Skip to main content

சீனி கம் - எனது பார்வையில்

இடதுகைப் பழக்கமும், நடக்கையில் சற்றே சரிந்திருக்கும் இடதுபுறத்தோளும், ஓடும்போது இருக்கும் கம்பீரமுமாக எழுபதுகளில் டான் திரைப்படத்தில் பார்த்த அதே அமிதாப், முப்பதாண்டுகளுக்கும் மேலாகியும் இன்னமும் வசீகரம் குறையாமல் சீனி கம் திரைப்படத்தில். தமிழில் டப்பிங்கோ, ரீமேக்கோ செய்தால் 'உனக்கு 34 - எனக்கு 64' என்று பெயர் வைப்பார்களோ? அந்த அளவிற்கு வயதிற்கு முக்கியத்துவம் கொடுத்து வசனங்களை எழுதியிருக்கிறார்கள்.

அமிதாப், தபு, பரேஷ் ராவல் என மூன்று பேர்களை மையப்படுத்தியும், சற்று வெளியே சென்று ஸொஹ்ரா சைகலை இணைத்து கொஞ்சம் நகைச்சுவையையும், சமையற்காரர்களை இணைத்து கொஞ்சம் நகைச்சுவையையும், பெண்குழந்தை ஒன்றையும் கதையில் இணைத்து கொஞ்சம் அழுகையையும் சேர்த்து மிகக்குறைவான கதாபாத்திரங்ளுடன் அமைந்து குடும்பத்துடன் அமர்ந்து (ஒரே ஒரு காட்சியில் கொஞ்சம் மட்டுமே நெளிந்து, மற்றபடி வேறெங்கும் நெளியாமல்) பார்க்கக்கூடிய நல்ல பொழுதுபோக்கான திரைப்படம்.

லண்டனில் சொந்தமாக இந்திய உணவகம் வைத்திருக்கும் கண்டிப்பான முதலாளி (தலைமை சமையல்காரர்), 64 வயதாகியும் பிரம்மச்சாரியாக இருக்கும் புத்ததேவ் சாஹேப் (அமிதாப்). ராணுவ ஒழுங்கில் தனது உணவகத்தை நடத்தும் புத்தா சாஹேபின் 'ஹைதராபாதி ஸாஃப்ரானி புலாவ்' மண்ணின் மணத்தில் சமைக்கப்படவில்லை, அதில் தவறுதலாக இனிப்பு போடப்பட்டிருக்கிறது என புலாவைத் திருப்பி அனுப்பும் 34 வயது பெண், நீனா. தனது தலைமையில் அனைத்தும் ஒழுங்காகத்தான் நடந்திருக்கும் என்னும் நம்பிக்கையில், நீனாவிற்கு இந்திய கலாசாரமும் தெரியாது, உணவும் தெரியாது என பொரிந்து தள்ளுகிறார் புத்ததேவ். அடுத்த நாள் புத்ததேவின் சமையற்கட்டிற்கு 'ஹைதராபாதி ஸாஃப்ரானி புலாவ் கொடுத்தனுப்படுகிறது, சமைத்தவர் நீனா. அப்பொழுதுதான் தனது சமையற்கட்டில் உப்பிற்கும் சர்க்கரைக்கும் இடையே நடந்த குளறுபடியில் புலாவில் இனிப்பு சேர்ந்திருப்பதை அறிந்த புத்ததேவ் தனது தவறை உணர, புத்ததேவ் - நீனா சந்திப்பில் இருவருமே கொஞ்சம் கொஞ்சமாக காதல் வயப்படுகிறார்கள்.

நீனாவைப் பெண்கேட்பதற்காக தில்லிக்கு வருகின்ற புத்ததேவ், நீனாவின் தந்தையால் (பரேஷ் ராவல்) நிராகரிக்கப்படுகிறார். 64ம் 34ம் சரியாகாது என அவர் சொல்ல, நீனா கேட்காமலிருக்க, அவர் உண்ணாவிரதம் இருக்க, கடைசியில் அவர் மனம் மாறி புத்ததேவ் - நீனா திருமணத்திற்கு சம்மதிக்கிறார், சுபம். இடையில் கிளைக்கதையாக இந்தியத் திரை உலகிற்கு மிகவும் பழகிப்போன புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்குழந்தையின் கதையும் இணைக்கப்பட்டுள்ளது.

*

அறுசுவை அரசு அவர்கள் ஏதோ ஒரு சமையற்கலை நிகழ்ச்சியில் தாளிக்கும்போது போடவேண்டியவற்றை வரிசைக்கிரமம் மாறாமல் போடவேண்டும் எனச் சொல்லியதாக நினைவு. இங்கே அமிதாப் சொல்கிறார். தனது சமையல்காரர் வெங்காயத்தை முதலில் போட்டுவிட்டு பிறகு மற்ற பொடிகளைப் போடுவதைப் பார்த்துவிட்டு, அதை குப்பையில் கொட்டிவிட்டு கோபத்துடன் செய்முறை விளக்கத்தை அளிக்கும்போதும், மேலே சொன்ன ஸாஃப்ரானி புலாவின் செய்முறை விளக்கத்தை ரசனையுடன் சொல்லும்போதும், நமக்கு சஞ்சீவ் கபூர், யோங், ஆதித்யன் என தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமைத்துக்காட்டும் ஆண்களெல்லாம் நினைவிற்கு வந்துபோகிறார்கள்.

