Skip to main content

Raincoat

ரெயின்கோட்

"சொல்லி வச்சிருந்தீங்கள காக்கா, ரெயின்கோட் வந்திருச்சு" என கடைக்காரர் சொன்னதும் நமது 'ஏய்' 'அட்டகாசம்' சமாச்சாரங்களை ஒதுக்கிவிட்டு இதனைக் கொண்டுவந்தேன்.

'ஓ.ஹென்றியால் ஈர்க்கப்பட்டோம்' என்று கடைசியில் சொல்லி அவரைக் கவுரவிக்கிறார்கள்.

சிக்கலில்லாத எளிமையான கதை. அவனும் அவளும் ஒரு நேரத்தில் காதல் கொண்டிருக்கிறார்கள். மத்தியதரக் குடும்பம், பெற்றோரை எதிர்த்து அவளால் எதுவும் செய்யமுடியவில்லை. அவனுக்கும் யாரையும் எதிர்க்க மனமில்லை. அவள் திருமணமாகித் தன் வழியே செல்கிறாள். அவர்களது காதல் அவர்களைத் தவிர யாருக்கும் தெரியாமல் போகிறது.

மனோஜ் - அஜய் தேவ்கன்
நிரோ - ஐஷ்வர்யா ராய்

ஆறேழு வருடங்களுக்குப் பின் இருவரும் சந்திக்கிறார்கள்.

கணவன் சரியாக அமையாததால் இருக்கும் துக்கத்தை அவள் மறைத்து, வேலை சரியாக அமையாமல் நஷ்டப்பட்ட துயரத்தை இவன் மறைத்து, இருவரும் சந்தோஷமாக வாழ்வதாகவே ஒருவர் மற்றொருவரிடம் கதை அளக்கிறார்கள். கால் அரை மணிநேரம் இருவரும் தனியாக இருக்க, உண்மையான விவரம் இருவருக்குமே தெரியவருகிறது.

தனது ஒரே சேமிப்பை அவளுக்குத் தெரியாமல் அவன் தந்து கடிதம் எழுதிவைக்கிறான். அவளோ தனது ஒரே நகையை அவனுக்குத் தெரியாமல் அவனது ரெயின்கோட்டில் வைத்து, கடிதமும் வைக்கிறாள். இவ்வளவுதான் கதை.

இயக்குனர் கோஷ், வங்காளியர். தேப்கள், முகர்ஜிக்கள், தத்தாக்கள் எனப் படம் நிறையத் தொழில் நுட்பக் கலைஞர்கள் வங்காளியர்களே. கல்கத்தா மெயிலில் (ஹவ்ரா மெயில்?!?!) அனில் கபூர் சுற்றிய கோல்கத்தாவோ, மகாநதியில் கமல் சுற்றிய கோல்கத்தாவோ இதில் நிச்சயமாகக் கிடையாது. ஷ¤பா முத்கல் பின்னணி பாட லேசாக ஹவ்ரா பாலம் காண்பிக்கிறார். கதை கல்கத்தாவில் நிகழ்வதைக் காட்ட இந்தக் காட்சி ஒன்று மட்டுமே.
மற்றபடி வசனத்தால்தான் கதை வங்காளத்தில் நடப்பது தெரியும்.

இரண்டு காட்சிகள் தவிர மற்ற எந்த வெளிப்புறப் படப்பிடிப்பும் கிடையாது. அனைத்தும் வீட்டிற்குள் நிகழ்பவை. அவையும் ஒரு மதிய நேரத்திற்குள் நடப்பவை.

மனோஜ் - நிரோ இருவரின் உரையாடல்களுக்கிடையே அவர்களது காதல் காலக் காட்சிகள் ·ப்ளாஷ் பேக்காக வருகின்றன. ஒரே அறை மங்கிய வெளிச்சம். இயல்பான உரையாடல். எல்லை மீறாத வசனங்கள். அற்புதம் (எனக்கு).

