Skip to main content

மொஹலே ஆஜம்

மொஹலே ஆஜம்


தீபாவளி வெளியீடு இந்திப் படங்களில், 'எத்தராஸ்' பிரியங்கா சோப்ராவுக்கும், 'வீர் - ஸாரா' ப்ரீத்தி ஜிந்தாவுக்கும் போட்டியாக மதுபாலா நிற்கிறார் என்பதில் உண்மையும் இல்லாமலில்லை.


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதில் வெளியான கே. ஆசி·பின் மொஹலே ஆஜம் மீண்டும் திரையிடப்படுகிறது. ப்யார் கியாத்தோ டர்னா க்யா பாடல் மட்டும் வண்ணத்தில் படம் பிடிக்கப்பட்டு மற்றதெல்லாம் கருப்பு வெள்ளையில் இருந்ததை மாற்றி, அனைத்தையும் வண்ணமயமாக்கி வெளியிடுகிறார்கள். அன்றைக்கு ஒன்றரை கோடி ரூபாய்கள் பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம்.


மொஹலே ஆஜம் பார்த்த பின்னர், அதுவே நான் பார்த்த இந்திப் படங்களில் மிகவும் நேர்த்தியானது என்று சொல்லத் தயங்குவதில்லை. ஆரம்பக் காட்சியில் "ஜலாலுத்தீன் மொஹம்மத் அக்பர்" என்று முழங்கும் சிம்மக் குரலிலிருந்து, கடைசிக் காட்சியில் "ஜில்லே இலாஹி! ஜில்லே இலாஹி" எனப் பரபரக்கும் கிழவியின் குரல் வரையில் ஒவ்வொரு காட்சியாக பல நேரங்களில் அசை போட்டதுண்டு.


சலீம், பிள்ளைப் பிராயத்திலேயே ராணி ஜோத்பாயைப் பிரிந்து போர்ப்பயிற்சிக்கும் தொடர்ந்து போர்க்களத்திற்கும் சென்றுவிடுகிறான். போரில் வென்று அந்தப்புரத்திற்கு ராணியைப் பார்க்க வருகிறான். ராணி, கண்களை மூடிக்கொண்டு அவனது முகத்தில்தான் விழிப்பேன் என்று இருக்க, அவன் சிறுபிள்ளையாக இருந்தபோது இருந்த உயரத்தில் முகத்தை வைத்துக்கொண்டு, "சலீம்! வந்து விட்டாயா என் மகனே" என விழிகளைத் திறக்கிறார். மகனின் உயரத்தைக் கண்டு வியந்து, "மகனே வளர்ந்துவிட்டாயடா".. பலமுறை இந்தக் காட்சியைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.


அக்பராக பிரித்விராஜ் கபூரின் கம்பீரம், "ஜோ ஹம் கஹ்தேன் ஹை, வஹ் கானூன் ஹோத்தா ஹை" (நான் என்ன சொல்கிறேனோ அதுவே சட்டம்) என்ன குரல், என்ன கம்பீரம்.


திலிப் குமார் இந்தப் படம் முழுக்க ஒருவிதமான கோபத்தையும் முரட்டுத்தனத்தையும் முகத்தில் வைத்திருப்பார். காதல் காட்சிகளில் கூட அந்த முகத்திலிருந்து கோபத்தை மாற்றாமல் இருப்பதை அந்தக் காலத்தில் மக்கள் ரசித்திருக்கவேண்டும். "ஷிவா ஜீ மார்சி இவன் வர் ஆள்தாண்டா" (சிவாஜி போல நடிப்பில் இவர் ஒருவர்தான்) என்று படம் பார்த்தபோது அருகிலிருந்த உருதுப் பெரியவர் சொன்னது பசுமையாக நினைவில் இருக்கிறது.


இரவு நேரத்தில் தான்சேன் பாடும்போதுதான் அக்பர் தன்னைமறந்து இசையில் மூழ்கியிருப்பார். அதுவே தாங்கள் சந்திக்க சரியான நேரம் என்பதால் சலீமும் அனார்கலியும் சந்திக்கும் காட்சிகளில், பின்னணியில் தான்சேனின் குரலாக படேகுலாம் அலி கான் பாட, இன்றைக்கு திரையில் காணப்படும் 'நெருக்கம்' இல்லாமலே சிருங்காரத்தைக் காட்டிய காட்சி.


கலி = மலர், அனார் = மாதுளம், அனார்கலி = மாதுளம்பூ.


சலீமிற்கும் அனார்கலிக்கும் இருக்கும் நெருக்கத்தை, சலீமை மணமுடிக்கவிருக்கும் 'பஹார்' அரண்மனையில் சொல்லும்போது, "இப்போதெல்லாம் மாதுளம்பூக்கள் அந்தப்புரத்தில் அதிகமாகப் பூத்துக் குலுங்குகின்றனவே". எதிரான (நெகடிவ்) கதாபாத்திரத்தில், திமிர் தலைக்கேறியபடியான பாத்திரத்தில் நடித்திருக்கும் ஷஷிகலாவை என்ன சொல்வது!


ப்யார் கியாத்தோ டர்னா க்யா பாடலுக்காகப் போடப்பட்ட அரங்கம் நீண்ட நாள்களாக பொருட்காட்சியைப் போல மக்கள் வந்து பார்த்துப் போனதாக இருந்ததாம்.