'லண்டன் நகரை நம்பவேண்டாம், அடிக்கடி தூறல் போடும். எனது குடையை எடுத்துச் செல்லுங்கள். ஆனால், இப்படி ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் குடை கொடுத்து அனுப்பிக்கொண்டிருந்தால் கட்டாது. அதனால், குடையத் திருப்பித் தர இன்னொருமுறை வாருங்கள்' என்று சொல்லும்போது அமிதாப் வழிகின்ற வழிசல், கடலைபோடுவதற்கு வயது ஒன்றும் பெரிய காரணி கிடையாதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. இருவரும் காதல் வயப்பட்டு இடையில் கொஞ்சம் ஊடல் வரும்போது, தபு, 'உங்கள் குடையை அந்தக் குப்பைத் தொட்டியில்தான் போட்டிருக்கிறேன், எடுத்துக்கொள்ளுங்கள்' என்று சொல்வதும், அமிதாபின் சமையல்காரர்கள் 'வோ சத்ரி வாலி' (அதான் குடை வாங்குன பொண்ணுப்பா), இப்படியாக குடை ஒன்றும் கதாபாத்திரங்களுடன் இணைந்துபோகின்றது.

வயதானாலும் இளமையாகத்தான் இருக்கிறேன் என காட்டிக்கொள்ள நம்மைச் சுற்றி அறிந்த வட்டாரங்களில் நடக்கும் சின்னச்சின்ன நிகழ்ச்சிகள் சிலவற்றை பெரிய திரையில் அமிதாபிடம் பார்த்து ரசிக்கலாம்.

தபு:
'உங்களுக்கு தூரப்பார்வையா? கிட்டப்பார்வையா?'

அமிதாப்:
'பார்வைக் குறைபாடெல்லாம் கிடையாது. இது டிசைனர் க்ளாஸஸ், வெர்சஸ் (versace)'

[நிச்சயமாக வசனத்தில் குளறுபடி அல்லது வெர்சஸில் அது பழைய டிசைன். ஏனென்றால், படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து http://www.alldesignereyewear.com/Catalog/Versace.html சுட்டிக்குச் சென்று சமீபத்திய டிசைன்களைத் தேடினால், நூற்றுக்கு மேற்பட்ட டிசைன்களில் திரைப்படத்தில் அமிதாப் அணிந்திருக்கும் டிசைனைக் கண்டுபிடிக்க முடியவில்லை]

அமிதாபின் அம்மாவாக நடித்திருக்கும் சொஹ்ரா சைகலுக்கு இப்படி புலம் பெயர்ந்த இந்தியத் தாயாக நடிப்பது கைவந்த கலை. தூர்தர்ஷனில் தொடராக வந்த 'தந்தூரி நைட்ஸ்'சில் லண்டனில் உணவகம் வைத்திருக்கும் மகன் சயீத் ஜாஃப்ரியிடம் தன்னை ஜலந்தருக்கு திருப்பி அனுப்பி வைக்கும்படி சண்டைபோடுவார். இதில், ஒவ்வொரு நாள் இரவும் அமிதாப் வேலையிலிருந்து வந்ததும் வராததுமாக 'உடற்பயிற்சிக்கூடத்திற்குப் போ' என விரட்டும் வம்படியான அம்மாவாக.

ஸ்பைஸ்-6 உணவகத்தின் முதலாளி வீட்டிற்கு வந்து அம்மா சுட்டு வைத்திருக்கும் காய்ந்த ரொட்டிகளைப் பார்த்து, 'காய்ந்த பரோட்டாவ சப்பாத்தின்னு சொல்லி வூட்ல ஏமாத்துவாங்க' என்று முணுமுணுக்கும்போதும், அம்மா செத்துப்போவேன் என்றதும் அவரைப் பார்த்து, 'ஆஹ்ஹா, நீ மட்டும் செத்துப்போனா அந்த ரெஸ்லிங் சேனல யாரு பாக்றது? சேனல மூடவேண்டியிருக்கும். செத்துபோகாத' என்று சீண்டும்போதும் தெறிக்கின்ற மெல்லிய நகைச்சுவை படம் முழுதும் இப்படியான ஒருவரிப் பேச்சுகளால் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. ஆனால், இதையே தொழில்முறை நகைச்சுவை நடிகர்கள் நீட்டி முழக்கி முகத்தைச் சுழித்து ரசிகர்களைப் பார்த்து பேசினால் ரசிக்க முடிவதில்லை. காரணம், அமிதாபின் ஆளுமையா அல்லது கதையோடு சாதாரணமாக செயற்கைத் தன்மையில்லாமல் உரையாடலை அமைத்திருப்பதா என விளங்கிக்கொள்ள இயலவில்லை.

