Skip to main content

சவூதி பெண் பத்திரிகையாளர்

வியாழன் வெள்ளிகளில் சாவகாசமாக ஃபூல் தமீஸோ (மொச்சைக்கொட்டையும் ரொட்டியும்), ஷுக்ஷுக்கோ (முட்டை பொடிமாஸ்) தின்றுவிட்டு, இரட்டை இலை (அரசியல் இல்லைங்க, ரெண்டு டீ பேக் போடறது) தேநீர் குடிக்கும்போது அரப் நியூஸ் செய்தித்தாளை விரிப்பேன்.

முதல் பக்கத்தில் ரியாத்தில் சுடப்பட்ட அல்கொய்தா தீவிரவாதியையும், கடைசிப் பக்கத்தில் கெய்ரோ ரோட்டரி கிளப் கிளியோபாட்ராவில் புன்னகைத்து நமது புன்னகை அரசி / இளவரசிகளுக்கெல்லாம் சவால் விடுகின்ற எகிப்திய நடிகை அர்வாவையும் ஒதுக்கிவிட்டு இன்றைக்கு லுப்னா ஹுசைனின் (Lubna Hussain) கட்டுரை ஏதும் வந்திருக்கிறதா எனப் பார்ப்பதும் வழக்கம்.

லுப்னா ஹுசைனின் முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சும்மாவேனும் இடையில் ஓரிரண்டு வரிகளை மேலோட்டமாகப் படித்துவிட்டு / கேட்டுவிட்டு ஜல்லியடிக்கும் மக்களை லுப்னா நையாண்டி செய்திருந்தார்.

'லுப்னா, உங்கள் மூதாதையர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களென நினைத்தேன்'

'உண்மைதான். எனது முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்'

'இல்லையே, எனது நண்பன் நீங்கள் தாய்லாந்திலிருந்து வந்தவர் எனச் சொன்னாரே'

'தாய்லாந்தா..நானா..கிடையாதே'


விஷயம் இதுதான். தன்னைப்பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில் லுப்னா தான் பிறந்த ஊரைக் குறிப்பிட்டிருக்கிறார். தைவானில் பிறந்ததால் நான் 'மேடு இன் தைவான்' என்று எழுத, அதனை அரைகுறையாக ஏதோ அவசரத்தில் படித்தவர் இவரை 'தாய்' எனப் புரிந்துகொண்டு பூர்வீகத்தையே மாற்றியிருக்கிறார்.

(Arab News 23.12.2005)

சுட்டி

இன்னொரு கட்டுரையில் மற்றவர்களை சரிசமமாக மதிக்காமல் நடக்கும் தனது மக்களைப் பார்த்து சில கேள்விகளை முன்வைத்தார். அமெரிக்கத் தூதரகத்தில் சவூதி ஒருவர் தரக்குறைவாக நடத்தப்பட்டதற்கு தூதரகம் மன்னிப்புக் கேட்டதைக் குறிப்பிட்டு, 'இதே போல் ஒரு தொழிலாளி இந்தியர் சவூதியின் நடத்தை குறித்து கேள்வியை எழுப்பியிருந்தால், அவருக்கு இந்த பதில் போலல்லாமல் மாறுபட்ட பதில்தான் கிடைத்திருக்கும்' என்று எழுதிவிட்டு, அடுத்த பத்தியில் 'ம்ம்..கோபமாக சில விரல்கள் என்னைத் துரோகியாகச் சித்தரித்து விசைப்பலகையைத் தட்டுவது காதுகளில் ஒலிக்கிறது'

என்பதான நையாண்டி வேறு.

(Arab News 16.12.2005)

சுட்டி

லுப்னா ஹுசைன், அபீர் மிஷ்காஸ், நூரா, என பெண் பத்திரிகையாளர்கள் ஒருபுறமும், சேம்பர் ஆ·ப் காமர்ஸ் பதவிகளில், பொறியாளர் சங்கத்தின் பதவிகளில், ஆங்கில வானொலியின் பதவிகளில் என நிர்வாகப் பொறுப்புகளில் ஒருபுறமுமாக அடிக்கடி பத்திரிகைகளில் சவூதி அரேபியப் பெண்மணிகளின் செய்திகள், கட்டுரைகள் நிறைய புகைப்படங்களுடன் பதிவாகின்றன.

ஜித்தா நகரின் வடக்கே நூறு பில்லியன் ரியால் செலவில் உருவாகும் வர்த்தக நகரின் செய்திகளுக்கும் (1 பில்லியன் ரியால் = 266 மில்லியன் அமெரிக்க டாலர்), ஏறுமுகமாகவே இருக்கும் பங்குச் சந்தை (TASI - The Tadawull All-Share index) செய்திகளுக்கும் இடையே பெண்மணிகளின் செய்திகளும் போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றன.

அன்புடன்
ஆசாத்

Comments

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...