பரிதியாக வந்த ஆர்யா வெள்ளைக்காரப் பொம்மையின் தலையை உடைப்பது எத்தனையாவது கர்லாக்கட்டை சுற்றில்? எழுபதோ எழுபத்தைந்தோ சரியாக நினைவில் இல்லை, ஆனால், அந்த எண்ணிக்கையை எழுபத்தைந்து என எனது மனம் பதிவுசெய்துகொண்டது. அப்படிப் பதிவு செய்தபோது எனது திறன் முப்பத்தைந்து சுற்றுகள். ஒரே ஒரு 2.5கிலோ கர்லாக்கட்டை இருப்பதால், வலம் முப்பத்தைந்து இடம் முப்பத்தைந்தென சுற்றுகள் முடிக்க ஒன்றரை முதல் இரண்டு நிமிடங்களாகும். இரண்டு நிமிடம் ஓய்வு, பிறகு அதே முப்பத்தைந்து முப்பத்தைந்து. பிறகு அடுத்தடுத்த பயிற்சிகள். இப்படி ஒழுங்காக இருந்த பயிற்சியில் திடீரென மாற்றம் வந்ததன் காரணம் பரிதியின் (ஆர்யாவின்) சுற்றுகள் எழுபத்தைந்தென மனதில் பதிந்துபோனதுதான். முப்பத்தைந்தை எழுபத்தைந்தாக்க மனதிற்குள் சவால். இரண்டிரண்டு நாள்களுக்கு ஐந்து சுற்றுகள் வீதம் ஏற்றிக்கொண்டே சென்றேன். அறுபதை எட்டினேன். அறுபதில் நான்கைந்து நாள்கள் கழித்தேன். எந்தச் சுணக்கமும் இல்லாமல் அறுபது சுற்றுகள் முடிப்பது பெரிதாகத் தோன்றவில்லை. தோள் பழக்கப்பட்டுவிட்டது. ஒழுங்காக அதில் ஓரிரு வாரங்கள் தொடர்ந்துவிட்டுப் பின்னர் இலக்கு எண் எழுபத்தைந்தை நோக்கி ஐந்த...