கள் பாயும். உள்ளிருந்து யாரோ ஒருவர் இறங்குமிடத்தைச் சொல்லியிருக்கவேண்டும் அல்லது உள்ளே அடைத்த பயணிகள் போக இன்னமும் இரண்டு மூன்று பயணிகளை அடைத்தாலும் தப்பில்லை என்னும் எண்ணம் ஷேர் ஆட்டோ ஓட்டுனருக்குத் தோன்றியிருக்கவேண்டும். காரணம் எதுவாக இருப்பினும் பாய்ச்சலின் பாணி ஒன்றுதான். தனக்கு இடது பக்கத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பயணியின் உடலை லேசாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வளைந்து இடப்பக்கம் ஒரு பார்வை. வண்டிகள் ஏதும் வருகின்றனவா என்று பரிசோதிப்பதற்காக அல்ல அந்தப் பார்வை; நான் எனது போக்கில் வருகிறேன், நீ ஒதுங்கிக்கொள் என்று சொல்வதற்காக அந்தப் பார்வை. ஆட்டோ ஓட்டுனர் பார்க்கிறாரோ பார்க்கவில்லையோ, பாய்ச்சலிலிருந்து தப்பிக்கும் வழியை இருசக்கர வாகன ஓட்டிகள் உடனடியாகத் தெரிவு செய்யவேண்டும்.

உந்துதலைக் (த்ராட்டல்) குறைத்து வழி விட்டு வலப்புறம் ஒதுங்கிக்கொள்வதோ, ஆட்டோவுடன் சேர்ந்து தானும் இடப்புறம் ஒதுங்கி பிறகு வெளியே வருவதோ, கொஞ்சம் பின்னே பார்த்து நிற்பதான பாவனையில் வண்டியை ஓட்டுவதோ, ஏதோ ஒன்றை சமயோசிதமாகப் பார்த்து செய்துகொள்ளவேண்டும். சமயயோசிதமும், பிற்செயல்பாடும் (reaction) சரியாக அமையவில்லையென்றால், "இன்னா வண்டி ஓட்ற நீ, லெஃப்ட்ல வலிச்சு ஒதுங்தெர்ல உனுக்கு டூவீலர் கேக்குதா" என்னும் அறிவுரையைக் கேட்கத் தயாராகிக்கொள்ளுங்கள்.

சீருந்துகளின் அடாவடி நிறுத்தங்கள் என்னும் ராங் பார்க்கிங்:
அசோக் நகர் பகுதியிலிருந்து நுழைந்து பிருந்தாவன் வழியாக ஆர்யகவுடாவையெல்லாம் கடந்து துரைசாமி வாராவதியின் கீழ் சென்று போத்தீஸை வலப்பக்கத்தில் தொட்டு, உஸ்மானுக்குள் நுழைய உலகைச் சுற்றி மீண்டும் போத்தீஸை இடப்பக்கத்தில் தொட்டு உள்ளே நுழையலாம் என ஆசையாக வரும்போது வசதியாக முன்னே நான்கைந்து மகிழுந்துகள் 'பீங் பாங்' ஒலியோ அல்லது மோசமான முறையில் டிஜிடைஸ் செய்யப்பட்ட ஏதோ மெகா ஹிட் பாடலின் வர்ணமெட்டையோ ஒலித்தபடி மஞ்சள் விளக்குகள் கண்சிமிட்ட அக்கடாவென நின்றிருக்கும். பற்றாக்குறைக்கு கதவுகள் திறக்கப்பட்டு என்.ஆர்.ஐ. மக்கள் தண்ணீர் புட்டியைக் கையில் பிடித்தபடி உடலை வளைக்கக் கஷ்டப்பட்டு இறங்கிக்கொண்டிருப்பார்கள். நேற்று வரையில் டொயோட்டா காம்ரியிலோ, ஷெவர்லேயிலோ வசதியாக சென்று வந்திருந்தவரை வத்திப்பெட்டி வடிவத்துக்குள் அடைத்து எடுத்து வந்தால் பாவம் அவர் அப்படித்தான் இறங்குவார், அவரைக் குற்றம் சொல்லி ஏதுமில்லை. இதற்கிடையில் 'ஆவட்டும் ஆவட்டும்' என போக்குவரத்துக் காவலர் விரட்டுவதால் சுற்றுலாச் சீருந்து (tourist car) ஓட்டுனர் நெளிய, பட் பட்டென கதவுகள் மூடப்பட்டு சீருந்து புறப்படும் வரையில் பொறுமையாகக் காத்திருக்கவேண்டியதுதான்.

