Skip to main content

சென்னையிலும் ஆடுகளச் சேவல்கள்

ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு ஆறரை மணிக்குள்ளாக உயர்நீதிமன்றத்திலிருந்து பொடிநடையாக பிரகாசம் சாலை என்றழைக்கப்படும் பிராட்வேக்குள் நடக்கவேண்டும். ஆற்காடு லூத்ரன், சி.எஸ்.ஐ., வெஸ்லி இங்லிஷ் என ஒவ்வொன்றாக தேவாலயங்களைக் கடந்து சென்றதும் இடப்புறமாக அரசு வணிக வளாகம் விரியும், அதிலிருந்து நான்கைந்து தப்படிகள் நடக்குமுன் வலப்புறம் இனாமல் பெயர்ப் பலகையுடன் பூம்புகார் பதிப்பகம் தெரியும்.

பதிப்பகத்தைத் தாண்டியவுடன் தொட்டடுத்து வரும் இடப்பக்கம் திரும்பினால் அது அம்மன் கோயில் தெரு - பிராட்வே. அதனுள் நுழைந்ததும் இன்றைய இளங்கதாநாயகர்களின் வெற்றிப்படங்களின் சுவரொட்டிகளுக்கு அருகில், அந்தக் கதாநாயகர்கள் பிறப்பதற்கு முன்பே வெளியான வாத்தியார் திரைப்படச் சுவரொட்டிகள் ஒன்றிரண்டாவது கண்ணில் தெரியும்.



அப்படி சுவரொட்டிகள் தெரிந்தால்தான் சரியான இடத்திற்குள் நுழைவதாகப் பொருள். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சரியப்படத் துவங்கலாம்.

”அது லவ் பேர்ட்ஸ் சார்”

”கன்னியாஸ்த்ரி வோணும்னா பக்கத்துக் கடைலக்குது பார்”


(இந்தப் படம் மட்டும் இங்கிருந்து நன்றிகளுடன் சுட்டது)

”அதுவா, அது ஜேக்கபின். இதுக்கே சொல்றிய, ஒரு சிலது வரும் பாரு முடிய வெட்டிவுட்டாத்தான் தீனியே துன்ன முடியும் அதால”

இப்படியான வசனங்கள் கேட்கக் கிடைக்கும்.

அனைத்தும் வெளிநாட்டு செல்லப் பறவைகள். உள்நாட்டுப் பச்சைக்கிளியோ, மைனாவோ கண்ணில்படாது, அவற்றை விற்கத் தடை இருக்கிறதாம். சைக்கிள்களில் குடிசை வியாபாரம் போல் சின்னச்சின்ன கூண்டுகளில் பறவைகள் இருப்பதால் ஏதோ மின்கடை வியாபாரமோ என்னும் நினைப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவர்கள் சொல்லும் விலை. ஆயிரம் என்பது சாதாரணம். செல்லப் பறவைகளில் துவங்கி கொஞ்சம் உள்ளே போனால் தெருவெங்கும் மேனகா காந்திக்கு சவால் விடும்படியாக நாட்டுக் கோழிகள் சேவல்கள்.

எங்கோ பிரியாணியாகவோ குருமாவாகவோ ஆகப்போகும் பறவைகளுக்கு செல்லப்பிராணிகளுக்கான விலை இல்லை, அதே சமயம் பிராய்லரைப்போல மலிவும் கிடையாது. பிராய்லர்கள் இந்தச் சந்தைக்கு வருவதே கிடையாது. அறுப்புக் கோழிகள் உள்நாட்டுச் சரக்காக இருக்கலாம் போலிருக்கிறது, செல்லப்பறவை வகைகளில் உள்நாட்டுப் பறவைகள் விற்கத் தடை.

கூட்டநெரிசலில் நீந்தி தெருவின் கோடிவரை சென்றால் தீவன மண்டி. மண்டி என்றால் ஏகப்பட்ட பெரிய மண்டி கிடையாது. எண்பதுக்கு முப்பது அளவில் பெரிய கான்கிரீட் வராண்டா. இரண்டு பக்கமும் பறவைத் தீவனங்கள் மட்டும், மருந்துக்கும் வேறு பொருள்கள் கிடையாது. இன்னமும் சென்னைக்குள் மின்னணு எடைக்கருவி எட்டிப் பார்க்காத இடம் இது. வியாபாரம் படிக்கணக்கில்தான் நடக்கிறது. சின்ன வயதில் விளையாடிய கவண் கிடைக்கிறது. குருவிக்காரப் பெண் நம்பிக்கையோடு கடைவிரித்து பத்திருபது கவண்களை அடுக்கிவைத்து உட்கார்ந்திருந்தார். கவண் கடையருகில் யாரும் நிற்கவில்லை.



தெருவில் வலப்புறம் திரும்பும் குறுக்குத் தெருவில்தான் உண்மையான ஆச்சரியம் இருந்தது. ஆடுகளம் திரைப்படத்தால் சண்டைக் கோழிகளுக்கான களம் மதுரை மட்டுமல்ல சென்னையும் என்று சிலர் கையில் சண்டை சேவல்களை வைத்து நிரூபித்துக்கொண்டிருந்தார்கள்.



திரையில் கண்ட சண்டைச் சேவல்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத கோபப் பார்வை பார்க்கும் சண்டைச் சேவல்கள். காலின் மேலே துருத்திக்கொண்டிருக்கும் நகம்தான் இதன் ஆயுதம் என்று விவரம் தெரிந்தவர் சொன்னார்.

வடசென்னை மட்டுமல்ல மத்தியசென்னையும் ஒவ்வொரு முறை செல்லும்போதும் வியக்கவைத்துக்கொண்டேயிருக்கிறது. இன்னமும் சென்னையை சரியாகப் பார்த்து அனுபவிக்கவில்லை.

மால்களும், சினிப்ளெக்ஸ்களும், ஈசிஆரும், ஓஎம்ஆரும், தி.நகரும், விரியும் புறநகர்க் குடியிருப்புப் பகுதிகளும், சனிக்கிழமை ஆங்கில தினசரிகளை நிறைத்து வரும் அடுக்குமாடிக்குடியிருப்புகளும் மட்டுமே சென்னை கிடையாது என்னும் எனது நினைப்பு வலுப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

Comments

அருமை ஆசாத் ஜி
அட! நம்ம ஏரியா. நன்றி. :-)
பாத்து பரவசபட்டதை பத்தி பத்திபத்திய எழுதியாச்சி ஆனால் நம்ம நாய்மார்களைப் பத்தி ஒன்னு எழுதலையே!