தபுவின் மேல் தனக்கிருக்கும் காதலைச் சொல்லி பெண்கேட்பதற்காக வந்த இடத்தில் ஒவ்வொரு உரையாடலிலும் தனது வயோதிகம் சுட்டிக்காட்டப்படும்போது வழிவதும், ஒருவழியாக படாரென தனது காதலைச் சொல்லி பரேஷ் ராவலுக்கு அதிர்ச்சியைத் தருவதும், காதலை எதிர்த்து சத்தியாகிரக உண்ணாவிரதப் போராட்டத்தை முறியடிக்க தில்லி நிஜாமுத்தீன் கோழி பிரியாணியை வாங்கி வருவதும், இப்படியாக ஒவ்வொரு காட்சியிலும் அமிதாபின் நகைச்சுவையை வாய்விட்டு சிரித்து ரசிக்கலாம்.

ஆள் அரவமில்லாத குதுப்மினாரில் தூண்களின் பின்பக்கமாக கையை இணைக்க அமிதாப் முயற்சி செய்வதும், ஸொஹரா சைகல் வந்து அவரது கையை இணைத்து வைப்பதும், உடனே தபுவிடம் இருந்து செல்பேசி அழைப்பு வருவதும், குதுப்பின் தூண்களின் பின்னால் கைகளை இணைத்தால் நினைத்தது நடக்கும் என்ற ஐதீகம் வென்றதுபோலிருக்கும் பட்சத்தில் உடனே அடுத்த அழைப்பில் லண்டனில் பக்கத்து வீட்டுக் குழந்தை புற்று நோயால் இறந்த செய்தி கிடைத்து, குதுப்பின் தூணில் மீண்டும் கைகளை இணைக்க அமிதாப் முயல்வது, அதனைத் தொடர்ந்த அழுகை இவை சினிமாத்தனங்களே. சல்தாஹை.

ஆழமான காதல் நீ அங்கே நான் இங்கே பாணி பாடல்களெல்லாம் இல்லாமல், லைலா - மஜ்னூன் ஜல்லிகளெல்லாம் இல்லாமல், காதல்...அவ்வளவுதான். அதில் நகைச்சுவையைக் கலந்து சொல்லியிருக்கிறார்கள். அரங்கை விட்டு வெளியே வந்தபின்னும் நீண்ட நேரத்திற்கு தபு அமிதாபை அழைக்கும் செல்லப் பெயரான 'காஸ்-பூஸ்' (இலை-தழை, அதாவது, சைவம் சாப்பிடுபவர்) காதில் ஒலித்துக்கொண்டிருந்தது, ராஜாவின் பாடல்களும்தான்.

ஏ சென்டர்களில் நன்றாக ஓடக்கூடிய படம்.

*

இன்று அண்ணா சாலையில் ஸ்பென்சர்ஸ் அருகே அமுல் வெண்ணெயின் விளம்பரத்தில் சீனி கம்மினைக் கொணர்ந்துவிட்டார்கள். அவர்களின் வாசகம், 'சீனி கம் - பட்டர் ஸியாதா' (சக்கர கம்மி - வெண்ண ஜாஸ்தி).

*

அன்புடன்
ஆசாத்

Comments

விமரிசனம் வழக்கம்போல் உங்கள் பாணியில் அருமையா இருக்கு. இன்னும்
எனக்குக் கிடைக்கலை இந்த சீனி.

பதிவுக்குச் சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி இப்போ.
நீங்கதான் பொருத்தமானவர் இதுக்குப் பதில் சொல்ல.

ராஜ்பப்பரும் ஸ்மிதா பாட்டீலும்( இப்படித்தான் நினைவு) ஒரு விட்னஸ் ப்ரொட்டெக்ட்
திட்டத்தில் ஊருறாப் போவாங்களே அது என்ன படம்? வில்லன் கண்டு பிடிச்சுக்கிட்டே வருவான். வெவ்வேற
பேரில் வெவ்வேற ஊரில் னு படம் போகும். ரொம்ப சுவாரசியமான கதை இல்லை?

ஆமாம். ச்சென்னையில் என்ன? விடுமுறையா இப்ப?
இனிய துளசியக்காம்

சய்யென்று திரைப்படம் நினைவிற்கு வரவில்லை. வந்ததும் எழுதுகின்றேன்.

அன்புடன்
ஆசாத்
இவன் said…
இளசு பற்றி என்னமும் கொஞ்சம் எழுதி இருக்கல்லாமே??
சீனி கம் ல இளைய ராஜாவின் இசை பற்றி எதுவும் சொல்லும் படி இல்லையா? மவுனராகம் படத்தில் வந்த ஹிட் பாடலான மன்றம் வந்த தென்றலுக்கு மீண்டும் அப்படியே ஹிந்தியில் போட்டு இருக்கிறார். மற்றவையும் பொதுவா அவர் பாட்டை அவரே ரீமிக்ஸ் பண்ணாப்போலவே இருக்கு.
Anonymous said…
அருமை..நானும் பார்க்கலாம் என நினைத்தேன்