கொஞ்சம் பொறுமையை இழந்து வலப்புறம் சரிந்து புறப்படும் இருசக்கர வாகனத்தார், முன்பக்கத்தில் வழி தாராளமாக இருந்தாலும் தவறாமல் தலையை பக்கவாட்டில் திருப்பிப் பார்ப்பதை தவமாகச் செய்து முடித்து அதிகவனத்துடன் இருசக்கர வாகனத்தை நகர்த்த எத்தனிக்கவேண்டும். ஏனென்றால், நம்மைப் போலவே பொறுமை இழந்து யாரேனும் த்ராட்டலை முறுக்கிக்கொண்டு 'லெட்அஸ் வ்ரூஊஊம்' (Let us vrrroom) என வந்துகொண்டிருக்கக்கூடும்.

ராங் சைடு என்னும் எதிர்த்திசை வருகை:
எந்தவிதமான விதிமுறைகளுக்குள்ளும் அடங்காமல் வெளியே காலை நீட்டிக்கொண்டிருக்கும் கடைகள், அவற்றின் முன்னே நிற்கும் வண்டிகள், இவற்றோடு கட்டில் மெத்தை, கட்டடச் சாமான்கள் விற்கும் கடைகளில் சரக்கு ஏற்றும் / இறக்கும் சுமையுந்துகள் (trucks), இவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டு, இரண்டு பேருந்துகள் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட சாலையில் ஒன்றேகால் பேருந்துகளே போகலாம் என்னும் நிலை. அநேகமாக சென்னையின் எல்லா சாலைக்கும் இது பொருந்தும்.

அப்படியான பொருத்தங்களுள் ஒன்றான வளசரவாக்கம் - ஆழ்வார்திருநகர் பகுதியில் பிரதான சாலையில், ஒன்றேகால் பேருந்திற்கே நியதியாக்கப்பட்ட பாதையில், ஒரு பேருந்திற்கான இடத்தை விட்டுவிட்டு, பொறுமையாக தனக்குக் கிடைத்த கால் பகுதியில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் நிச்சயம் ஏமாளிகள். ஏனென்றால், விடப்பட்ட அந்தக் கால் பகுதியில் எதிர்த்திசையில் பொறுமையாக 'மீன் பாடி' வண்டியில் பழுப்பேறிய தண்ணீர்க் கொள்கலன்களை (water containers)ஏற்றிக்கொண்டு ஒரு தொழிலாளி வந்துகொண்டிருப்பார்.
நான்கு கடைகள் தள்ளி இரண்டாம் மாடியில் இருக்கும் அலுவலகத்தில் இரண்டு கலன்களை இறக்கிவிடச்சொல்லி அவரது முதலாளி கைத்தொலைபேசியில் சொல்லியிருக்கக்கூடும். சரியான திசையில் சுற்றி வந்து தருவதற்குள் தாவு தீர்ந்துவிடும். அப்படியே பின்னே 'ராங் ஸைடில்' ஒரு அழுத்து அழுத்தினால் இரண்டு நிமிடம். இதனால் பாதிக்கப்படப் போவது அவர் அல்லவே; அப்பாவியாக ஒழுங்கான திசையில் வந்துகொண்டிருக்கும் இருசக்கரவாளர்தானே.

இதனால், இருசக்கரங்கள் ஓரமாக ஒதுங்கிப்போகவேண்டும் என்னும் நினைப்பே அற்று, ஆற்காடு சாலையில் பேருந்துகளின் முன்னும், மகிழுந்துகளின் முன்னும் சீறிப் பாய்ந்து செல்கின்றன. கொக்கித் திருப்பங்களில் (U turn) திரும்புவதற்காக, சைகையைத் (indicator) தட்டிவிட்டு அது 'பீப் பீப்' என ஒலிக்க சீரான வேகத்தில் பேருந்தின் முன்னே சென்று, திருப்பத்தின் இடைவெளியில் திரும்புவதைத் தவறென்று சொல்ல முடியாது. ஆனால், செல்வதே ஓரமாகச் செல்லாமல் நான்கு சக்கர வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் இருசக்கர வாகனங்களை ஓட்டுமளவிற்கு இருசக்கரவாளர்களைத் தள்ளுவதில் பெரும்பங்கு வகிப்பவை இந்த எதிர்த்திசை வருகைகளும், ஆக்கிரமிப்புகளும்.

"அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்" என்று பேசவரவில்லை. அப்படி பேருந்துகளின் முன்னே செல்கையில், எப்போதாவது உடனடியாக இருசக்கர வாகனம் நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டால்?.....

வழி கொடு என்பது இங்கே வழி எடு:
இருசக்கரம், நான்குசக்கரம், மிதிவண்டி, தானி, சுமையுந்து என எல்லாரும் சரியாகச் செய்கின்ற தவறு இதுவாகத்தான் இருக்கமுடியும்.