மனோஜ் கொஞ்சம் கூச்சப்படும் பையன்.

"நிரோ அந்தப் படம் வயது வந்தவர்களுக்கு மட்டும். யோசிச்சுக்கோ"

"ஏன் மனோஜ், உனக்கு எதுவும் பிரச்சனையா"

"எனக்கு எதுவுமில்லை. அக்கம் பக்கத்துல யாராச்சும் பாத்தா என்ன
சொல்வாங்க"

"நீ அக்கம் பக்கத்துக்குப் பயப்படறியா, உன் மேல உனக்கு நம்பிக்கை இல்லியா. சரி, இந்தப் பட்டனை போடு சரியாப் பொருந்த மாட்டேங்குது"

அவன் தயங்கித் தயங்கி கரங்களை நீட்டி..

"இல்லை நிரோ, என்னால் முடியாது" என திரையை விலக்கிவிட்டு வெளியே வருகிறான்.

நம்மைக் கொஞ்சங்கூட நெளிய வைக்காமல் இந்தக் காட்சியைப் படமாக்கியிருக்கும் இயக்குனரைப் (கோஷ்) பாராட்ட வேண்டும்.

தால்ஸே தால் மிலா - ஐஷ்வர்யாவை எதிர்பார்த்து இந்தப் படத்திற்குச் செல்லும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள். சுமாரான சேலை, கலைந்த
கூந்தல், இயல்பான வடக்கத்திப்பாணியில் வலது தோளில் முந்தானை இருக்க, ஓலை விசிறியை விசிறிக்கொண்டே, 'சொல்லு மனோஜ்' என்னும் அட்டகாசமான 'அடுத்த வீட்டுப் பெண்' பாத்திரம்.

சில நிமிடங்களே வந்து போகும் அன்னு கபூர் கலக்கியிருப்பார். "ஐயா, கதவைத் திறக்கிறீர்களா, ஒன்றுக்கு அவசரமாகப் போகவேண்டும். உங்கள்
வீட்டுக் கழிப்பறையை நான் உபயோகிக்கலாமா" எனக் கேட்கும் அசல் வங்காளியர் போன்ற பாத்திரம்.

அஜய்யின் (மனோஜ்) பணக்கார நண்பனின் மனைவியாக வரும் மௌலி கங்குலி இன்னொரு கலக்கல். "என்னோட செல்·போன நீ வச்சிக்க" என்பது முதல் "அடுத்த முறை பாத்ரூம்ல அழுதியானா ஷவரைத் தெறந்து விட்டுக்கோ" என்பதாகட்டும், சாப்பாட்டு வேளையில் செல்லில் தொடர்பு கொண்டு, "சாப்பிட்டாயா" எனக் கேட்பதாகட்டும், கடைசிக் காட்சியில் ஐஷ்வர்யாவின் (நிரோ) கடிதத்தையும் நகையையும் ரெயின்கோட்டிலிருந்து எடுத்து வந்து தருவதாகட்டும், கலக்கிவிட்டார். வடக்கத்திய நகரவாசி 'பாபி'க்கள் (bhabi - அண்ணி) இப்படித்தான் சகோதர பாசத்தைப் பொழிவார்கள்.

நல்ல கதை, ஊர்கின்ற உரையாடல்கள், ஆரவாரமில்லாத ஆனால் அழுத்தமான காதல், இப்படியான பல கலைப் பட சமாச்சாரங்கள் இருப்பதால், ஷாகித் கபூரின் 'யே தில் மாங்கே மோர்' பார்க்கச் செல்லும் ரசிகர்கள் 'ரெயின்கோட்' பக்கம் வரமாட்டார்கள்.

நல்ல படம்...வெற்றிப்படமா என்பது சந்தேகமே.

அன்புடன்
ஆசாத்

Comments

Anonymous said…
I was impressed with the stills.

I induced me to see the movie.

akkinikunchu