"சுப்னா சக்கேகா இஷ்க் ஹமாரா சாரோன் தர·ப் ஹை உன்கா நஸாரா" என்னும் வரிகளில், மதுபாலா (அனார்கலி) சுழல்வது க்ரா·பிக்ஸ் சமாச்சாரங்கள் இல்லாமல் சின்னச்சின்னக் கண்ணாடிகளில் பிரித்வி ராஜ்கபூரின் (அக்பர்) அருகிலும் தலைக்கு மேலும் பிரதிபலித்தது பேசப்பட்ட ஒளிப்பதிவாம். (இக் காட்சியைப் படமாக்கியவர் ஒளிப்பதிவாளர் அல்லாமல், இயக்குனர் கே.ஆசி·பே என்பது கூடுதல் வதந்தி)


ப்யார் கியா தோ டர்னா க்யா என்னும் அந்தப் பாடலை அதே வர்ண மெட்டிற்கு வார்த்தைகள் வருகின்றவகையில் மொழிமாற்றம் செய்தேன். இதே படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலான 'தேரி மெஹ்·பில்மே கிஸ்மத்தே ஆஸ்மாக்கர் ஹம் பி தேக்கேங்கே' என்னும் பாடலின் மொழிபெயர்ப்பும் அதனைச் சார்ந்த கட்டுரையும் ராயர் காப்பி க்ளப், மரத்தடி, இரண்டிலும் இருக்கின்றது. மரத்தடி டாட் காமும் அந்த மொழி மாற்றத்தையும் கட்டுரையையும் வலையேற்றி கவுரவித்தது.


*
பாடல்:
ப்யார் கியாத்தோ டர்னா க்யா
கவிஞர்: ஷகீல் பதாயுனி
இசை: நவ்ஷாத்


பாடல்
காதல் கொண்டேன் அஞ்சிடுவேனோ!
காதல் கொண்டேன் அஞ்சிடுவேனோ!
காதல் கொள்வ(து) ஒன்றும் குற்றமில்லையே - வாழ்விலே!
காதல் கொள்வதொன்றும் குற்றமில்லையே
அச்சம் கொண்டே கெஞ்சிடுவேனோ!
காதல் கொண்டேன் அஞ்சிடுவேனோ!


எந்தன் நெஞ்சிலே இன்பத்தின் கோவை
என்னைக் கொல்லுமோ ஊரார் பார்வை
மாந்தர் இறப்பது மண்ணில் புதிதா
மனம் நடுங்கிடும் வஞ்சியும் நானோ!
காதல் கொண்டேன் அஞ்சிடுவேனோ!


மன்னன் நினைவு மனத்துள் விரியும்
மங்காத் தீபம் அரங்கில் எரியும்
காதலில் வாழ்வேன்! காதலில் வீழ்வேன்!
கவலை கொண்டே துஞ்சிடுவேனோ!
காதல் கொண்டேன் அஞ்சிடுவேனோ!


கொண்ட கனவை மூடுதற்கில்லை
கொற்றவன் ஒற்றில் நாற்புற எல்லை!
ஆண்டவன் அறியாக் காதலும் உண்டோ
மானிடர் அறிய மருள்வவது(ம்) ஏனோ!
காதல் கொண்டேன் அஞ்சிடுவேனோ!


*


அன்புடன்
ஆசாத்

Comments

Anonymous said…
Congrats azad bai, for the new blog

Suresh Kannan
Welcome.. Konjam Font sari pannungalen!
Anonymous said…
interesting, Azad. With all that great music, Naushad could not win that year's filmfare award which went to Shankar Jaikishan. Each song is a masterpiece. Especially 'Sarkar-e-Madhina', Kab Din Ayo, Piyar Kiay to darna kya, mori panghat pe .. each set to a classic Hindustani ragha - Kedar, bhupal, piloo etc.

Your translation is lucid and absorbing. Pl continue the good work.

Do you have the entire script and dialogue (Kamal Amrohi, was he not in charge of that dept?)?If so, pl provide extracts.

rgds,
era.mu
நண்பர்கள், சகோதரிகள் அனைவருக்கும் நன்றிகள்.

இன்னும் வலைப்பூ கலாசாரம் சரியாகப் பயிலவில்லை. மற்றவர்களின் எழுத்துகளைப் படித்த்து வருகிறேன். சிலர் பின்னூடுகளுக்குபதில் எழுதுகின்றார்கள்.

நான் நன்றி சொல்வதில் துவங்கியிருக்கிறேன்.

அன்புடன்
ஆசாத்
Anonymous said…
M.Siraj GAC
Kathalin malarum ninaivugal. Vazhga
Balaji-Paari said…
kali endraal mottu endru padithirunthen..ithu matroru poruLo(arththamo)?
தலைவா,

கலி, மொட்டுதான். கலியான் அப்படீன்னு பன்மைல சொல்றப்ப blossomனு போட்டிருக்காங்க. கலின்றது நிச்சயமா மொட்டுதான். ஆராதனாவுல ஒரு பாட்டு வரும்,

குன்குனாரரேஹை பவ்ரே கில்ரஹீன் ஹை கலி கலி
வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்டு மொட்டுகள் மலர்கின்றன.

மொழிமாற்றத்துல அதை பூன்னு சொல்லியிருக்கேன். ஏன்னா, படத்துல அனார்கலியோட பேரு சில இடங்கள்ள பூவச் சொல்றாமாதிரி வந்தது. ஆனாலும், கலிக்கு பூன்னு அர்த்தம் போட்டது கொஞ்சம் அதிகந்தான். மன்னிக்கணும்.

அன்புடன்
ஆசாத்
Balaji-Paari said…
Ayyoo, neenga vera...periya vaarththai ellaam sollikittu..

Intha pataththa patri sonnathukku romba nandrigal...

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...