அதாவது, கிளைச்சாலையிலிருந்து பிரதான சாலையில் இணையும்போது 'நில் - கவனி - செல்' (சென்னை பாணியில் 'ஆல்ட்டன்கோ') என்று ஒரு செய்கையை யாருமே கடைப்பிடிப்பதில்லை. பிரதான சாலையில் வருபவர்தான் பார்த்து நிறுத்தி வரவேண்டும்போல் இருக்கிறது. இணைகின்ற கிளைச்சாலையில் வாகனம் வருவது தெரிகின்றபட்சத்தில் ஆபத்து தவிர்க்கப்படலாம். ஆனால், அதுவே கொஞ்சம் உள்ளடங்கி இடக்கு மடக்கான இடத்தில் இணைகின்றதென்றால் குறிப்பிட்ட பாதையில் பழக்கப்பட்ட அனுபவசாலி ஓட்டுனர் மட்டுமே ஆபத்தை அறிவார். மற்றவர்கள் கொஞ்சம் நிறுத்தி, தடுமாறி ஒதுங்கியெல்லாம் சாகசங்கள் செய்துதான் இடரிலிருந்து தப்பிக்கவேண்டும்.

இப்படியாக ஒரு பெருந்தவறு சாதாரணமாக ஆயிரக்கணக்கான ஓட்டுனர்களால் செய்யப்படுகிறது. தொடர்ந்த செய்கையினால் அதுவே சரியென்றும் கொள்ளப்பட்டுவிட்டது. போக்குவரத்து விளக்குகள் இருந்தாலே பிழைத்தோம், இல்லையென்றால் ஒவ்வொரு சந்திப்பிலும் யாராவது நுழைகின்றார்களா என எதிர்பார்த்துக்கொண்டே ஓட்டுவது சென்னையில் ஒரு அங்கம்.

'நில் -கவனி - செல்' என்பது வழி கொடுப்பதற்காக, இங்கே கொடுப்பதென்பது கிடையாது; எடுப்பதுதான்.

*****
மேற்சொன்னவையல்லாமல்

பாதசாரிகள்,

வளைந்து நெளிந்து பறக்கும் சக இருசக்கரவாளர்கள்,

நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு சைகைகளே இல்லாமல் வலப்புறம் ஒதுங்கும் தானிகள், சீருந்துகள், பேருந்துகள்,

பாதிச் சாலையை ஆக்கிரமித்து கொக்கித் திருப்பத்தில் நின்று பயமுறுத்தும் சுமையுந்துகள்,

சிகப்புத் துணி கட்டாமல் சுமையுந்திலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகள்,

இப்படியாக, இன்ன சில ஆபத்துகளுடன் இன்னொரு ஆபத்தாக தலைக்கவசமில்லாததும் தேவைதானா?

தலைக்கவச விதி கட்டாயப்படுத்தப்பட்டாலும் தளர்த்தப்பட்டாலும் அது குறித்து ஏதும் பாகுபாடின்றி தலைக்கவசத்துடன் வண்டி ஓட்டும் 'பழம்' அல்லது 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா' வகையைச் சேர்ந்த ஜீவராசிகளுள் ஒருவனாக இருப்பதில் எந்தவிதமான தாழ்வு மனப்பான்மையும் கொள்ளாத நூற்றுக்கணக்கான சராசரி இந்தியக் குடிமகன்களுள் ஒருவனாக...
அன்புடன்
ஆசாத்

Comments

அராதா said…
எழில்மிகு சென்னையின் போக்குவரத்து அழகுகளை எழுத்து வடிவில் அற்புதமாக எடுத்துக்காட்டி எம்மை இலவச சுற்றுலா அழைத்து சென்றமைக்கு மிக்க நன்றி.

அராதா.
இந்த கத்திப்பாரா பாலம் எப்போது முடிவடையுமோ தெரியவில்லை.இங்கு பயண்படுத்தப்படும் தொழிற்நுட்பம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்க வேண்டியது. :-((
வடபழனியில் இருந்து தாம்பரம் போக நினைக்கும் போது இப்போது இருக்கும் சந்திப்பை போல் மிக பயங்கரமானது எதுவும் இல்லை.இங்கு சமிக்கை விளக்குகள் கிடையாது அதனால் மற்ற திசையில் இருந்து வருபவரின் ஒத்திசையுடன் உள்ளே புகவேண்டும்.
இங்கு மனிதாபிதம் நன்றாக வெளிப்படும்.
Jazeela said…
எது எப்படியோ நீங்க தலைக்கவசம் போட்டு போங்க அதுதான் நல்லது. ;-)
அன்புடையீர் ,

வரவிற்கும் பின்னூட்டிற்கும் நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்
பல பேரின் ஆதங்கம் உங்க மூலம் வெளிப்பட்டிருக்கு

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...